குருபக்திக்கு இலக்கணமாக விளங்கிய ஒரு மல்யுத்த வீரனின் கதை
வெ நாராயணமூர்த்தி
ஆன்மிக நெறியாளர்
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்தது இது. புத்த சமண ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த காலம். பக்தி வேதாந்த ஆச்சாரியர் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தில் அப்போதுதான் தன் மடத்தை நிறுவியிருந்தார். மெல்ல பக்தி சித்தாந்தம் வேரூன்றத் துவங்கிய காலகட்டம்.
தனுர்தாசன் ஒரு இளம் வாலிபன். உறையூரை சேர்ந்தவன். மல்யுத்தப் போரில் சிறந்து விளங்கியவன். செல்வந்தன். வாட்டசாட்டமான உடல்கட்டு. அதே ஊரைச் சேர்ந்த ஹேமாம்பாள் என்கிற நாட்டியக்காரியிடம் மிகுந்த பிரியம் கொண்டவன். அவள் அழகில் மதிமயங்கி கிடப்பான். இருவரும் ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்றனர். அப்போது ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் கருடோத்சவ கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. ஊரெல்லாம் மக்கள் வெள்ளம். ஒவ்வொரு நாளும் உற்சவர் வலம் வரும் காட்சியைக் காணத் தவம் கிடந்தனர்.

வந்திருந்த அனைவரும் பக்தி பரவசத்தோடு பவனி வரும் ரங்கநாதனைக்க கண்டு ரசித்தனர். ஆனால் தனுர்தாசனோ தன் ஆசைநாயகியின் சௌந்தர்யத்தில் மயங்கி அவளையே கண்டு பூரித்து நின்றான். கையில் ஒரு குடையத்தாங்கி தன் சுந்தரியை வெயில் தாக்காவண்ணம் பாதுகாப்புடன் அரவணைத்து நின்றான். சுற்றி நின்ற கூட்டம் இந்த ஜோடியைப் பார்த்து எள்ளி நகையாடிய போதும் அவன் அதைப் பற்றி லக்ஷியம் செய்யாமல் தன் காதலியின் கண்களே சொர்க்கம் என்று அதிலேயே லயித்து நின்றான். உற்சவரோடு பவனி வந்த ஸ்ரீ ராமானுஜரும் இந்த இருவரையும் கவனிக்கத் தவறவில்லை. வந்திருந்த அனைவரும் பள்ளிகொண்டான் மேல் பக்தி பரவசத்தில் லயித்து இருக்கும்போது இந்த இளைஞன் மாத்திரம் தன் அருகில் நிற்கும் பெண்ணின் மேல் மோகம் கொண்டு, புத்தி பேதலித்து ஒரு பொது இடத்தில் இப்படி சொக்கி நிற்கிறானே இந்த இளைஞன்! தன்னை மறந்து அப்படி எதைக் கண்டு மையல் கொள்கிறான்? என்று ஆச்சர்யம் கொண்டார்.

ஸ்ரீ ராமானுஜர் அவனை அழைத்து ‘இளைஞனே, உன் நடத்தை வித்தியாசமாக உள்ளது. அந்தப் பெண்ணிடம் ஏன் இப்படி மோகித்து நிற்கிறாய்?’ என்று வினவினார். ‘ஐயா நீங்கள் யார் என்று தெரியவில்லை. பெரியத் துறவி போலத் தெரிகிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். உலகிலேயே மிக அழகான, விழிகள் இந்த பெண்ணுடையது. அந்த விழிகளின் ஈர்ப்பிலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை. இது போல விழிகளை இந்த உலகில் நான் இதுவரை கண்டதேயில்லை’ என்று பதிலளித்தான் இளைஞன். ‘இதைவிட அழகான கண்களைக் காண விருப்பமா?’ என்றார் குரு. ‘காத்திருக்கிறேன் ஐயா’ என்றான் இளைஞன்.
