புதிய ஆட்சித் தலைமைக்கு காத்திருக்கும் சவால்கள்

சென்னை, மே 3: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தல் தமிழகத்தில் பரபரப்பாக நடந்து, அதன் முடிவுகளும் வந்துவிட்டன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக 6-ஆவது முறையாக அரியணை ஏறியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி இல்லாத சூழலில், அக்கட்சி கட்டுக்கோப்புடன் செயல்பட்டு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாராட்டுக்குரியது. ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்து நிதானமான, எச்சரிக்கையான செயல்பாடுகள் மூலம் பல எதிர்ப்புகளையும் மீறி, குறிப்பாக சொல்ல வேண்டுமானால், வாரிசு அரசியல், குடும்ப அரசியல், திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் செய்வார்கள். மனைகள், நிலங்கள் அபகரிக்கப்படும். கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவர், இந்துக்களுக்கு எதிரான கட்சி, விஞ்ஞான ஊழல் கட்சி என்றெல்லாம் நடத்தப்பட்ட அரசியல் பரப்புரைகளைக் கடந்து பெற்ற வாக்குகளால் இன்றைக்கு திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில், மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவை அரசு அதிகாரிகள் எளிதில் அணுகுவது இயலாத ஒன்றாகவே இருந்தது. அத்தகைய நிலையை தகர்த்தெறிந்த பெருமை எடப்பாடி கே. பழனிசாமிக்கு உண்டு. கடந்த 4 ஆண்டுகளில் மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றில் அவர் முனைப்புக் காட்டி வந்ததால் ஆட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு அலை குறைவாகவே இருந்து வந்தது.

ஆனால், ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளுக்கும் கண்மூடித்தனமாக தலையசைத்து வந்ததன் காரணமாக, மொழி, இனம், சமூகம், கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழகம் பின்தங்கி, பாதிப்புகளைச் சந்திக்கத் தொடங்கியபோது பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை நீறுபூத்த நெருப்பாக எழுந்தது.

ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தூண்களில் ஒன்றாக விளங்குபவை ஊடகங்களும், பத்திரிகைகளும். அதிமுக கடந்த 2011-இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தப் பிறகு – நடுநிலை – என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஒருசில ஊடகங்களும், நாளிதழ்களும் தங்கள் கடமையைச் செய்ய தவறின என்றே சொல்ல வேண்டும். அவை தங்களுக்கும், தங்கள் தலைமைக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவிதங்களில் உதவிபுரிந்த ஆளும் அரசை விமர்சிப்பதைத் தவிர்க்கத் தொடங்கின.

டெண்டர் முறைகேடுகள், அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம் தலைவிரித்தாடியது, அரசுத் திட்டப் பணிகளின் பெரும்பகுதி பணம் மறைமுகமாக கொள்ளைபோனது போன்றவற்றை சுட்டிக் காட்ட அவை தயங்கின. 2012 மே 2-இல் ஆட்சி மாற்றம் வரும் வரை தங்களின் நிலைப்பாட்டை அவை மாற்றிக்கொள்ளாதது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட களங்கமே.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

என்ற திருக்குறள் வரிகளுக்கு ஏற்ப இன்றைக்கு அரியணையில் இருந்து அதிமுக அகற்றப்பட்டுள்ளது.

மாணவப் பருவத்தில் திமுகவின் அடிமட்ட தொண்டனாக இணைந்து, இன்றைக்கு முதல்வர் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின், இந்த இடத்தைப் பிடிக்க அரை நூற்றாண்டு காலம் என்ற நீண்ட அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கு ஒரே காரணம் கட்சியின் தலைவர் மகன் என்பதே. குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற முகமூடியை திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் அணிவித்த நிலையில், தனது மகனை உயர்ந்த பொறுப்பில்  உடனடியாக அமர்த்த மறைந்த முதல்வர் மு. கருணாநிதி தயங்கினார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

நாமாக மு.க.ஸ்டாலினை உயர் பதவியில் அமர வைப்பதைக்காட்டிலும், மக்களே அவரை அமர்த்துவதுதான் சிறந்தது. அது எதிர்காலத்தில் நிகழும் என மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி நினைத்திருக்கலாம். அவரது  நம்பிக்கை இன்றைக்கு வீண் போகவில்லை.

பல சவால்களைச் சந்தித்து விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின், இன்னும் பல சவால்களை சந்திக்க வேண்டியவராக இருக்கிறார் என்பதுதான் உண்மை.

முதலில் அவர் கரோனாவால் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு காத்திருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையை திமுக தனிப்பட்ட முறையில் பெற்றாலும் கூட,  திமுக மக்கள் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதைத் தடுக்க மத்திய, மாநில அளவிலான எதிர்க் கட்சிகள் தயாராக இருப்பதையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தேர்தல் களத்தில் இறங்கியபோது மக்களிடம் திமுக அளித்த வாக்குறுதிகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டிய கடமையும் காத்திருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆளும் கட்சியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும், இதுவரை கரை வேட்டி கட்டாமல் இருந்த திமுகவினர்  கரை வேட்டிக் கட்டி, கார்களின் முகப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தையும், சட்டைப் பையில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் புகைப்படங்களையும் வைத்துக்கொண்டு வலம் வர ஆசைப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.

