வருமான வரி கணக்குத் தாக்கல் காலக்கெடு மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு-நிர்மலா சீதாராமன்


புதுதில்லி: 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31 இறுதி நாளாக இருந்தது. தற்போது அந்த காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது:
2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத்தாக்கல் செய்ய ஜூலை 31 இறுதி நாளாக இருந்தது. ஆனால் தற்போது அந்த காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 30-ம் தேதி வரை காலக்கெடு உள்ளது.
வியாழக்கிழமை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50,000 கோடி அளவுக்கு பணப்புழக்கம் இருக்கும்.
கட்டுமானத் திட்டங்கள்
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவுக்காலம் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. புதிதாக பதிவு செய்யும் திட்டங்களுக்கும் பதிவுக்கால நீட்டிப்பு பொருந்தும்.
வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் ரூ.30,000 கோடி வழங்கப்படும். தேசிய நிதி மேம்பாடு கழகத்துக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி செலுத்தப்படும்.
ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்பட மாட்டாது.
வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக ரூ.50 ஆயிரம் கோடி
வழங்கப்படும். மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.