‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்?’

வெ நாராயணமூர்த்தி

அறியாமையால் அகந்தை பிடித்த ஒரு சிறுவனுக்கு பாடம் புகட்டியதோடு நிற்காமல் அவனுக்கு பிரம்மஞானம் கிடைக்கவும் வழி செய்த ஒரு தந்தை பற்றிய கதை ஒன்றை ‘சந்தோக்ய உபநிஷத்’ வெகு அழகாக விவரிக்கிறது.

முன்னொரு காலத்தில் உத்தலக முனி என்பவர் ஒரு குருகுலபள்ளி ஒன்றை நடத்தி வந்தவர். அவரது மகன் ஸ்வேதகேது. துடிப்பான சிறுவன். தந்தையைப் போல புத்திசாலி. ஆனாலும் அகந்தையில் திளைத்தான். இதைப் பற்றிக் கவலையுற்ற தந்தை, தன் மகனுக்கு உலகஞானம் கிடைக்க வேறு ஒரு குருகுல வேதபள்ளிக்கு அனுப்பினார். சிறுவன் ஸ்வேதகேது தான் சென்ற பள்ளியில் தன் குரு கற்றுத்தந்த அனைத்து வேதசாஸ்திர கல்வியையும் திறம்படக் கற்றுக்கொண்டான். அந்தப் பள்ளியிலேயே முதல் மாணவனாக வீடு திரும்பினான்.

மகனின் அறிவுத் திறமையை சோதிக்க எண்ணிய தந்தை, ‘மகனே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாயா?’ என்று வினவினார். ‘ஆம் தந்தையே. என் குருவுக்குத் தெரிந்த அனைத்தையும் கற்றுக்கொண்டுவிட்டேன். கற்றுக் கொள்ளவேண்டியது இனி ஒன்றும் இல்லை’. என்றான் ஸ்வேதகேது சிறிது அகந்தையுடன். துணுக்குற்ற தந்தை மகனின் அகந்தையை அடக்கி அவனுக்கு நல்ல புத்தி புகட்ட நினைத்து, ‘மகனே உன் திறமையை சோதிக்க ஒரு கேள்வி கேட்கிறேன், எங்கே பதில் சொல் பார்க்கலாம். ‘எந்த ஒன்றை நீ அறிந்தால் உன்னால் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்?’ என்றார்.

இது என்ன புது கேள்வி? பதில் தெரியாமல் திணறினான் சிறுவன். ‘என் குரு இதை சொல்லித்தரவே இல்லையே. அந்த குரு என்னை ஏமாற்றிவிட்டார் அல்லவா’ என்று தன் குருமேல் கோபப்பட்டான். இது போதாதென்று  ‘தந்தையே எனக்கு பதில் தெரியாவிட்டால் அது என் குருவின் தவறு’ என்று தன் தந்தையிடம் குதர்க்கவாதத்திலும் ஈடுபட்டான். ‘சரி போகட்டும். மீண்டும் அந்த குருவிடமே சென்று இதை கற்றுக்கொண்டு வா’ என்று மகனை அனுப்பிவிட்டார் உத்தலக முனி.

கோபத்துடன் சென்ற ஸ்வேதகேது நடந்த விஷயத்தைத் தன் குருவிடம் சொல்லி ஆதங்கப் பட்டான். ‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும் என்கிற ஒரு முக்கியமான ஞானத்தை எனக்கு அளிக்காமல் ஏமாற்றிவிட்டீர்களே’ என்று புலம்பினான்.

மாணவனின் அகந்தையை உணர்ந்த குரு அவனுக்கு தகுந்த விதத்தில் பாடத்தைப் புகட்ட நினைத்தார். ‘ஸ்வேதகேது, நீ நாளை முதல் நம் ஆசிரமத்தில் உள்ள பசுக்களை நன்கு மேய்க்கவேண்டும்.  சுமார் 400 பசுக்கள் உள்ளன. அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் செல். அவை இனப்பெருக்கம் அடைந்து 1000 பசுக்கள் ஆகும் வரை நீ அவைகளைப் பத்திரமாக பாதுகாத்து மீண்டும் இங்கே அழைத்து வரவேண்டும். இப்படி நீ செய்தால் நீ தேடும் ஞானம் உனக்குக் கிடைக்கும்’ என்றார்.

புத்திசாலியான ஸ்வேதகேது சிறிது குழப்பமடைந்தாலும் தன் குரு வார்த்தையைத் தட்டாமல் பசுக்களை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள அடர்ந்த வனத்திற்குள் சென்றான். மேய்ச்சல் பற்றி ஒன்றுமே அறியாத சிறுவனுக்கு பசுக்கள் செய்யும் சேட்டைகள் ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்தாலும் போகப் போக மிகுந்த மன உளைச்சலைத்தந்தது.

