பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இனி தேவைதானா?

சென்னை: காவல்துறை நண்பனாக இருந்து வரும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் மீது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது சாத்தான்குளம் சம்பவத்திலும் அதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அந்த அமைப்பு தமிழகத்தில் தேவைதானா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை 1993-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் வி. பிலிப் தொடங்கினார். மாவட்டம்தோறும் உள்ள இளைஞர்கள், தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த இளைஞர்களைக் கொண்டு குற்றவாளிகளை எளிதாக அணுகுதல், சாலை போக்குவரத்து சீரமைப்பு, இரவு நேர ரோந்துப் பணியில் போலீஸாருடன் சேர்ந்து ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது உலகலாவிய வரவேற்பை பெற்றுத் தந்ததோடு, சிறப்பான பணிக்காக பிரதீப் வி. பிலிப் பல்வேறு விருதுகளை இந்த அமைப்புக்காக பெற வைத்தது.

இந்த அமைப்புக்கு தெரிந்தோ, தெரியாமலோ பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என வைத்ததாலோ என்னவோ அவர்கள் மக்களின் நண்பனாக இல்லாமல், முழுமையாகவே காவல்துறையினரின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழத்தொடங்கியது.

பல நேரங்களில் பிரண்ட் ஆப் போலீஸ் அமைப்பில் இருப்பவர்கள் பொதுஇடங்களில் அத்துமீறுவது, காவல்துறைக்கு உள்ள அனைத்து அதிகாரங்களுக்கும் தங்களுக்கே இருப்பது போன்ற தோரணையில் நடந்து கொள்வது, காவல்துறையுடன் இருக்கும் நெருக்கத்தை வைத்து தங்களின் சுயநலத்தை பூர்த்தி செய்துகொள்வது போன்றவற்றில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக கடைவீதிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கட்டுப்பாடுகளில் உள்ள சாலையோரங்களில் தள்ளுவண்டிக் கடைக்காரர்களிடம் மாமூல் வசூலிப்பது உள்ளிட்டவற்றில் அவர்கள் கடமை தவறிய ஒருசில காவல்துறையினருக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்திலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீதும் புகார் எழுந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரலை உயர்த்தின.

அண்மையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார், மாநிலச் செயலர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை நண்பர்கள் (friends of police) என்ற பெயரில் ஒரு குழுவினர் காவல்துறையுடன் இணைந்து காவல்துறைக்கு தொண்டூழியம் செய்வது, சித்ரவதை செய்வது, வாகன ஓட்டிகள், கடைக்காரர்களிடம் மிரட்டி பணம் பறிப்பது என வளர்ந்திருக்கிறார்கள். இப்பணிக்கு வேலையில்லாத இளைஞர்களை பயன்படுத்துகிறார்கள். இந்த குழுவில் இணைந்தால் எதிர்காலத்தில் காவல்துறையில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசை காரணமாக இதில் இணைகிறார்கள். இதை சமூக விரோதிகள் பலரும் பயன்படுத்தி காவல்துறை நண்பர் குழுவில் இணைந்து தவறான ஆதாயம் பெறுகிறார்கள்.  கிட்டத்தட்ட இந்த குழுவினர் காவல்துறையினரின் அடியாட்கள் போல பயன்படுத்தப்படுகின்றனர். இதுபோன்ற அமைப்புகளுக்கு எந்த சட்ட வரையறையும் இல்லாமல், காவல்துறையின் விருப்பப்படி காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில் இணைத்து செயல்படுவது என்பது இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். உடனடியாக அரசு தலையிட்டு காவல்துறை நண்பர்கள் குழுவை கலைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு எதிராக பலத்த குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு ஒரு நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் அதில் சுயநலவிரும்பிகளும், ஒருசில காவல்துறையினரின் அத்துமீறல்களுக்கு உடந்தையாக செயல்படும் போக்கைக் கொண்டவர்கள் இணைந்து செயல்படுவதால் அந்த அமைப்பைக் கலைக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து வலுத்து வருகிறது.

இந்நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரையில் தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல், கருர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய  9 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் விரைவில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வரும் இந்த அமைப்பு இனி தேவைதானா என்ற கேள்வி அரசியல் கட்சி பிரமுகர்கள் மட்டுமின்றி, தமிழக மக்கள் பெரும்பாலோரிடம் எழுந்துள்ள நிலையில், அதற்கான முடிவை எடுப்பது அரசின் கையில்தான் உள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.