பசுவும், புலியும்…
அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அண்மைகாலமாக முகநூலில் உலா வருகிறது.
அதில் ஒரு பசு மாட்டை இரவு நேரத்தில் தினம்தோறும் புலிக்குட்டி ஒன்று வந்து பார்த்து கன்றுபோல் பசுவிடம் உரிமை கொண்டாடுகிறது. பசுவும் கன்றை நாவினால் தடவிக்கொடுப்பதுபோல் புலிக்குட்டியையும் தடவிக் கொடுப்பது புகைப்படங்களாக வைரலாகி வருகின்றன.
எந்த கிராமத்தில் இச்சம்பவம் நடந்தது என்பது அதில் இல்லை. ஆனால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள இந்த நேரத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ…
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் பசு மாடு ஒன்றை அண்மையில் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வாங்கி வந்துள்ளனர்.
அந்த பசு வந்த பிறகு இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கத் தொடங்கியுள்ளன. ஊரடங்கு நேரத்தில் யாரோ திருடர்கள் கிராமத்துக்கு வந்து செல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிசிடிவி கேமரா வைத்துள்ளனர். அதில் பதிவான விடியோ பதிவுதான் இவை.
பசு மாட்டை வாங்கி வந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது, சிறுத்தைக் குட்டி ஒன்று பிறந்த சில நாள்களில் தாயை இழந்துள்ளது. இந்நிலையில், அக்குட்டி பால் குடிக்க அந்த பசுவிடம் அனுமதித்துள்ளனர். அதுவும் சில நாள்கள் பால் குடித்து வந்துள்ளது. அந்த குட்டி சற்று பெரிதானதும், அதை காட்டில் விட்டுவிட்டு வந்துள்ளனர்.
இருந்தாலும் இரவு நேரங்களில் அந்த குட்டி தனக்கு பாலூட்டிய பசுவை வந்து பார்த்துவிட்டு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்ததாம்.
இந்நிலையில்தான் பசுவை அந்த கிராமத்தில் உள்ளவருக்கு விற்றுவிட்ட நிலையில், அதை தேடிக் கண்டுபிடித்து வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
உருவம் வேறானாலும் தாயுள்ளமும், சேயுள்ளமும் ஒன்றுதான்.
You must log in to post a comment.