குரு பெயர்ச்சி பலன் – 2020-2021

குருவின் சிறப்பு பார்வை பெறும் ராசிகள்

குரு பகவான் தனுசு ராசியில் சஞ்சரித்து வருகிறார். தனுசு ராசியில் உத்திராடம் 1-ஆம் பாதத்தில் இருந்து மகரத்தில் உள்ள உத்திராடம் 2-ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை 5-ஆம் தேதி – அதாவது நவம்பர் 20-இல் பெயர்ச்சியாகிறார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 30 – அதாவது நவம்பர் 15- ஆம் தேதி பெயர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த குரு பெயர்ச்சியில், குருவின் சிறப்பு பார்வை ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கும். மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குரு பகவானை வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்து வந்தால் நல்ல பலன்களை பெறமுடியும்.

பொதுவாகவே குரு சிறப்பு பார்வை படாதவர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், சனிக்கிழமைகளில் சனீஸ்வரனையும் வழிபடுவது சிறந்தது. கிரக நிலைகளில் பாதிப்பு தரும் அம்சங்கள் இருந்தாலும், நமக்கு ஆத்ம பலத்தையும், நம்பிக்கையையும், விடா முயற்சி, தூய சிந்தனை, தெளிந்த நடையை உருவாக்கித் தரும் வல்லமையைத் தரும்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்):

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். மேஷ ராசிக்கு 10-ஆம் இடமான தொழில் கர்ம ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் சுமாரான பலன்களையே இந்த ராசிக்குரியவர்கள் பெற முடியும்.

குரு பகவான 2, 4, 6-ஆம் இடங்களில் பார்வை செலுத்துவதால், உத்தியோகத்திலும், தொழிலிலும் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். உங்களின் சுயமுயற்சிகள் நீங்கள் நினைத்தை சாதிக்க உதவும். உங்கள் தொழிலிலோ, உத்தியோகத்திலோ கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற நிலை ஏற்படும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. தற்போது புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதை தள்ளிப்போடலாம்.

புதிய தொழில் முதலீடுகள், ஒப்பந்தங்களில் கவனம் தேவை. பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்க நிலை நிலவும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. வாங்கிய கடன்களுக்கு முறையாக வட்டி செலுத்துவதில் கவனம் தேவை. குடும்பத்தில் அடிக்கடி மனக்கசப்புகள் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் ஏற்படும் மனக்கசப்பை தவிர்க்க கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்: (கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதம், மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதம்.)

ரிஷப ராசிக்கு 9-ஆம் இடத்தில் குரு பகவான் இருந்து 1, 3, 5 ஆகிய இடங்களில் பார்வை செலுத்துகிறார்.. குருவின் 5-ஆம் பார்வை ரிஷப ராசி மீது விழுவதால் நல்ல பலன்களை குரு அளிப்பார். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசுப் பணிகளில் இருப்போர் சிறப்படைவர். அரசியல்வாதிகளுக்கு அவர்களின் நீண்டநாள் கனவு நனவாகும்.

தொழிலில் போட்டி, பொறாமை அதிகரிக்கும். அவற்றை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். அரசு, தனியார் பணிகளில் இருப்போருக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. இருப்பினும் உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டு பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும். வாங்கிய கடன்களை கவனமாக திருப்பி செலுத்துவதில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவினாலும், அவ்வப்போது சிறு சண்டை, சச்சரவுகள் வந்து மறையும். குடும்ப உறவுகளில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும்.

மிதுனம்: (மிருகசீரிடம் 2, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதம்):

குருபகவான் மிதுன ராசிக்கு 8-ஆம் இடத்தில் பிரவேசிப்பதால், இந்த குரு பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தராது. ராசிக்கு 8-ஆம் இடத்தில் இருந்து 12, 2, 4 ஆகிய இடங்களில் குருவின் பார்வை படுகிறது. இதனால் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் சறுக்கும். எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. இருப்பினும் அஷ்டம சனி வரக்கூடிய சூழலில் குரு அஷ்டமத்தில் இருப்பதால் சனியால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறையும்.

