கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு: மத்திய உள்துறை அமைச்சம்


புதுதில்லி: இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர இதர பகுதிகளில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் 4-ஆம் கட்ட ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் ஜூன் 8 முதல் உணவு விடுதிகளைத் திறக்கவும் உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது.
நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு 3 கட்டங்களாக தளர்த்தப்படும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 30 வரை ஊரடங்கு தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இரவு நேர ஊரடங்கு உத்தரவு இரவு 9 முதல் அதிகாலை 5 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.

சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள் திறப்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். மாநில அரசுகள் கல்வி நிறுவனங்கள் குறித்து பெற்றோருடன் ஆலோசித்து முடிவெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.