உங்கள் வாக்கு யாருக்கு?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சட்டப் பேரவைத் தேர்தல் வந்துவிட்டது. வழக்கம்போல் ஆளும் கட்சியும், ஆட்சியைப் பிடிக்கத் தொடங்கும் கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டன. தற்போதைய நிலையில், கடந்த காலத் தேர்தல்களைக் காட்டிலும் அதிக அளவில் பணத்தை தண்ணீராக செலவிடும் சூழல் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என எல்லாருமே தேர்தல் உத்திகளில் கைத்தேர்ந்தவர்கள். ஆக ஏழ்மை நிலையில் உள்ள வாக்காளர்களையும், ‘பணம்தான் பத்தும் செய்யும்’ என்ற நம்பிக்கை கொண்ட சராசரி வாக்காளர்களையும் திருப்திப்படுத்தும் தேர்தலாகக் கூட மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்று வாய் கிழிய கத்தினாலும், நேர்மையற்ற எண்ணங்களையும், செயல்களையும் கொண்ட வாக்காளர்கள் ஒரு பகுதியினரை அந்த விழிப்புணர்வு சென்றடையப் போவதில்லை. வீடு தேடி வரும் லட்சுமியை யார்தான் வேண்டாம் என மனதார மறுக்கப் போகிறார்கள் என்பது அந்த லட்சுமிக்கு மட்டுமே தெரியும்.

தேர்தல் ஆணையம் சுய அதிகாரம் மிக்கதாக இருப்பினும், அதன் கெடுபிடிகள் எந்த அளவுக்கு நேர்மையான தேர்தலை உறுதி செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத் தன்மை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கான நடைமுறைகளைப் பின்பற்றுதல், வாக்குகளை விலை பேசுதல், வீடுகள்தோறும் சென்றடையும் அன்பளிப்பு பொருள்கள் போன்றவற்றில் களத்தில் உள்ள கட்சிகளின் விழிப்புணர்வு எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பதை பொறுத்தே தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு ஆங்காங்கே அதிகாரிகள் நடத்தும் வாகனச் சோதனைகளில் வணிகர்கள் மற்றும் தொழில் நிமிர்த்தமாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மட்டுமே பிடிப்பட்டு வருவது வழக்கமானதுதான். இதில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், கூரியர் சர்வீஸ்கள், அவை பயன்படுத்தும் வாகனங்கள், அதிகாரத்தில் இருப்பவர்களின் வாகனங்கள், ரயில் மூலம் அனுப்பப்படும் பார்சல்கள், பத்திரிகை, போலீஸ், மருத்துவர், வழக்குரைஞர் என பல்வேறு பணி நிமித்தமான ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் ஆகியவற்றை கூட சோதனைக்குட்படுத்த வேண்டும். ஆனால் அது நடைமுறை சாத்தியமில்லாதது என வாகனச் சோதனை அதிகாரிகள் நினைப்பாளர்களேயானால், நடைபெறும் வாகனச் சோதனைகள் கண்துடைப்பாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் முடியும் வரை இதே நிலைதான் நீடிக்குமோ என்ற அளவுக்கு வாகனச் சோதனை மீது சந்தேகிக்கும் போக்கை மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நடுநிலையாளர்கள் மனதில் எழுப்பி நிற்கிறது. அதுவும் வாகனச் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் நேர்மையானவர்களாக, தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாக தங்களுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளும் பக்குவம் உடையவர்களாக இருப்பது நேர்மையானத் தேர்தலுக்கு அவசியமாகிறது.

