மீண்டும் எழுச்சி பெற நம்பிக்கையுடன் காத்திருக்கும் தோல் தொழில்

கட்டுரையாளர் :  கெளரி குமாரன்

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.  அன்னிய செலாவனி ஈட்டும் முக்கிய தொழில்களில் தோல் தொழிலும் ஒன்றாக கருதப்படுகிறது.   தோல் தொழில் ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் அன்னிய செலாவனி இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

பன்னாட்டு அளவில் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் மூலப் பொருட்களுக்கான தேவையில் மாட்டுத் தோல் 20 சதவீதமும், ஆட்டுத் தோல் 11 சதவீதமும் இந்தியாவிலிருந்து உற்பத்தியாகின்றது. இந்தியாவில் ஆண்டுக்கு 3 பில்லியன் சதுர அடி தோல் மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.   இத்தொழிற்சாலைகள் மூலம் சுமார் 4.42 மில்லியன் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.   இந்தியாவில் சுமார் 3,500 தோல் பதனிடும், ஷூ மற்றும் ஷூ உதிரி பாகங்கள் உள்ளிட்ட தோல் தொழிலுக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

தமிழ்நாட்டில் தோல் தொழிலில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடந்தாலும், வேலூர்  ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை ஆகிய பகுதியில் இத்தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இப்பகுதியில் மட்டும்  200க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் மற்றும் ஷூ தொழிற்சாலைகள் உள்ளது.  இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1.75 இலட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.   பெண்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதால் மக்களிடையே பணம் நடமாட்டம் இல்லை. வாகன உற்பத்தி, ஜவுளி போன்ற தொழில் நிறுவனங்கள் மிகவும் தேக்க நிலைக்கு தள்ளப்பட்டதை போல தோல் தொழிலும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது.  தொழில் கடந்த 4 வருடங்களாக இறங்கு முகத்தில் செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் பொருளாதார மந்த நிலை மட்டுமல்லாது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியும், உற்பத்தி செலவு அதிகரிப்பு, மேலைநாடுகளில் தோல் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பது போன்ற காரணங்களால் தோல் தொழில் வர்த்தகம் நாளுக்குநாள் சரிந்து கொண்டே வந்தது.

தோல் பொருட்கள் ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை பகுதியில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஹாங்காங், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷ்யா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது அந்தந்த நாடுகளில் தோல் உற்பத்தியிலும் இறங்கி விட்டதாலும், அங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் அதனால் இந்திய தோல் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் சில ஆண்டுகளாக சரிவு ஏற்பட்டு வருகிறது.

தோல் தொழில் சரிவுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு,  தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுற்றுச்சூழலுக்கு மாசுக்கேடு ஏற்படுத்துவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடைமுறைபடுத்தி வரும் கடுமையான விதிமுறைகள், உலக நாடுகளில் விரும்பும் காலமாற்றத்திற்கு ஏற்ப புதுமையான வடிவமைப்புகளை தயாரிக்காத நிலை, இந்திய கால்நடைகள் வளர்ப்பில் உள்ள குறைகள் போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது.

மேலும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. புதிய விதிமுறைகளை பின்பற்ற முடியாமல் ஏற்படும் நெருக்கடி, தோல் கழிவுநீரை சுத்திகரிக்க அதிகரிக்கும் செலவினம், மின்கட்டணம் உயர்வு, உற்பத்தி விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பல சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது. சில பெரிய, பெரிய தொழிற்நிறுவனங்கள் கூட இதனை நடத்த முடியாமல் கைவிடும் நிலைக்கு சென்றுவிட்டனர்.

இதுபோன்று தோல் தொழிலில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் தோல் தொழிலில் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் தைவான், வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேஷியா, ஆப்ரிக்க நாடுகள் ஆகிய பகுதிகளில் தோல் தொழிலுக்கு உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் அந்தநாடுகளில் தோல் மற்றும் தோல் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றது. அதனால் பல நாடுகள் தங்களுக்கு தேவையான தோல் பொருட்களை விலைகுறைவான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாகவும் இந்திய தோல் தொழில் மந்தமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கரோனா நோய் தொற்று தாக்குதலால் நிலைக்குலைந்த தோல் தொழில் :

தற்போது உலகம் முழுவதும் கரோனா நோய் தொற்று பாதிப்பால் தோல் தொழில் கடும் வீழ்ச்சியடைந்து நிலைக்குலைந்து போயுள்ளது..  உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் இந்தியாவிலிருந்து தோல் மற்றும் தோல் பொருட்களை இறக்குமதி செய்கின்றன.  அத்தகைய நாடுகளிலும் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தோல் பொருட்கள் ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதால் விற்பனை நடைபெறவில்லை.    அதனால் ஏற்றுமதியும் குறைந்து தற்போது ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.  ஏற்கெனவே தங்களுடைய நாடுகளுக்கு தேவையான தோல் பொருட்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்த வெளி நாடுகளும் தற்போது அதை ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளன.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதிக்காக அனுப்பப்பட்ட சரக்குகளும் கரோனை நோய் தொற்று பாதிப்பு காரணமாக அந்தந்த நாடுகளுக்குள் கொண்டு செல்ல முடியாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.  அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவிற்கு வர வேண்டிய சரக்குகளும் கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவிற்கு வரவில்லை.  அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வந்த சரக்குகளும் இந்திய துறைமுகங்களில் காத்திருக்கின்றன.

