பரிசோதனையில் கொரோனா தடுப்பூசி!
கொரோனா நோய்த் தொற்று யாரை அச்சுறுத்தியுள்ளதோ இல்லையோ, அமெரிக்காவை ரொம்பவும் அச்சுறுத்தி வருகிறது.
அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்துவிட்டது. இந்நிலையில், கொரோனாவுக்காக தீவிர கண்டுபிடிப்பில் இறங்கியுள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்து குரங்குகளுக்கு சோதனை செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
அடுத்தக்கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உலகுக்கு சற்று ஆறுதலான விஷயம்தான். இதற்கு பல ஆயிரக்கணக்கான கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. இதுபுறம் இருக்க தமிழகத்தில் சித்த மருத்துவர்கள் சிலர் அரசை நாடி பரிசோதனை முயற்சியாக சென்னையில் சில பகுதிகளில் மூலிகை குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஒருவேளை சித்த மருத்துவம் கொரோனா நோய்த் தொற்றை குணப்படுத்தினாலும் கூட, அதை உடனடியாக ஆங்கில மருத்துவம் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவே. காரணம் இயற்கை மூலிகை வைத்தியத்துக்கும், இரசாயன கலவை ஆராய்ச்சிகளுக்கும் எப்போதுமே மோதல்தான். எதையுமே அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் சித்த மருத்துவத்துக்கு உண்டு. அதற்கான வலிமையை “ஆயுஷ்” போன்றவை கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.
தற்போது வரை கொரோனா நோய்த் தொற்றால் 56 லட்சம் பேரை பாதித்துள்ளது. 3 லட்சத்து 51,668 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 17 லட்சத்து 25,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 1 லட்சத்து 580 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள – பெத் இஸ்ரேல் டியாகோனஸ் மெடிக்கல் சென்டர் – ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் சாதகமான முடிவை தற்போது தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து முதலில் குரங்குகளுக்கு செலுத்தப்பட்டது. அதில் கொரோனா வைரஸை கொல்லும் அளவுக்கு எதிர்ப்பு சக்தியை அக்குரங்குகள் பெற்றது அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
அடுத்து மனிதர்களிடம்தான் சோதனை செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆக இவ்வாண்டு இறுதிக்குள் கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் தடுப்பு மருந்து தயாராகிவிடும் என நாம் நம்பலாம். அதுவரை நாம் தனிமனித இடைவெளி, முகக்கவசம், சுகாதாரம் பேணுதல், பொதுஇடங்களில் எச்சில் துப்பாது இருத்தல், பணிபுரியும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதுதான் இப்போதைய நிலை என்பதையும் நாம் உணர வேண்டும்.
You must log in to post a comment.