ஆ… படமா?
எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று.
இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் (Freedom of expression in India) என்பது எழுத்தின் மூலமாகவோ, பேச்சின்வழியாகவோ ஒரு கருத்தை தெரிவிக்க இந்திய குடிமக்கள் கொண்டுள்ள உரிமை.
இந்திய அரசியல் சட்டம் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல மனித உரிமைகளையும் பகுதி 3-இல் அடிப்படை உரிமைகள் என அறிவித்தது; அரசமைப்புச் சட்டம் பகுதி 3-இல் பிரிவு 19 (1) அ, அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பேச்சுரிமையையும், தான் விரும்பும் கருத்தை தெரிவிக்கும் உரிமையையும் அடிப்படை உரிமைகளாக அளிக்கிறது.
ஆனால் அரசமைப்புச் சட்டப்பிரிவு 19 (2) இல் நியாயமான குறுக்கீடுகள் என்ற பெயரில் அதற்கு வரம்பிட்டுள்ளது, இதைப் பயன்படுத்தி அரசு பல தருணங்களில் மக்களின் கருத்துரிமையை மறுப்பதுண்டு.
இந்தியாவின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் காப்பதற்கும், இந்தியாவின் பாதுகாப்புக்காகவும், அயல் நாடுகளுடன் நல்லுறவை பேணுவதற்கும், பொது அமைதியை காக்கவும், ஒழுங்கை நிலைநாட்டவும், நீதிமன்றத்தை அவமதிக்காமல் இருக்கும் பொருட்டும், அவதூறு செய்வதைத் தடுக்கவும், குற்றச் செயலைத் தூண்டாமல் தடுக்கவும் என்ற காரணங்களைச் சொல்லி இயற்றப்படும் சட்டங்கள் அல்லது இந்த காரணங்களுக்காக வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் கருத்துரிமையை பறித்தாலும் செல்லுபடியாகக் கூடியவை என்கிறது.
கருத்துரிமையை வழங்கும் பிரிவு 19(1) ஒரே வரிதான், ஆனால் கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் பிரிவான 19 (2) ஏழு வரிகளைக் கொண்டது. பிரிவு 19(2)-இல் கருத்துரிமையை கட்டுப்படுத்த அரசுக்கு மட்டற்ற அதிகாரங்களை அரசமைப்புச் சட்டம் அளிக்கிறது.
இத்தகைய சூழலில், பல நேரங்களில் அச்சு ஊடகங்களில் வெளியாகும் கேலிச் சித்திரங்கள், அதை பதிவிட்டோருக்கும், வரைந்தோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதும் வாடிக்கையானதுதான். அப்போது நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழலும் ஏற்படுவதுண்டு.
இப்போது இந்த கருத்துச் சுதந்திரத்தை ஒவ்வொரு தனிமனிதனும் வெளிப்படுத்துவதற்கு சமூக வலைதளங்கள் கட்டடற்ற எல்லையைத் திறந்துவிட்டுள்ளன. ஆனால் தங்கள் கருத்துக்களை இத்தகைய தளங்களில் பதிவு செய்வோர் பலரும் கருத்து சுதந்திரத்தின் எல்லையை அறிந்தவர்களாக இருப்பதில்லை என்பது நிதர்சனம்.
ஆனால் இன்றைக்கு கருத்து சுதந்திரம் என்ற பெயரில், ஒருசில நேரங்களில் சிலர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சமுதாய சிந்தனைகளை மறந்து தனிமனித கருத்துகளையும், தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளையும் தீர்த்துக்கொள்ள கருத்து சுதந்திரத்தின் எல்லையை மீறுவது அதிகரித்து வருவதையும், அதே நேரத்தில், சமுதாய சிந்தனையில், மக்களின் எண்ணோட்டத்தை பதிவிடும் கருத்துக்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமும், சகிப்புத் தன்மையும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டோரிடம் இன்றைக்கு குறைந்து வருவதையும் மறுப்பதற்கில்லை.
இரண்டும் எல்லை மீறாமல் இருக்கும் வரைதான் ஜனநாயகத்துக்கு அழகு.

You must log in to post a comment.