இந்தியர்களிடம் சூதாட்டம் மூலம் பணம் சுரண்டும் சீனா
EXCLUSIVE REPORT
ஆர். ராமலிங்கம், பத்திரிகையாளர்
சென்னை: இந்திய இளைஞர்களை சீரழிவுப் பாதைக்கு திருப்பவும், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் சீனா திட்டமிட்டு 50-க்கும் மேற்பட்ட வண்ண முன்கணிப்பு (COLOUR PREDICTION GAME) இணையதளம்|செயலிகளை இந்தியாவில் பரவச் செய்துள்ளது.
இணையதள வடிவிலும், செயலிகள் வடிவிலும் இந்திய இளைஞர்களின் செல்போன்களில் கடந்த 3 மாதங்களாக குடியேறி வருகின்றன. 2018-ஆம் ஆண்டில் இருந்து இவை செயல்படுவது போன்று காண்பிக்கப்பட்டாலும், கடந்த 3 மாதங்களாகத்தான் இந்த சூதாட்டம் இந்தியாவில் பரவித் தொடங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கவும், அதை இந்திய இளைஞர்கள் வழியாக செயல்படுத்தவும் இதை திட்டமிட்டே சீனா செய்கிறதோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடையேயும், நாட்டுப் பற்றாளர்களிடையேயும் எழுந்துள்ளது.
இந்திய எல்லையில், லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய-சீன உறவில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இச் சூழலில் இந்திய கலாசார, பொருளாதாரத்தில் சீரழிவை ஏற்படுத்தி வந்த சீனச் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற குரல் நாட்டு மக்களிடையே எழுந்தது. அதைத் தொடர்ந்து அண்மையில் மத்திய அரசு 59 சீனச் செயலிகளை தடை செய்தது
இத்தகைய சூழலில் ஆடை, ஆபரணங்கள் ஆன்-லைன் ஷாப் என்ற பெயரில் வண்ண முன்கணிப்பு ((COLOUR PREDICTION GAME) சூதாட்டங்களை மறைமுகமாக இந்தியாவுக்குள் சீனா ஊடுருவச் செய்து லட்சக்கணக்கான இளைஞர்களை அதன் வலையில் விழச் செய்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக அவரவர் இல்லங்களில் அடைந்துகிடக்கும் இளைஞர்கள், பொழுதுபோக்கு அம்சங்களை நாடுவோர், வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க ஆசைப்படுவோரை குறித்து இந்த சூதாட்டம் நடத்தப்படுகிறது.
வீட்டில் இருந்து நாள்தோறும் ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு இந்த செயலிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரை இழுக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்த இணையதளங்களின் முகப்புகள் பெரும்பாலும் ஆன்-லைன் ஷாப்பிங் அமைப்புகளைக் கொண்டுள்ளன. இவற்றின் உள்ளே நுழைவதற்கு பெயர், செல்போன் எண், இணையதள முகவரி கேட்கப்படுகிறது. இவற்றை பதிவு செய்ததும் வின்கோ|வின் என்ற பெயர்களில் வண்ண கணிப்பு சூதாட்டப் பக்கத்துக்கு செல்கின்றன.

அத்துடன் இந்த சூதாட்டத்துக்கு மற்றவர்களை பரிந்துரைப்போருக்கு பரிந்துரை கமிஷன் (Referral commission) வழங்கப்படுகிறது. இதனால் இளைஞர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர், பெண்கள் உள்பட யூடியூப், குவாரா, வாட்ஸ்அப் போன்ற அனைத்து சமூக ஊடங்களிலும், அனைத்து இந்திய மொழிகளிலும் பிரபலப்படுத்தி வருகின்றனர். இது நாட்டின் பொருளாதாரத்துக்கு வேட்டு வைப்பதோடு, இந்திய தனிமனித தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதை இன்னும் அறியாமலேயே இந்த சூதாட்டத்துக்கு இந்திய இளைஞர்கள் துணை போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த செயலிகளில் தனது இ-மெயில் முகவரி, செல்போன் எண்ணை கொடுத்து ரூ.100 முதலில் செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து சிவப்பு, பச்சை அல்லது வாடாமல்லி வண்ணங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அந்த வண்ணம் அடுத்ததாக வரும் என கணித்து பணம் கட்ட வேண்டும். அப்படி கணித்த வண்ணம் வந்தால் கட்டிய பணத்தைப் போல் மற்றொரு மடங்கு பணம் வரும். அதிலும் சேவை கட்டமாக ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் ரூ.1 எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு இரண்டரை நிமிட காலத்துக்கு ஒரு முன்கணிப்பு வீதம் 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த சூதாட்டத்தில் ரூ.10 முதல் 10-இன் மடங்கில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பந்தயம் கட்டலாம். இந்த சூதாட்டத்தில் நண்பர்களையும், உறவினர்களையும், லாட்டரி டிக்கெட், சூதாட்ட ஆர்வம் உள்ளவர்களையும் சேர்க்க பலநிலை சந்தைப்படுத்தும் முறை Multi level maketing) பின்பற்றப்படுகிறது.
