4-ஆவது கட்ட ஊரடங்கு எத்தனை நாளைக்கு?
இன்று தெரியும்
சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4-ஆவது கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த ஊரடங்கு உத்தரவு எத்தனை நாளைக்கு, எந்தெந்த மாநிலங்களுக்கு என்பதும், அதில் பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் பொதுமக்களிடம் உரையாற்றும்போது கூறியதுபோல் என்னென்ன தளர்வுகள் இடம்பெறும் என்பது இன்று (17.5.20) தெரிந்துவிடும்.
54 நாள்களாக நீடித்து வரும் ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்கவே விரும்புகின்றனர். கொரோனா நோய்த் தொற்றின் வேகம் முன்பை விட அதிகரித்து வருவதே இதற்கு காரணம். இதுதொடர்பாக முதல்வர்களுடன் பாரத பிரதமர் மேற்கொண்ட ஆலோசனையின்போது அவர்களின் கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.
தற்போதைய சூழலில் இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத், தமிழகம், தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 மாநிலங்களில் உள்ள 30 நகரங்களில் முழுமையான அளவில் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் தமிழகத்தில் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பெரும்பாலும் இம்மாதம் இறுதிவரை (மே 31) ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதற்கான சூழல் நிலவுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
You must log in to post a comment.