ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள்

பணக்கார வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும் பாமரனின் கஷ்டங்களை அறிந்தவர் ஜி.கே.மூப்பானார் என்பார்கள். தமிழக அரசியல்வாதிகளில் கறைபடாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அத்தகைய அரிய மனிதர்களில் ஒருவர்தான் மூப்பனார். 1931 இதே மாதம் இதே நாளில் பிறந்தவர் அவர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் கோவிந்தசாமி மூப்பனார் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர் ஜி.கே. மூப்பனார். அவரது உடன் பிறந்தோர் 6 பேர் – சகோதரர்கள்: ஜி. ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள். இவரது மனைவி பெயர் கஸ்தூரி.

தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், 4 முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலராக 8 ஆண்டுகளும் இருந்துள்ளார்.  கருத்து வேறுபாடு காரணமாக மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30.8.2001-இல் காலமானார்.

பொதுவாகவே பணக்கார வீட்டு பிள்ளைகள் பொதுவாழ்க்கைக்கு வருவது அரிய நிகழ்வு. ஆனால் அந்தக்காலத்திலேயே செல்வத்திற்கு குறை இல்லாத சூழலிலும் அரசியலில் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் மூப்பனார். துறுதுறுவென அவர் இருந்ததாலும், பணத்திற்கு பஞ்சமில்லை என்பதாலும் 1965-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவரை தேடி வந்தது. மூப்பனார் கிடுகிடுவென அரசியலில் வளர்ச்சியடைந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் (நிர்வாகம்) பொறுப்பு வரை வகித்தார். மூப்பனாரிடம் ஒரு வேலையை தில்லி தலைமை கொடுத்துவிட்டது என்றால், அதனை எப்பாடுபட்டாவது சாக்குபோக்குகள் சொல்லாமல் முடித்துக்காட்டுவார். இவரது கெட்டிக்காரத் தனத்தை ராஜீவ்காந்தியே பலமுறை மூப்பனாரிடம் சொல்லியிருக்கிறாராம்.

அரசியலில் பொதுவாக யாரும் யாரையும் வளர்த்துவிடமாட்டார்கள். இது எழுதப்படாத விதியாக இன்றும் உள்ளது. ஆனால், மூப்பனாரை பொறுத்தவரை பலரை கைதூக்கிவிட்டு ஆளாக்கிவிட்டார். புதிதாக கட்சி தொடங்கி தடுமாறிய காலத்தில், திருமாவளவனுக்கும், கிருஷ்ணசாமிக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்தார். தொண்டரிடம் தோளில் கைபோட்டு, எப்ப சென்னை வந்த?..சரி, கவலைப்படாம ஊருக்கு போ பார்த்துகலாம் எனக் கூறி அனுப்பி வைப்பதோடு, அந்ததொண்டரின் தேவைகளையும் நிறைவேற்றி தருவாராம்.

1996-ல் அதிமுகவுடன் கூட்டணி என்ற நரசிம்மராவின் முடிவை எதிர்த்து, வளமான தமிழகம்..வலிமையான பாரதம் என்ற முழக்கத்தை முன்வைத்து த.மா.கா.வை தோற்றுவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் பலர் இவர் பின்னால் அணிவகுத்து எம்.பி., எம்.எல்.ஏ.களாகினர். கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் அவர் காலமானார்.

பிற நிகழ்வுகள்

1895 – கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறப்பு.
1915 – முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர்.
1919 – ஐக்கிய ராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
1934 – ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.
1945 – ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.
1946 – கல்கத்தாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
1953 – பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.
1980 – சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குகையில் தீப்பிடித்ததில் 301 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தேர்வு செய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தேர்வு செய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.
1991 – ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
2002 – ரஷ்யாவின் Mi-26 ரக உலங்கு வானூர்தி செச்சினியத் தீவிரவாதிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டதில் 118 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.