அவனை ஸ்ரீ ரங்கநாதர் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார் குரு. இருட்டான கருவறை. பிரம்மாண்டமான பள்ளிகொண்ட பெருமான். வாத்தியங்கள் முழங்க, மந்திர கோஷத்தோடு எம்பெருமானுக்கு திவ்ய ஹாரத்தி துவங்கியது. அந்த சிறு ஒளியில் கோடி சூர்யப் பிரகாசமாக ஒளிர்ந்தது விக்ரஹம். ‘தனுர்தாச, இங்கே வா, எம்பெருமானின் இந்த ஸௌந்தர்யக் கண்களைப் பார்’ என்று குரு சொன்னதும், இளைஞன் பார்த்தான். அப்போதுதான் பெரிய அதிசயம் நடந்தது. எம்பெருமானின் கண்கள் மெல்ல திறந்து, அவனை உற்று நோக்கியது போல உணர்ந்தான். தன்னை மறந்து எவ்வளவு நேரம் அந்தக் காந்தக் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான் என்று அவனுக்கே புரியவில்லை. அவனால் அந்தப் பரவசத்திலிருந்து விடுபட முடியவில்லை. அவன் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. தனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மெய்மறந்து நின்றான். திடீரென்று விழிப்பு வந்தது. அனைத்தையும் துறந்து புதிதாகப் பிறந்தது போல உணர்ந்தான். தனக்கு உண்மையான ஒளியையும், பேரானந்தத்தையும் உணர்த்திய குருவின் காலில் விழுந்து வணங்கினான். தன்னை சீடனாக ஏற்கும்படி மன்றாடினான். குரு புன்னகைத்தார்.

சீடன் தனுர்தாசன் உடல் வலிமையோடு மன வலிமையும் கொண்டவன் என்பதை தன் குரு பக்தி வழியாக வெகு சீக்கிரமே வெளிப்படுத்தத் துவங்கினான். தன் நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டான். குரு பாதங்களே உண்மையான பூஜை, குரு சொல்லும் போதனைகளே தத்வங்கள், அவரது வார்த்தைகளே மந்த்ரங்கள் என்பதை உணர்ந்து தன் குருவை நிழல் போல தொடர்ந்தான். கற்க வேண்டியவைகளை கவனமாக கற்றான். குருவின் பார்வையிலேயே தெய்வீகத்தை உணர்ந்தான். ஸ்ரீ மடத்தில் பணிவிடை செய்து குரு பக்தியில் திளைத்திருப்பதே வாழ்க்கை என்பதை உணர்ந்தான். சஞ்சலங்கள் மறைந்து மனம் அமைதியிலும் ஆனந்தத்திலும் நிலைத்தது. குருவின் கட்டளையை ஏற்று ஹேமாம்பாவையே திருமணம் செய்துகொண்டான். அவளும் தன் கணவனுக்கு ஏற்றார்போல் தன்னையும் பக்தி மார்க்கத்தில் இணைத்துக்கொண்டாள்.