தொழில் முதலீடுகளுக்கு தேவையான பணம் கிடைக்காது. இதனால் உங்களின் முன்னேற்றம் தடைபடும். வணிகத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து புதிய உத்திகளை கையாண்டு அபிவிருத்தி செய்வதில் இந்த காலக்கட்டத்தில் ஈடுபடுவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்போருக்கு இடமாற்றம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. வங்கி சேமிப்புகள் கரையும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்ப உறவுகளில் சிறு பிரச்னைகள் ஏற்படும். கணவன்-மனைவி சண்டையை வீதிக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது இருபாலருக்கும் நல்லது. விட்டுக்கொடுத்து அமைதியான முறையில் கணவன்-மனைவி இருவரும் கலந்துரையாடினால் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளை குடும்பத்தில் உள்ளவர்களுடன் கலந்துபேசி எடுப்பது அதைவிட சிறந்தது.

கடகம்: ( புனர்பூசம் 1ஆம் பாதம், பூசம், ஆயில்யம் ):

கடக ராசிக்கு 7-ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் குரு அமர்கிறார். குருவின் பார்வை 11, 1, 3 ஆகிய இடங்களில் படுகிறது. இதனால் இந்த ராசியினருக்கு ஏற்பட்டு வந்த துன்பங்கள் அகலும். கணவன்-மனைவி உறவுகள் பலப்படும். உங்களை அனுசரித்து செல்வார்கள். இந்த ராசியினருக்கு குரு பகவான் மனதுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பார்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் பெரிய முதலீடுகளை செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். இல்லங்களில் சுப காரியங்கள் நடைபெறும். வரும் நல்ல வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். கவனம் தேவை.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்):

சிம்ம ராசிக்கு 6-ஆம் இடத்தில் குரு அமர்கிறார். 10, 12, 2 ஆகிய இடங்களில் குருவின் பார்வை விழுவதால், இந்த ராசியினர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத செலவுகளும், பயணங்களும் தவிர்க்க முடியாது. எதிர்பார்த்த வெற்றிகள் தட்டிப்போகாது. பெரிய முதலீடுகளை செய்யும்போது பலமுறை யோசித்து முடிவெடுப்பது அவசியம். கொடுக்கல், வாங்கலிலும் கவனம் தேவை.

சமுதாயத்தில் இந்த ராசிக்குரியவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும் நேரம் இது.  உங்களின் நேர்மைக்கு சோதனைகள் ஏற்படும். சுற்றி இருப்பவர்கள் உங்கள் மீது பொறாமை கொள்வர். அவர்களால் மறைமுகமான எதிர்ப்புகள் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிட மாற்றம், ஊதிய உயர்வு கிட்டும். ஆடம்பர பொருள்களை வாங்குவதற்காக கடன் வாங்கும் நிலை ஏற்படும். இதை தவிர்த்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவி உறவில் நல்ல புரிதல் ஏற்படும். உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் ஆரோக்கியத்தை பேணி காக்க முடியும்.

.

கன்னி: ( உத்திரம் 2, 3, 4-ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2 ம் பாதம்):

இந்த ராசிக்கு குருபகவான் 5-ஆம் இடத்தில் இடப்பெயர்ச்சி செய்து, 9, 11, 1 ஆகிய இடங்களில் பார்வை செலுத்துகிறார். இதனால் நல்ல பலன்களை இந்த ராசியினர் பெறுவர். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் நினைத்த காரியத்தை சாதிக்க்க் கூடிய காலம். குரு அதிசாரமாக ஏப்ரல் மாதம் செல்லும்போது எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் நவக்கிரக குருவை வணங்குவது நல்ல பலன்களைத் தரும்.

