கொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை

சென்னை, மே 8: முதல்வர் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா நோய்ப் பரவல் இணைப்புச் சங்கிலியை உடைத்தெறிய இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இதுதொடர்பாக சுதேசமித்திரனின் 7.5.21-இல் தலையங்கத்தில் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுப்பது காலத்தின் கட்டாயம் என்பதை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 10-ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என சனிக்கிழமை அறிவித்தது அனைத்துத் தரப்பு சமூக ஆர்வலர்களாலும் வரவேற்கப்படுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது, மாவட்டத்துக்குள் செல்வது ஆகியவற்றுக்கான அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, அத்தியாவசியமாகக் கருதப்படும் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை திறந்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு கொரோனா அரிசி குடும்ப அட்டைதாரரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் 10-ஆம் தேதி முதல் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதும் வரவேற்புக்குரியது. முழு ஊரடங்கு தொடர்பாக ஒருசிலர் எதிர்ப்புகளையும், அரசை கிண்டல் அடித்து மீம்சுகள் போடுவதையும் காண முடிகிறது. இருப்பினும், நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள், நோயின் வீரியம் குறித்து அறிந்துள்ள மருத்துவர்கள் முழு ஊரடங்கு நடவடிக்கையை பாராட்டவே செய்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே ஏராளமான எதிர்ப்பு மீம்சுகள், விமர்சங்களை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டு இறக்கப்பட்டவர்களால் வைக்கப்படுவது ஆரோக்கியமானது அல்ல.

புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், நிதி நிர்வாகம், கடந்த ஆட்சியின் திட்டங்கள், செயல்பாடுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்றவற்றை தீர அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். இதற்கு நிதானமான காலஅவகாசத்தை தார்மீக ரீதியாக வழங்குவதுதான் நல்ல அரசியல் கட்சிகளுக்கான கடமை. அதை பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் விமர்சன வித்தகர்கள் கடைபிடிப்பதும் அழகு.

தற்போதைய சூழலில், பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீள்வதற்கு எத்தகைய நடவடிக்கைகளை அரசு எடுப்பது நல்லது போன்ற ஆலோசனைகளை வழங்குவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களின் கடமை.

முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் முதல்நாளிலேயே புகழுரை, பொய்யுரைகளை கேட்க விரும்பவில்லை. அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்னைகளைச் சந்திக்க வேண்டும் என ஆட்சியர் கூட்டத்தில் கூறியதோடு, ஒவ்வொரு துறையும் சிறந்து விளங்க திறமைவாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து நியமித்துள்ளார். இதன் மூலம் அந்தந்தத் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டு முதல்வரின் பணியை எளிதாக்கி விடுவர் என்பதில் ஐயமில்லை.

கொரோனா நோய்த் தடுப்புப் பணிக்காக ரூ.59 கோடியை முதல்கட்டமாக புதிய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிப்பது, சானிடரி பொருள்கள், இதர உபகரணங்கள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகையின் பெரும்பகுதி முறைகேடு செய்யப்பட்டதாக புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தவண்ணம் இருந்தது. அதுதொடர்பாக உரிய விசாரணையை தற்போதைய தொடங்குவதோடு, இப்போது ஒதுக்கீடு செய்யப்படும் தொகை முறையாக முறைகேடுகள் இன்றி செலவிடப்படுகிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.