அதிகார பலம் படைத்த ஆட்சியாளர்கள், நாளைக்கு பதவிக்கு வந்துவிட்டால் நம்மை பழிவாங்கி விடுவார்கள் என்ற என்ற அச்சம் இன்றைய அதிகாரிகள் எவரிடமாவது இருந்தால் அவர்கள் நேர்மையானவர்களாக செயல்படுவது சந்தேகமே. அதை போக்குவதற்கு தேர்தல் ஆணையம் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தேர்தல் நெருங்க, நெருங்க அள்ளி வீசப்படும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்படும் கருப்புப் பணம் ஆகியவை வாக்காளர்களின் நடுநிலைமையான வாக்குரிமையை நிலைக்குலைய வைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நம்மை ஆளும் அதிகார பீடத்தில் அமரவைக்கும் வாக்குரிமை நமது விரல் நுனியில் உள்ளபோது அதை சரியாக பயன்படுத்துவது ஒவ்வொரு வாக்காளரின் கடமை. இன்றைக்கு பணம் தந்து தனது வாக்கை விலைக்கு வாங்குபவர்கள் நிச்சயமாக ஆட்சியில் நேர்மையானவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை படித்தவர்களைக் காட்டிலும், படிக்காத பாமரர்கள் அதிகம் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் நம் ஒரு வாக்குதான் குறிப்பிட்ட ஒருவரை பதவியில் அமர வைக்கப் போகிறதா என்ற அலட்சியமும், இன்றைய நம் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு வாக்குகளை விற்பது ஒன்றும் பெரிய தவறில்லை என்ற சமாதானப் போக்குமே பெரும்பாலோரிடம் நிரம்பி வழிகிறது.

கட்சிகள் அள்ளி வீசும் கவர்ச்சித் திட்டங்கள் நமக்கும், நம் குடும்பத்துக்கும் எந்த வகையில் பலனளிக்கும், இதனால் நம் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு உயரும் என்பதை யோசனை செய்து பார்த்தால், ஆதாயத்தை எதிர்நோக்கும் கட்சிகள் நம் வாக்குகளை ஏமாற்றி பிடுங்குவது நமக்குத் தெளிவாகத் தெரியவரும்.

அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகரமான அறிவிப்புகள், தேர்தலில் முறைகேடாக நம் வாக்கை பறிக்கத் துடிக்கும் கட்சிகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு என் வாக்கை நேர்மையாக செலுத்த விரும்புகிறேன் என்ற மனநிலை ஒவ்வொருவருக்கும் வந்தால்தான் நம் வாக்குரிமையின் வலிமை என்ன என்பது தெரியும். அதற்கான வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்.

நாட்டில் வீடுகள்தோறும் வேலையில்லா இளைஞர்கள், இளம்பெண்கள், வணிகமயமான கல்வியால், உயர்கல்வி பயில வாய்ப்புகள் கிடைத்தும் வசதியின்மையால் மறுக்கப்படுதல், வேளாண்மைக்கும், குடிநீருக்கும் ஆண்டுதோறும் போராடும் மக்கள், இன்னமும் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாத பல கிராமங்கள், நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் சாலைகள் இருந்தும் அவை ஆட்சியாளர்களின் சுயநலத்தால் எப்போதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் பரிதாபம், நாள்தோறும் உடல் உழைப்பு செய்து ஈட்டிய பணத்தை மதுபானக் கடைகள் வழியாக அரசாங்கமே பிடுங்கிக் கொள்ளும் போக்கு, குழந்தை பேறு முதல் மயானம் வரை தலைவிரித்தாடும் லஞ்சம், காவல் நிலையங்களில் செல்வாக்குமிக்கவர்கள் பக்கமே நியாயம் நிற்பது போன்ற சமூக அவலங்களை களைவதற்கு நல்ல திட்டங்களையும், செயல்பாடுகளையும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சி இந்த தேர்தலில் முன்னெடுத்து வாக்குறுதியாக அளிக்கிறதா என்று பாருங்கள். ஆம் என்றால் அவற்றுக்கு வாக்களிப்பதில் தவறில்லை.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாருங்கள். அவர்கள் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார்கள், குற்றப் பின்னணி, வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள் (அதற்கான வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தந்துள்ளது). ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால், அவர் நாம் மிக எளிமையாக அணுகக் கூடியவராக இருந்தாரா என்பதை அறிந்துகொள்ளுங்கள். வெற்றிக்கு பிறகு அவரது தோரணையும், செயல்பாடுகளும் சுயநலப்போக்குடன் இருந்திருந்தால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவரை மீண்டும் தேர்வு செய்யும் மனப்போக்கை நாம் கைவிடுவதில் தவறில்லை.