உங்கள் உழைப்பு நல்ல பலனை தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்காது. உத்தியோகத்தில் போட்டி, பொறாமை அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சிறக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம், இறக்கும் இருக்கும். புதிய சொத்துக்களை வாங்கும்போது எச்சரிக்கை தேவை. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.

குடும்ப உறவுகளுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இதனால் மனக்கஷ்டம், உடல் பாதிப்பு ஏற்படும். முன்கோபம் பல பாதகங்களை உருவாக்கும். பொறுமை கடைப்பிடிப்பது அவசியம்.

துலாம்: (சித்திரை 3, 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதம்):

குருபகவான் துலாம் ராசிக்கு 6-ஆம் இடத்தில் இருந்து 10,12, 2 ஆகிய இடங்களில் பார்வை செலுத்துகிறார். இதனால் இந்த ராசியினருக்கு திடீர் லாபம், ஏமாற்றம், விரோதம் என மாறிமாறி வரும்.. வாகனப் பயணத்தில் கவனம் தேவை புதிய ஒப்பந்தங்கள் லாபத்தைத் தரும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. பொருளாதார முன்னேற்றத்துக்காக புதிய உத்திகளை கையாள வேண்டியிருக்கும். எந்த புதிய முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. மருத்துவச் செலவுகள் ஏற்படும். இந்த ராசிக்குரிய பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம். குடும்ப பிரச்னைகள் ஏற்படும்போது அமைதி காப்பது நல்லது.  குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவதால் பெண்களை அணுகும் பிரச்னைகள் நீங்கும்.

விருச்சிகம் (விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை):

ராசிக்கு 3-ஆம் இடமான தைரிய ஸ்தானத்தில் குரு அமர்கிறார். 7, 9, 11 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. இதனால் கடந்த காலங்களில் ஏற்படுத்தி வந்த சிக்கல்கள் நீங்கும். உங்களின் புது முயற்சிகள், திட்டங்கள் வெற்றி பெறும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். குடும்ப உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வாக்குவாதங்கள், தேவையற்ற வார்த்தைகளால் மனஅமைதி குலையும். உத்தியோகத்தில் இருப்போர் மிகுந்த கவனமாக செயல்பட வேண்டும். எதிர்பாராத சங்கடங்களை உத்தியோகத்தில் சந்திக்க வேண்டி வரும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். உயர் அதிகாரிகளுடன் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும். பொறுமை இழக்கும் சூழல் வரும். உங்களின் நிதானமான செயல்பாடுகள் ஆபத்துகளில் இருந்து விடுபட உதவும்..

உங்களின் கடின முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்காது. பூர்வீக சொத்துகள் வந்து சேரும். தொழில் ரீதியான கடன்கள் குறையும். குடும்ப உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளின் முன்னேற்றப் பாதைக்கு திட்டம் தீட்டுவீர்கள். சுபகாரியங்களால் செலவுகள் அதிகரித்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்):

இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசிக்கு யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் தரக்கூடியதாக அமையும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடந்தேறும். எண்ணிய காரியங்கள் வெற்றி பெறும். மிக நெருங்கியவர்களாக இருப்பினும் சாட்சி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும்.

குரு பகவான் தனுசு ராசிக்கு 2-ஆம் இடத்தில் இருந்து 6, 8, 10 ஆகிய இடங்களில் பார்வை செலுத்துகிறார். இதனால் சொத்து பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வருமானம் பெருகும். புதிய பொருள்கள் வந்து சேரும். உங்களின் பணிச் சுமை மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். யோகா, கடவுள் வழிபாடு மூலம் இதை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

தொழில் போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்போருக்கு எதிர்பாராத வரவுகள், பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. அசையும் சொத்துக்களால் வீண் விரயம் ஏற்படும். உங்கள் செயல்பாடுகளுக்கு உற்றார், உறவினர்கள் ஆதரவுடன் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன்-மனைவிக்கு இடையே வேரு நபர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்படும் சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். இருப்பினும் எலும்பு சம்பந்தமான மருத்துவ செலவுகள் ஏற்படும்.