சூதாட்டத்தில் புதிதாக நுழைந்தவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அடுத்து குறிப்பிட்ட வண்ணம் வரும் என முன்கணிப்பு யோசனை கூறுவதற்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பும் பிரதிநிதிகளும் உள்ளனர். இந்த சூதாட்டம் இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் ஒரு கோடி பேர் வரை இந்த சூதாட்டத்துக்கு அடிமையாகும் நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது..

இந்த சூதாட்டத்தில் நுழைவதற்கு செல்போன் எண், பெயர், இ-மெயில் முகவரி, வாட்ஸ்அப் பயன்பாட்டு எண், பந்தயத்தில் வெற்றி பெற்றால் பணத்தை பெறுவதற்கு வங்கிக் கணக்கு எண், இதர முக்கிய ஆதாரங்கள் என அனைத்தும் இந்த செயலி மூலம் பெறப்படுகிறது. இதனால் மிகப்பெரிய தனிமனித பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்படும். செல்போன் எண், இமெயில் முகவரி, ஆதாரங்கள் போன்றவைதான் வங்கிகளில் நாம் போடும் பணத்துக்கு பாதுகாப்பான அம்சங்களாக உள்ளன. அவற்றை ஏதோ அடையாளம் தெரியாத முகவரிக்கு கொடுத்துவிட்டால் நம் பணத்துக்கு காப்பு இல்லை என்பதை பலரும் உணரவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆடை, ஆபரண ஆன்-லைன் வர்த்தக இணையதளங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் இந்த சூதாட்ட செயலிகள் புகுத்தப்பட்டுள்ளது பொது பார்வையில் இருந்து தப்பிக்கவே என்றும், ஒருசில இணையதளங்களில் தங்களை பற்றி தவறான தகவல் பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டல் வாசகங்களும் இடம்பெற்றுள்ளதாக இத்தளங்களை ஆய்வு செய்த மென்பொறியாளர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய சூதாட்ட இணையதளங்கள், டிரெடிங் செயலிகள் அனைத்தும் சீன நாட்டில் இருந்து செயல்படுவதாக இவற்றை மிக ஆழமாக ஆய்வு செய்துள்ள பொறியாளர்களில் ஒருவரான பிரணவ் வெங்கட் கடந்த 22-ஆம் தேதி மீடியம்.காம் இணையதளத்தில் தான் பதிவு செய்துள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணையதளங்கள், செயலிகளுக்கு இந்தியாவில் எங்கும் அலுவலகங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்திய இளைஞரைகளை குறி வைத்து சீனா சூதாட்ட ஆர்வத்தை தூண்டி வருவதன் நோக்கம் – இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதே என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர். செயலியில் நாம் குறிப்பிட்ட விவரங்களை வைத்து ஒரே நாளில் சில மணி நேரங்களில் அனைத்து வங்கிக் கணக்குகளில் இருந்து அவரவர் பெயர்களில் பணத்தை அபகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வண்ண முன்கணிப்பில் இந்திய இளைஞர்கள் கட்டும் பணத்தில் பாதித் தொகை மட்டுமே வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் செல்கிறது. குரங்கு அப்பத்தைப் பிரித்த கதையாக அனைத்து பணமும் அந்த செயலிகளை செயல்படுத்துவோரை சென்றடைந்துவிடும் என்பதே அந்த சூதாட்டத்தின் முடிவாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கொரோனா நோய்த் தொற்று பரவலால் இந்திய பொருளாதாரம் பின்னடைவு சந்தித்து வரும் சூழலில், சீனப் பொருள்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில், சூதாட்டங்கள் மூலம் இந்திய பொருளாதாரத்தை, சீனா செயலிகள் மூலம் சுரண்ட முற்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை பொருளாதார வல்லுநர்கள் எழுப்புகின்றனர்.
உடனடியாக மத்திய அரசு இத்தகைய சூதாட்ட இணையதளங்கள், செயலிகளை தடை செய்வதன் மூலம் சீனாவின், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சிகளையும், தனிநபர் வருவாய் இழப்பு, தனிமனித தகவல் திருட்டு ஆகியவற்றில் இருந்து இந்திய மக்களை காப்பாற்ற முடியும்.
You must log in to post a comment.