ஸ்ரீ ராமானுஜரோடு ஏற்பட்ட தனுர்தாசனின் நெருக்கம் மற்ற சீடர்களுக்கு கசப்பானது. அவனைப் பற்றி குருவிடம் வேண்டுமென்றே புகார்களை சொல்லிவந்தனர். தனுர்தாசனின் குரு பக்தியை அவர்களுக்கு புரிய வைக்க ஸ்ரீ ராமானுஜர் ஒரு பரிட்சை வைத்தார். தனுர்தாசனை மடத்தில் தங்க வைத்துக்கொண்டு, அவனுக்குத் தெரியாமல் மற்ற சீடர்களை அழைத்து தனுர்தாசனின் வீட்டுக்கு அனுப்பி அவன் மனைவி தூங்கிக் கொண்டிருக்கும்போது அவள் அணிந்திருக்கும் நகைகளை (அவளுக்குத் தெரியாமல்) கழற்றிக்கொண்டு வருமாறு பணித்தார். சீடர்களும் தனுர்தாசன் வீட்டிற்கு சென்று தூங்கிக்கொண்டிருக்கும் அவன் மனைவின் நகைகளை ஒவ்வொன்றாக கழற்றினர். விழிப்பு ஏற்பட்டாலும், ஹேமாம்பாள் காட்டிக்கொள்ளவில்லை. வந்திருப்பவர்கள் குருவின் சிஷ்யர்கள் ஆயிற்றே. இவர்கள் செய்வது ஏதோ ஒரு உயர்ந்த காரணத்துக்காகதான் இருக்கவேண்டும் என்று நினைத்து குரு நாமத்தை ஸ்மரணை செய்துக்கொண்டே மெதுவாகத் திரும்பிப் படுத்தாள். மற்ற நகைகளையும் கழற்றிக்கொள்ளட்டுமே என்ற நினைப்பில். ஆனால் இவள் விழித்து விட்டாள் என்று பயந்து வந்தவர்கள் குறைச்சலான நகைகளோடு ஓடிவிட்டனர். தன் குருவிடம் நடந்ததை விவரித்தனர். ‘தனுர்தாசன் தன் வீட்டிற்கு சென்று என்ன செய்கிறான் என்று மறைந்திருந்து பாருங்கள்’ என்றார் குரு.
கணவன் வீட்டிற்கு வந்ததும், நடந்த விஷயத்தைப் பற்றி சொன்னாள் ஹேமாம்பாள். தான் தூங்கிக் கொண்டிருந்தபோது குருவின் சீடர்கள் வந்திருந்ததாகவும் அவர்களுக்கு உதவி செய்யவே தான் திரும்பி படுத்தாலும் அவர்கள் பயந்து போய் ஓடியதை விவரித்தாள். தனுர்தாசனோ தன் மனைவியை கடிந்துகொண்டான். ‘நீ கல் மாதிரி அசையாமல் படுத்து இருந்திருந்தால் உன் நகைகள் அனைத்தையும் அல்லவா எடுத்துக் கொண்டிருப்பார்களே. தங்கப்பற்று முற்றிலும் அகன்று ரங்கப்பற்று கிடைக்க அல்லவா நாம் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அந்த நகைகள் நம்மிடம் இருப்பதைவிட அவர்களுக்கு மடத்தில் ஒரு நல்ல காரியத்துக்கு நிச்சயமாக பயன்பட்டிருக்குமே. அதை கெடுத்துவிட்டாயே, என்று அங்கலாய்த்து கொண்டான். இதை மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த சீடர்களுக்கு தனுர்தாசனின் தெய்வ பக்தியும், குருபக்தியும் புரிந்தது. குரு மேல் இருக்கும் பக்தியைப் போலவே சக சீடர்களிடமும் அவன் வைத்திருக்கும் மரியாதையும் அன்பும் புரிந்தது. அவன் மேல் கொண்ட பொறாமையும் மறைந்து அவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டனர். தன் ஆயுட்காலம் முடியும்வரை தனுர்தாசன் தன் குரு ஸ்ரீ ராமானுஜரோடு கூட இருந்து பணி செய்து குரு பக்திக்கு இலக்கணமாக இன்று சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டான்.

சதா ஸ்த்ரீ மோகத்திலும், ஆண்மை மிடுக்கோடும் செல்வ போகத்தில் உழன்று கிடத்த ஒரு முரட்டுக்காளையைக்கூட குருவருளும், தெய்வ அனுக்ரஹமும் ஒன்று சேர்ந்து பண்படச்செய்து அவனுக்குள் மறைந்து இருக்கும் உண்மை இயல்பான, தெய்வீகத்தை உணரவைத்து உயர்நிலையை அடையமுடியும் என்பதற்கு தனுர்தாசனின் வாழ்க்கையே சாட்சி.
You must log in to post a comment.