தன் குரு தனக்கு கொடுத்துள்ள இந்த வேலை எப்படி தான் தேடிவந்த கேள்விக்கான பதிலைத் தரும்? என்று எரிச்சல் பட்டுக்கொண்டான். இந்த பசு மேய்க்கும் வேலை ‘தேவையில்லாத தண்டனை’ என்றும் எண்ணத் தொடங்கினான், தன்னை பற்றி புரிந்து கொள்ளாத தன் தந்தை மீதும் குருவின் மீதும் கோபம் கொண்டான். ஆனாலும் தான் ஒத்துக்கொண்ட வேலையை எப்படி சிறப்பாக செய்து முடிப்பது எப்படி என்றும் யோசிக்கத்தொடங்கினான்.

முதலில் பசுக்கள் தாங்கள் மேய்வதைவிட்டு தாறுமாறாக ஓடத்துவங்கினாலும், அவைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். சில நாட்களில் அவை அனைத்தும் சிறுவனிடம் அன்பாகப் பழகத் தொடங்கின. தன் கேள்விக்கான பதிலை பற்றி யோசிப்பதை விட்டு பசுக்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று சிந்திக்கத் தொடங்கினான்.

அடர்ந்த வனம் அல்லவா, அருகில் பேச்சுத் துணைக்கு யாரும் இல்லாதலால் தனக்குத் தானே பேசிக்கொண்டான். பசுக்களிடமும் பேசத்தொடங்கினான். சிறிது காலத்தில் தன் கேள்வியையே மறந்தும் போனான். அவன் கவனம் முழுதும் பசுக்கள் மேலேயே லயித்தது. பசுக்களை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். அவைகள் செய்யும் சேட்டைகள், அவைகளின் தேவைகள், அவைகளின் பரிபாஷைகள் போன்றவைகளை தெரிந்துகொண்டான். பசுக்களுடன் பேசவும் தொடங்கினான். பதிலுக்கு பசுக்களும் அவைகளின் பாஷையில்  பேசத்தொடங்கின. பசுக்களிடமும், அவைகளின் கன்றுகளிடமும், மரம் செடி கொடி, பறவைகள், மற்ற விலங்குகள், நீர், நிலம், காற்று, வானம் போன்றவைகளிடமும் தன்நிலை மறந்து பேசத் தொடங்கினான்.

ஆழ்ந்த சிந்தனைகளுடன்அந்த அடர்ந்த வனத்தில் ஒன்றிணைந்து போய்விட்டான் ஸ்வேதகேது. நாட்கள் செல்லச்செல்ல தன்னை சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களும் தன்னிடம் நட்புடன் பழகுவதை உணர்ந்தான். தான் குருகுலத்தில் கற்றுக்கொண்ட வேதசாஸ்த்ரங்களுக்கான விளக்கங்களை நேரடியாக இந்த உயிரினங்களிடையே உணரத் துவங்கினான். அனைத்து உயிரினங்களுக்கும் உள்ளே இருக்கும் ‘அனைத்தையும் உணரும், அனைத்து உயிர்களிலும் வியாபித்து இருக்கும், அனைத்துக்கும் ஆதிகாரணமான பிரம்மனே  தனக்குள்ளும் மற்ற உயிரினங்களுக்கும் இருப்பதால் தன்னால் அனைத்தையும் உணரமுடிகிறது’ என்ற உண்மையை தன் அனுபவ ரீதியாகவேப் புரிந்துகொண்டான். அதனால்தான் தன்னால் பசுக்களுடனும் மற்ற உயிரினங்களுடனும் பேசமுடிகிறது என்பதையும் உணர்ந்தான்.

தான் உணரும் ஆத்மனே, அனைத்து உயிர்களையும் இயக்கும் பிரம்மன். பிரம்மம் ஒன்றே உண்மை. இந்த உலகம் நாம் காணும் வெறும் தோற்றம். ஜீவன் பிரம்மனாகவும் பிரம்மனே ஜீவனாகவும் உணரும்போது அனைத்தும் பிரம்மனே. இந்த உண்மையை உணர்ந்தவனால் மட்டுமே அனைத்தையும் அறியமுடியும். தான் தேடிவந்த கேள்விக்கான பதில் இதுதான் என்பதை தன் குரு தனக்கு உணர்த்திய விதத்தை எண்ணி வியந்தான். தன் அகந்தை அழிந்து போனதை உணர்ந்தான்.

பசுக்களின் எண்ணிக்கை ஆயிரமானதும் அவைகள் ஸ்வேதகேதுவிடம் ஆஸ்ரமம் திரும்பவேண்டிய நேரம் வந்துவிட்டதாக சொல்லின. அகந்தையைவிட்டு பிரம்மஞானத்தை உணர்ந்த ஸ்வேதகேதுவோ நிறைக்குடமாக ஆழ்ந்த அமைதியில் உறைந்து சத்சிதானந்த சொரூபமாக, பசுக்களோடு பசுவாக தன் குருவை சந்திக்கக் கிளம்பினான். இந்தச் சிறுவனின் தேஜசை கண்ணுற்ற குரு அகமகிழ்ந்து ‘1001 பசுக்கள் திரும்பியுள்ளன’ என்று பாராட்டினார்.  தன் குருவிடம் ஆசி பெறும்போது தான் தேடி வந்த கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தான்.

