கொரோனா: மதுரையில் குணமடைந்த 874 பேர் இல்லம் திரும்பினர்
மதுரை, ஜூலை 2: மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 874 பேர் பூரண குணமடைந்து அவரவர் இல்லம் திரும்பியதாக
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு 5 முறை ஊரடங்கை நீட்டித்தது. அதைத்தொடர்ந்து 6-ஆவது முறையாக சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இந்த முழு ஊரடங்கு காலத்தில் ஆரம்ப நிலையிலே நோய்த் தொற்றை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து அதன் மூலமாக நோய்த் தொற்று ஏற்பட்டவர்களை 100 சதவீதம் காப்பாற்றுவதை இலக்காக வைத்து முதல்வர் எடுத்த வருமுன் காப்போம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விழிப்புணர்வுடன் கூடிய மக்களுடைய முழு ஒத்துழைப்பும் நமக்கு தேவைப்படுகிறது.
இருந்தபோதிலும் கவனக்குறைவாகவோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவோ இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுவிட்டால் அவர்களை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் கொடுப்பதற்கு மூன்று வகையான அனுமதி கிடைத்திருக்கிறது.
பொதுவாகவே மூன்று அல்லது நான்கு மாதங்கள் இந்நோய் உச்சத்தைத் தொட்டுதான் படிப்படியாக குறையும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி மதுரை மாவட்டம் ஜூன் மாதம் வரை நோய் கட்டுக்குள் நோய்த்தொற்று எண்ணிக்கை இருந்தது. ஒரு மாதம் தளர்வு செய்யப்பட்ட போது வெளி நாடுகளிலிருந்து விமானத்தில் வருபவர்கள், வெளி மாநிலங்களிலிருந்து ரயிலில் வருபவர்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சாலை மார்க்கமாக வருபவர்கள் ஆகியோர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது தொற்று அதிகமாக உள்ளது. இருந்தபோதும் மதுரையில் உள்ள 35 இலட்சம் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
மாநகராட்சி மகளிர் சுயஉதவிக்குழுக்களுடன் வீடு வீடாகச் சென்று காய்ச்சல்,
சளி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனைகளுக்கு பொதுமக்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். எந்த அறிகுறியும் இல்லாமல் நோய்த் தொற்று வருபவர்களையும் கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 874 நபர்கள் பூரணமாக குணமடைந்து அவர்களது இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பி.செல்வராஜ்,
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி, துணை இயக்குநர் (சுகாதாரம்) பிரியா ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must log in to post a comment.