ஊரடங்கை படிப்படியாகவே விலக்க வேண்டும்- முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை
சென்னை: ஊரடங்கை ஒருபோதும் 100 சதவீதம் விலக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. படிப்படியாகவே ஊரடங்கை விலக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவினர் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது:
ஊரடங்கை ஒருபோதும் 100 சதவீதம் விலக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. கொரோனா நோய்த் தொற்றைத் தவிர்க்க படிப்படியாகவே ஊரடங்கை விலக்கிக் கொள்ள வேண்டும் என இக்கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கிளஸ்டரை கட்டுப்படுத்த துரித பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் உயிரிழப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. கொரோனா நோய்த் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிக பரிசோதனைகள் மூலமே கொரோனா பரவலை வேகமாகக் கட்டுப்படுத்த முடியும். கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருவதன் மூலம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவல் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்க முடியும்.
கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் வேலைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று நம் வீட்டுக்கு அருகில் இருந்தாலும் பணிக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் ஒரு மீட்டர் தனிநபர் இடைவெளியை பணிபுரிவோர் கடைப்பிடிக்க வேண்டும். பணிபுரிவோர் அனைவருக்கும் பாதுகாப்பு முகக் கவசங்கள் வழங்கப்பட வேண்டும் என்றனர் மருத்துவ நிபுணர் குழுவினர்.
மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் ஏற்கெனவே 2 முறை ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையை அடுத்து வரும் 30-ஆம் தேதி வரை 4-ஆவது கட்ட ஊரடங்கு நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
You must log in to post a comment.