​மகரம்: (உத்திராடம் 1, 2, 3-ஆம் பாதம், திருவோணம் அவிட்டம் 1, 2ஆம் பாதம்):

மகர ராசியில் குரு சஞ்சரிப்பதால் பல சிக்கலான அனுபவங்களைப் பெறுவீர்கள். ஜென்ம சனி நடக்கும் நேரத்தில் சனியின் மோசமான பலன்களை குரு பகவான் கட்டுப்படுத்துவார். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் முயற்சிகளில் பெரும் முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.

குருபகவான் மகர ராசியில் இருந்து கொண்டு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் மகர ராசியினருக்கு குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்கும்.  உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இதுவரை நீடித்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.  திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். நல்லவர்கள் பலரின் நட்பு கிடைக்கும். எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.தொழிலில் நீங்கள் எடுக்கும் சுயமுடிவு நல்ல பலன்களைத் தரும். அடுத்தவர்களை நம்பி முக்கியமான பணிகளை ஒப்படைக்காதீர்கள். அதனால் பாதகமான நிலை ஏற்படும்.

தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். அதனால் அதிக லாபமும் கிடைக்கும்.சுபகாரியங்களுக்கு செலவு செய்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4ஆம் பாதம், சதயம் பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதம்):

.குரு பகவான் ராசிக்கு 12-ஆம் இடத்தில் இருந்துகொண்டு 4, 6, 8 இடங்களில் பார்வை செலுத்துகிறார். இதனால் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்லதையும், கெட்டதையும் தரும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் வீண் வம்பு சண்டை வந்துசேரும்.

திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். இல்லாவிடில் கடன் பெறும் நிலை ஏற்படும், பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற, தாழ்வுகளை சமாளிக்க கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்போருக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைப்பதில் இன்னும் காலதாமதம் ஏற்படும். இருப்பினும் உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் திறமைகளை மேல் அதிகாரிகள் அறிந்து பாராட்டு வழங்குவர்.

விலை உயர்ந்த பொருள்களை வாங்குவதில் ஒரு முறைக்கு இருமுறை யோசனை செய்வது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி சிறுசிறு சண்டை, சச்சரவுகள் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகும் பக்குவம் இருந்தால் பிரச்னைகள் ஏற்படாது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம். சுவாசப் பிரச்னை, மனஅழுத்தம் ஏற்படும். கவனம் தேவை. திருமணம், வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.

மீனம் : (பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி):

மீன ராசிக்கு 11-ஆம் இடத்தில் லாப ஸ்தான குருவாக அமர்கிறார். அவரது பார்வை 3, 5, 7 இடங்களில் படுவதால் வீடு, மனை, வாகனங்கள் வாங்குதல், அசையா சொத்துக்கள் சேர வாய்ப்பு ஏற்படும். தொழிலில் முன்னேற்றமும், உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிட்டும். எதிர்பாராத பணவரவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

எடுத்த முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில், வணிகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்போருக்கு எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிட்டும். பணியில் சிறந்து விளங்குவதால் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். அதற்கேற்ப பொறுப்புகளும் கூடும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளிப்பர். வராத கடன்கள் திரும்பி வரும். கடன் தொல்லை இருப்பவர்கள் அவற்றில் இருந்து முழுமையாக விடுபடுவர். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் வரும். சரியான நேரத்தில் மருத்துவம் மேற்கொள்வது தேவையற்ற செலவுகளை தவிர்க்க உதவும்.

குருவையும், சனியையும், மகாலட்சுமியையும் தொடர்ந்து வணங்கி வருவோருக்கு குரு சாதகமான பலன்கள் கிட்டும். குரு பெயர்ச்சியால் சுமாரான பலன்களை பெறுவோர் இறை வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மலை போல் பாதிப்புகள் வந்தாலும் பனிபோல் விலகிச் செல்லும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.