விமானத்தில் தமிழகம் வர இ-பாஸ் பெறுவது எப்படி?
சென்னை: நாடு முழுவதும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்துக்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் தேவை.
இரு மாதங்களுக்கு பிறகு விமானப் போக்குவரத்து தொடங்கினாலும், அதற்கு சில கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன. கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள அந்த கட்டுப்பாட்டுகளை பின்பற்றியே விமானத்தில் பயணிக்க முடியும்.
அவ்வகையில் தமிழகத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் தேவை. தமிழக அரசின் இ-பாஸை பெறுவதற்கு https://tnepass.tnega.org/ என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
அதனுள் நுழைவதற்கு நம்முடைய செல்போன் எண் பதிவு செய்யப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து வரும் ஓடிபி என்னும் கடவுச்சொல்லை பதிந்து உள்ளே செல்ல முடியும்.
அதனுள் தனிநபர்/குழு, தமிழ்நாட்டின் உள்நுழைதல், தொழில் நிறுவனங்கள் ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் ‘தமிழ்நாட்டில் நுழைய’ என்ற தேர்வை கிளிக் செய்தால், பயணத்தை தேர்வு செய்ய தேர்வுகள் வரும் – அதாவது, ரயில் பயணமா, உள்நாட்டு பயணமா அல்லது சர்வதேச விமான பயணமா என்ற விருப்பத் தேர்வுகள் உள்ளன.
தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வருவதாக இருப்பின் உள்நாட்டு விமானப் பயணம் என்பதை தேர்வு செய்யவேண்டும். தற்போது ரயில், சர்வதேச விமான சேவை இல்லை என்பதால் அவற்றை தேர்வு செய்ய முடியாது.
விமானப் பயணத்தை தேர்வு செய்து உள்ளே சென்றதும், அதில் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
முதல்கட்டத்தில் உங்கள் பெயர், பாலினம், வயது, தந்தை பெயர் ஆகியவற்றுடன், உங்கள் அடையாள அட்டை விவரங்களையும், விமான எண், இருக்கை எண், உங்கள் பயணச்சீட்டு, நீங்கள் வந்து சேரும் விமான நிலையம், தேதி மற்றும் உங்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான வசதி உள்ளதா அல்லது கட்டண தனிமைப்படுத்துதலை பெற விரும்புகிறீர்களா, விமான நிலையத்திலிருந்து செல்லும் வாகனத்தின் விவரம் ஆகியவை குறித்தும் பதிய வேண்டும்.
அடுத்ததாக எங்கிருந்து வருகிறோம் என்பதற்கான விலாசமும், தமிழ்நாட்டில் எங்க செல்லவுள்ளோம் என்ற விலாசமும் பதிவிட வேண்டும். அதைத் தொடர்ந்து உங்களுடன் பயணம் செய்பவர்களின் விவரங்களையும் பதிவு செய்யலாம்.
அனைத்து தகவல்களையும் முறையாக பதிவிட்டதும், குறிப்பு (reference) எண் உருவாக்கப்படும். தொடர்புடைய துறை பரிசீலனை செய்து ஏற்புடையதாக இருப்பின் உங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும்.
You must log in to post a comment.