இந்தியாவை சீனா சீண்டுவது ஏன்?


இந்திய-சீன எல்லைப் பகுதியில் லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரையில் சுமார் 3,500 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அமைக்கும் சாலைகள் சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.
சர்சைக்குரிய எல்லைப் பகுதியில் சாலை, விமானப் போக்குவரத்தில் இந்தியாவின் கட்டமைப்பு வசதிகள் எதிர்காலத்தில் தங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும் என்ற மனப்போக்கில் சீனா உள்ளது.
இதனால், இந்தியா அமைத்துள்ள 225 கி.மீ. நீளமுள்ள தர்பூக்-ஷ்யோக்-தவுலத் பேக் ஹோல்டி எனப்படும் டிபிஓ (DPO) சாலைக்கு துணைச் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.


காரகோரம் கணவாயில் நிறைவடையும் இச்சாலையால், எல்லையில் உள்ள தப்சாங் மற்றும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிகளை இந்திய துருப்புகள் மிக எளிதில் சென்றடையும் என்பதும் சீனாவின் அச்சத்துக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், லடாக், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பழைய விமான தளங்களை சீரமைத்து பிரம்மாண்ட போர் விமானங்களை இந்தியா இறக்கி பார்த்துள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான 16,164 அடி உயரத்தில் அமைந்துள்ள டிபிஓவில் உள்ள இந்திய விமான இறங்குதளம் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அகாசி சின்னுக்கு மிக அருகே இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், சீனாவின் போன்காங்காக் ஏரியில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சீனாவின் ராணுவ விமானதளம் விரிவுப்படுத்துவதை உறுதி செய்யும் சாட்டிலைட் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அத்துடன் அப்பகுதியில் ராணுவ விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்களும் நிறுத்தப்பட்டிருக்கும் படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


அத்துடன் லடாக் எல்லையில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருவதோடு, சிக்கிம், அருணாசலப் பிரதேசங்களிலும் வீரர்களை குவித்து வருவதும், பதுங்குக் குழிகள், சாலைகள் போன்ற கட்டமைப்புகளில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபடுவதும் இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதிலுக்கு இந்திய ராணுவமும் சீன ராணுவத்தினருக்கு நிகராக வீரர்களை குவித்து வருகிறது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளதாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், இரு நாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாலும் இன்னமும் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


கொரோனா அச்சத்துக்கிடையே சீனா இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது ஒரு பதற்றத்தை ஏற்படுத்தவே தவிர போர் தொடுப்பதற்காக அல்ல என்பதை இந்திய ராணுவமும் உணர்ந்துள்ளது. இதனால்தான் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தி வருவதோடு கட்டமைப்பு வசதிகளையும் தொடர்கிறது மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு.

பிரதமர் ஆலோசனை
லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை ஜெனரல் பிபின் ராவத் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னதாக, ஜெனரல் ராவத் மற்றும் மூன்று உயர் அதிகாரிகள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து லடாக்கின் கள நிலவரம், ஆயுதப்படைகளை நிலைநிறுத்துதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் மீது தயாராக உள்ள படைகள் குறித்து விளக்கினர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.