சென்னை தவிர பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி
சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
நாளை மறுநாளுடன் 4-ஆவது கட்ட ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் உள்ள பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்பினால் அவர்களை உரிய முறையில் அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கியுள்ள சூழலில் வெளிமநிலத் தொழிலாளர்கள் இங்கேயே தொடர்ந்து தங்கி பணிபுரிய விரும்பினால் அவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் மாநிலத்துக்குச் செல்ல ஆன் -லைனில் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தால் அதிகாரிகள் அதனை பொருட்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு தளர்வுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தளர்வுகளை அறிவிக்கும்போது மாவட்ட ஆட்சியர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தியப் பிறகே இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
சென்னையை தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் உள்ளது என்றார் முதல்வர்.
You must log in to post a comment.