ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் நினைவு நாள்
1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டத்தில் நேச நாடுகள் ஜப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசின. இந்த இரு அணுகுண்டுகள்தான் இதுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்த்தப்பட்டவை. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் ஈடுபட்டு போரில் ஈடுபட்டது. அப்போது பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலை தாக்கி மூழ்கடித்தது. அதையடுத்து அமெரிக்கா தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்க வைத்து பார்க்கும் பரிசோதனைக் கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக்கொண்டது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசப்பட்டன.
“மான்ஹாட்டன் செயல்திட்டம்” என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு குண்டுகள் ஜப்பான் மீது வீசப்பட்டன. “சின்ன பையன்” (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர் மீது 1945, ஆகஸ்ட் 6ஆம் நாளும், “பருத்த மனிதன்” (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர் மீது மூன்று நாட்களுக்குப் பிறகும் வீசப்பட்டன. இந்த அணுகுண்டுகள் வீச்சால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேரிட்டது.
குண்டுகள் வீசப்பட்ட 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 166,000 மக்களும், நாகசாக்கியில் 80,000 மக்களும் உயிரிழந்தனர். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர். ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் கொல்லப்பட்டவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் போர்வீரர்கள் அல்ல, சாதாரண குடிமக்களே.
எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தன. கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் இரோசிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.
ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.
சிறப்பு நாள்
பொலீவியா – விடுதலை நாள் (1825)
ஜமெய்க்கா – விடுதலை நாள் (1962)
ஜப்பான் – டோரோ நாகசாகி – ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள்.
பிற நிகழ்வுகள்
1661 – போர்ச்சுக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
1806 – கடைசி புனித ரோமப் பேரரசர் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.
1825 – பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் 10 கடற்படை படகுகள் பிரித்தானியப் படகுகளைத் தாக்குவதற்காக வடகடலை நோக்கிப் புறப்பட்டன.
1914 – முதலாம் உலகப் போர்: சேர்பியா ஜேர்மனி மீதும் ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.
1930 – வீரகேசரி நாளிதழ் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்பில் தொடங்கப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.
1952 – இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.
1960 – கியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.
1961 – வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.
1962 – ஜமெய்க்கா ஐக்கிய ராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1964 – அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழைமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு காலத்தைய புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.
1990 – இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1991 – உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.
1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.
1997 – வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் வீழ்ந்ததில் 228 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
You must log in to post a comment.