ஆனாலும், கரை வேட்டிக் கட்டிக் கொண்டு,  கட்டப் பஞ்சாயத்து முதல் காவல் நிலையம் வரை கட்சியையும், ஆட்சியையும் களங்கப்படுத்த முற்படுவோரை மு.க.ஸ்டாலின் எப்படி இரும்புக்கரம் கொண்டு தடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே அதிமுக தேர்தல் நேரத்தில் திமுக மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கான விடை கிடைக்கும்.

அரசு அலுவலகங்களில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலநிலையை நீண்டகாலமாக மக்கள் சந்தித்து வருகின்றனர். இதைத் தடுக்க சுயஅதிகாரம் கொண்ட, நேர்மையாக, சுறுசுறுப்பான அலுவலர்களைக் கொண்டதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு செயல்பட வேண்டும்.

கட்டமைப்பு திட்டப் பணிகள், மக்கள் நலப் பணிகள், வேலை வாய்ப்புகள், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஊழல் மீண்டும் தலைதூக்காத வகையிலான கட்டமைப்புகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள், சட்ட விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

பெரும்பாலான நகர்ப்புறங்களில் ஆளும்கட்சி போர்வையில் ரௌடிகள் வீதியோர கடைக்காரர்களிடமும், வியாபார நிறுவனங்களிடமும் மாமூல் வசூலிப்பது பெருகிவிட்டது. அதைத் தடுக்க வேண்டும்.

காமராஜருக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வந்தபோதும், காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுக்கு முழு தீர்வு காணப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். மக்களுக்கு பாதுகாவலர்களாக, குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டிய காவல் துறையினரில், ‘வேலியே பயிரை மேய்வது’ போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும், காவல் நிலையங்களில் யார் புகார் கொடுத்தாலும் 24 மணி நேரத்துக்குள்  நேர்மையாக பதிவு செய்வதோடு, ஆளும் கட்சி தோரணையில் அதிகாரிகளை மிரட்டுவோரைத் தடுக்கவும் வேண்டும்.

இன்றைக்கு போக்குவரத்துக் காவலர்கள் என்றாலே 10, 20-க்கும் கைநீட்டுபவர்கள் என்ற இழிவான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பணத்தை விட மானமும், கடமையும் பெரிது என்ற மனநிலையை அனைத்துத் தரப்பு அலுவலர்களிடம் ஏற்படுத்துவதற்கான புத்தாக்கப் பயிற்சியை நடத்த வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் தனது தொடக்க ஓட்டத்திலேயே அபார வெற்றியைப் பெற்றுள்ளார். வாரிசு அரசியல் குற்றச்சாட்டு ஏற்கெனவே திமுகவுக்கு இருப்பதைக் கருத்தில்கொண்டு, உடனடியாக புதிய அமைச்சரவையில் அவர் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

கடவுள் மறுப்பு கொள்கையைக் கொண்ட திமுக, இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற முத்திரையை ஆதிக்க சக்திகள் பதிக்க முயல்வதைத் தடுக்க, திருக்கோயில்கள் அனைத்தையும் பராமரிக்கும் பொறுப்பை சுயஅதிகாரம் கொண்ட கட்சி சார்பற்ற, ஆன்மிகவாதிகளைக் கொண்ட அறங்காவலர் குழுக்களை அமைக்க தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். திருக்கோயில்களின் நிலங்களை எவரும் ஆக்கிரமிப்பதை அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களை பாரபட்சமின்றி பறிமுதல் செய்ய வேண்டும். சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத்தலங்களின் சொத்துக்களுக்கு உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இந்துமத வழிபாட்டுத் தலங்களுக்கும் உருவாக்கப்பட வேண்டும். திருக்கோயில்களில் கட்டண வழிபாட்டு முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அனைத்து மதத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் பெயர் அளவிலேயே உள்ளது. அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆளும் கட்சியின் தவறுகளை நேர்மையான முறையில் சுட்டிக் காட்டுவோரை, மறைமுகமாக தண்டிப்பதை திமுக அரசு தவிர்க்க வேண்டும். சுட்டிக் காட்டப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை அறிந்து அவற்றை களைய முற்பட வேண்டும்.

ஆட்சி நடத்துவது வியாபாரமல்ல, மக்கள் நலத்தொண்டு. அதற்கு விளம்பரம் தேவையில்லை. நல்ல திட்டங்களும், செயல்பாடுகளும் தானாகவே மக்களிடம் சென்றடைந்து நல்லாட்சி வித்துக்களை விதைக்கும். நாமாக நம்மை பற்றி பெருமையாக விளம்பரம் தந்து பெயர் பெற முயற்சிப்பது தவறு என்ற பாடத்தை அதிமுக கற்றுக் கொண்டுள்ளது. இதை திமுகவும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்தாலே திமுக ஆட்சியை இன்னும் 2 தலைமுறைகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்பது திண்ணம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.