’தத் த்வம் அஸி’ (எந்த ஒன்றை அறிந்துகொண்டால் அனைத்தையும் உணரமுடியுமோ அதுதான் ஆத்மன். நான் தேடியவன்தான் பிரம்மன்) என்கிற மஹாவாக்கியத்தையும் உதிர்த்தான். இந்த வாக்கியம் சாம வேத சாஸ்த்திரங்களில் (சந்தோக்யா உபநிஷத்தில்) முக்கிய சாராம்ஸமாக உள்ளது.  யோசித்துப் பாருங்கள். இந்த ஞானம் ஸ்வேதகேதுவிற்கு சாதாரணமாகக் கிடைத்ததா?

அவனது விடா முயற்சி, தன்னம்பிக்கை, தெரிந்துகொள்ளவதற்கான ஆர்வம், பக்குவம், முனைப்பு, அவனது தேவையை உணர்ந்து, அனைத்தையும் ஒருமுகப்படுத்திய அவனது குரு ஏற்படுத்திதந்த சரியான வாய்ப்பு போன்றவையே இந்தச் சிறுவனால் தன்னை உணரமுடிந்தது. வாய்ப்பு இருந்தாலும் எவ்வளவு பேரால் இதை உணர முடிகிறது? அதன் பின் இருக்கும் பலனை அனுபவிக்க முடிகிறது?

வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, தன்னை வருத்திக் கொண்டு முனைப்புடன் முயற்சி செய்ததால் ஸ்வேதகேது தன்னை உணரமுடிந்தது. தன் தேடலை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடிந்தது. அதனால்தான் ஸ்வேதகேது இன்று உலகமே போற்றும் ஞானியாகி விட்டான்.

ஸ்வேதகேது சிரத்தையுடன் மேற்கொண்ட தியாகங்களும், விடாமுயற்சியும், நம்பிக்கையும், முனைப்பும் பிரம்மத்தை தேடும் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக அமையவேண்டும்.

ஆனால் இதெற்கெல்லாம் மகுடம் சேர்ப்பது ஒரு பிரம்மகுருவின் ஆசியும் வழிகாட்டுதலுமே. அந்தக்காலத்தில் குரு பாரம்பரியங்களும் வேதகுருகுல நியதிகளும், வழிமுறைகளும் மாணாக்கர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக அமைந்தன. இந்தக் காலகட்டத்தில் அத்தகைய மாணாக்கர்களோ குரு பாரம்பரியங்களோ இல்லை.

கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட மாணாக்கர்களோ, கற்றுதரும் திறமை கொண்ட ஞானமார்க்க குருமார்களோ இன்று இல்லை. இந்தக் குறைகளையெல்லாம் களையும்வகையில் அமைக்கக்பெற்றுள்ளதுதான் சென்னப்பமலை திருத்தலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரூபமாக, ஞானசூரியனாக சஞ்சரித்துவரும் பிரம்மகுரு ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள், கடந்த 25 ஆண்டுகளாக தன் சீடன் ஸ்ரீ ராமநாதஸ்வாமிகளின் உடலில் ஐக்கியம் கொண்டு, அருவமே உருவமாகி, நம்முடன் இரண்டறக் கலந்து, ஸ்வேதகேதுவுக்கு கிடைத்த பிரம்மஞானம்  நாமெக்கெல்லாம் கிடைக்க மிகப் பெரிய சேவை செய்து வருகிறார். வேதகால குருமார்கள் போல இந்த குரு நியதிகளையும் சாஸ்திர ஸம்ப்ரதாயங்களையும் இங்கே கட்டாயபடுத்துவதில்லை. ஸ்வேதகேதுவைப் போல புத்திசாலி மாணாக்கர்களுக்கு மட்டுமே ஞானமார்க்க ரகசியங்களை கற்றுத் தருவதில்லை. தன்னை நாடி வரும் அன்பர்கள் தங்களை வருத்திக்கொண்டுதான்  ஞானம் பெறவேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிப்பது இல்லை.

தேடிவரும் யாவருக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் பிரம்ம ஞானம் கிட்ட ஆசீர்வாதம் என்னும் தீட்சையை அள்ளித் தரும் அதிசய குரு இவர். ஆசீர்வாதம் பெற்றவர்கள் அதைப் பெற தகுதியே இல்லாவிட்டாலும், அதன் பலனை அவர்கள் ஓரளவுக்கு தற்காலிகமாவது அனுபவிக்கச்செய்து அவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறார். உண்மையை உணர, தன்னிலை அறிய தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கித்தருகிறார்.  இந்த ஆதிகுருவை அடையாளம் காண முடிந்த ஒரு சிலரை ஸ்வேதகேதுகளாக மாற்றி அவர்கள் வழியாக இந்த உலகிற்கு பிரம்ம ஞானபலன் கிடைக்கச்செய்வதிலும் இவருக்கு நிகர் இவரே.   

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.