கடந்த முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர் தனது உறவினர்கள் பெயரிலோ, தனக்கு வேண்டியவர்களுக்கோ குடிநீர், சாலை, கட்டடத் திட்டப் பணிகளை பெற்று அப்பணிகள் முறையாக செயல்படுத்தாமலோ, தரமற்றதாக இருந்தாலோ அவரை இத்தேர்தலில் நிராகரிப்பதில் தவறில்லை.  

தேர்தல் காலத்தில் மட்டுமே கும்பிடு போடுபவர்களாகவும், பதவி கிடைத்த பிறகு பொதுமக்களிடம் காரில் அமர்ந்துகொண்டு எடுத்தெரிந்து பேசுபவர்களாகவுமே இருக்கக் கூடியவர்களால் வரும் 5 ஆண்டுகளில் எந்த பயனும் இல்லை என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

இலவச சாதனங்கள் என்னும் ஏமாற்று அறிவிப்புகளை இன்னமும் நாம் நம்புவது முட்டாள்தனம். ஒவ்வொரு ஆட்சியிலும் அறிவிக்கப்பட்ட இலவச சாதனங்கள் அந்த ஆட்சி நிறைவடைவதற்குள்ளாகவே (தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்டவை) இன்னும் சொல்லப்போனால் ஒரு சில மாதங்களிலேயே பழைய பொருள்களை எடைக்கு வாங்கும் கடைகளுக்கு சென்றடையும் அளவுக்கு தரமற்றவை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

அப்பா இந்த கட்சிக்கு வாக்களிப்பார், அம்மா இந்த கட்சிக்கு வாக்களிப்பார். நானும் இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற அடிமை உணர்வுகளை தூக்கியெறியுங்கள்.

தலைமை பொறுப்புக்கு அறிவிக்கப்பட்டவர் நேர்மையானவாராக இருக்க வாய்ப்பு உள்ளதா, அவரது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் முடிந்தவரை நேர்மையை கடைப்பிடிக்கக் கூடியவர்களாக இருப்பார்களா என்று எடை போடுங்கள். புதியவராக இருந்தால் அவர் சொத்து மதிப்பை கணக்கிடுங்கள். அவருக்கு குற்றப் பின்னணி ஏதேனும் இருக்கிறதா என்று அறிந்துகொள்ளுங்கள். உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன்தான் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என உங்கள் மனசாட்சி நம்பினால் அவருக்கு வாக்களியுங்கள்.

உங்களின் ஒரு வாக்கு அவரை வெற்றி பெறச் செய்துவிடப் போகிறதா என்று அலட்சியம் செய்வதுதான் முட்டாள்தனம். உங்களுடைய ஒரு வாக்குக் கூட அவருக்கு வெற்றி வாய்ப்பை தரக் கூடும் என நம்புங்கள். வாக்களிப்பதற்கு சற்று நேரம் முன்பு தனிமையில் நடுநிலையோடு யோசித்துப் பாருங்கள். உங்கள் மனசாட்சி நிச்சயமாக நேர்மையான வேட்பாளர் ஒருவரை சுட்டிக் காட்டும். அவர் பிரபலமான கட்சியின் பின்னணி உடையவராக இல்லாமல் இருக்கலாம். இவர்தான் வெற்றி பெறுவார் என ஆருடம் சொல்பவர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாமல் இருக்கலாம். அவர் நன்கு படித்தவராகவோ அல்லது பள்ளிப் படிப்பைக் கடக்காதவராகவோக் கூட இருக்கலாம். அது பற்றிய கவலை உங்களுக்குத் தேவையில்லை.

உங்களின் வாக்கு நேர்மையானது. அது எந்தவிதத்திலும் சமரசத்துக்கு இடம் கொடுக்காத வலிமைமிக்க வாக்கு என்பதை உணர்ந்தாலே நமக்கு நல்ல ஆட்சியாளர்கள் கிடைப்பார்கள். அது இத்தேர்தலில் கூட சாத்தியமானதுதான்.

நம்பிக்கையோடு வாக்களியுங்கள் – நல்லவர்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.