ஏற்கனவே வெளிநாடுகளை சேர்ந்த வர்த்தகர்களின் ஒப்பந்தம் காரணமாக ஏற்றுமதிக்காக இந்தியா தோல் பதனிடும் மற்றும் காலனி தொழிற்சாலைகளில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள சரக்குகளும் கரோனா தொற்று பிரச்சனை காரணமாக தங்களுக்கு தேவையில்லை சம்பந்தப்பட்ட நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன.

தோல் ஏற்றுமதி வர்த்தகத்தை பொறுத்தவரை கடந்த 2014-15 ஆம் ஆண்டில் 6.49 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2015-16 ல் 5.85 பில்லியன் அமெரிக்க டாலர், 2016-2017ல் 5.66 பில்லியன் அமெரிக்க டாலர் என அதன் வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டு குறைந்து கொண்டு வருகிறது. 2017-18 ம் ஆண்டில் 5.74 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2018-2019 ஆம் ஆண்டு 5.69 பில்லியன் அமெரிக்க டாலராகவும் வர்த்தகம் இருந்தது.  

சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடும் :

கரோனா பாதிப்பு காரணமாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வந்த சுமார் 1.5 இலட்சம் தொழிலாளர்களில் 50 சதவீதத்திற்கு மேல் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.  அதாவது தடை காலத்திற்கு பிறகு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும், குறைவான உற்பத்தி காரணமாக வேலை குறைப்பு ஏற்படும். அதனால் சுமார் 80 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.  அதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையான பாதிக்கப்படும்.   வேலை இழப்பு ஏற்பட்டால் தொழிலாளர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

இதுகுறித்து ஆம்பூரை சேர்ந்த தோல் தொழிலதிபரும், தென்னிந்திய ஷூ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளருமான மதார் கலீலூர் ரஹ்மான் கூறியது:

மதார் கலீலூர் ரஹ்மான்

இந்திய தோல் மற்றும் தோல் ஏற்றுமதி மொத்த வர்த்தகத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவிற்கு 2017-2018 ஆம் ஆண்டு 15.70 சதவீதம் ஏற்றுமதியாகின்றது.   அதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  கரோனா நோய் தொற்று பாதிப்புக்கு முன்னதாக தோல் தொழிலில் மந்த நிலை இருந்தது.  அந்த மந்த நிலை சற்று தளர்ந்து முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் கரோனா நோய் தொற்று பாதிப்பு என்ற பேரிடர் ஏற்பட்டுள்ளது.

 தோல் தொழில் முழுமையாக ஸ்தம்பித்து போய்விட்டது.  கரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் தோல் பொருட்களின் ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன.  ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்துவார்களா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.  மேலும் ஏற்கனவே பொருட்களை வாங்க செய்துள்ள ஒப்பந்தங்களையும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் ரத்து செய்துள்ளனர்.  

2020 ஆம் ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு தோல் ஏற்றுமதி வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக அது 50 சதவீதமாக வர்த்தகம் குறைய வாய்ப்புள்ளது.  தற்போதைய கரோனா பாதிப்பு காரணமாக ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு நட்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா காரணமாக   தோல் மற்றும் காலனி தொழிற்சாலைகளும் 50 சதவீதம் அளவுக்கு நிலையாக மூடிவிடக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தடை காலத்திற்கு பிறகு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும் ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாத நிலையே இருக்கும். வருமானம் இல்லாததால் தடை காலத்திற்கு பிறகு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி மற்றும் கடனை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.   இப்பேரிடர் காரணமாக ஏற்படக் கூடிய பிரச்சனையை கடுமையாக போராடி சமாளிக்க வேண்டும்.   தற்போது தடைக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கத் துவங்கியுள்ளன.

வருகின்ற குளிர்கால சீசனுக்காக மாதிரிகள் தயாரிப்பு பணி குறைந்த அளவு தொழிலாளர்களுடன் சமூக இடைவெளி, முகக் கவசம், கைகழுவுதல் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் துவங்கியுள்ளது.   மாதிரிகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்நாட்டு தொழிலதிபர்களின் ஒப்புதலுடன் ஆர்டர் பெற்ற பிறகு உற்பத்தி துவங்கும் என்று கூறினார்.

கரோனா நோய் தொற்று என்ற பேரிடர் காரணமாக தோல் தொழில் சரிவை சந்திக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட  தடை காலத்தில் கடனுக்கான வட்டி தள்ளுபடி, மின்சார கட்டண தள்ளுபடி, சரக்கு மற்றும் சேவை வரி சதவீதத்தை குறைத்தல் உள்பட பல்வேறு கோரிக்கைள் மத்திய, மாநில அரசுகளிடம் முன்வைக்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கரோனா தடை காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள தொழில் துறைக்கு மத்திய அரசு பல்வேறு நிதியுதவி திட்டங்களுக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.     இதன் மூலம் வருகின்ற காலத்தில் இத்தகைய அரசின் நிதியுதவி திட்டங்களை பயன்படுத்துவதன் மூலம் கரோனாவால் வீழ்ச்சியடைந்துள்ள தோல் தொழில் எழுச்சி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.