மானியமில்லா எரிவாயு உருளை விலை அதிகரிப்பு
சென்னை: மானியமில்லா எரிவாயு உருளையின் விலை ரூ.37 அதிகரித்துள்ளது.
எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மாதம்தோறும் முதல் தேதியில் எரிவாயு உருளை விலையை மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு எரிவாயு உருளை விலை உயர்ந்து வந்தது. பின்னர் கடந்த மார்ச் முதல் 3 மாதமாக அதன் விலை குறைந்து வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 1 முதல் மாற்றியமைக்கப்பட்ட விலையில் மானியமில்லா வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை ரூ.37 அதிகரித்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளை விலை ரூ.606.50-ஆக உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், இணையதளத்தில் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்படி, தில்லியில் 14.2 கிலோ எரிவாயு உருளை விலை ரூ.593-ஆக உள்ளது. கொல்கத்தாவில் ரூ.616 ஆக உள்ளது. மும்பையில் ரூ.590.50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இருப்பினும், எல்பிஜி எரிவாயு விலை உயர்வு பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளை பாதிக்காது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் ஜூன் 30 வரை இலவச சிலிண்டர் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர்களை வீடுகளின் பயன்பாட்டுக்கு விற்பனை செய்கின்றன. அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீட்டிற்கு 12 சிலிண்டர்களுக்கு மானியங்களை அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தி வருகிறது.
You must log in to post a comment.