பதற்றம் ஏற்படுத்தியுள்ள லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதல்


புதுதில்லி: இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சீன ராணுவத்தின் தரப்பில் இருமடங்கு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மோதல் நடைபெற்ற இடம் லடாக் பிராந்தியத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு. இங்கு இரு நாட்டு வீரர்களிடையேயும் கைகலப்பு ஏற்பட்டது இது முதல் முறையல்ல. ஆனால் உயிரிழப்புகளைச் சந்திக்கும் அளவில் மோதல் ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

இருநாடுகளுமே கல்வான் பள்ளத்தாக்கை மிக முக்கியமானதாக கருதுகின்றன. இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையேதான் இந்த கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் எல்லைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளதுதான் இவ்வளவு முக்கியத்துக்குக் காரணம்.

இந்தப் பள்ளத்தாக்கு வழியாகச் செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடுதான் இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கிறது. இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ள அக்சாய் தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதி தங்களுக்கே சொந்தம் என இந்தியா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தீய – சீனப் போரின்போதும், கல்வான் நதி போரின் மையப்பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய மோதல் ஏன்?

சீனாவின் தற்போதைய ஆத்திரத்துக்குக் காரணம் இந்தியா மேற்கொண்டு வரும் அமைதிதான். ஒருபுறம் இந்திய எல்லையோரச் சாலைகளை வலிமைப்படுத்துதல், மற்றொரு புறம் சீனாவின் சீண்டலை பொருட்படுத்தாமல் இருத்தல் போன்றவற்றால் ஏற்பட்ட ஆத்திரமாக லடாக் எல்லை ஊடுருவல் முயற்சியாகக் கருதப்படுகிறது.

இந்த மோதலுக்கு கடந்த 15-ஆம் தேதி இரவு சீன ராணுவத்தினர் ஒருதலைபட்சமான சில முடிவுகளை எடுத்ததே காரணமாகச் சொல்லப்படுகிறது. இரு தரப்பினரும் கற்கள், கம்பிகளைக் கொண்டு மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சண்டையில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதா என்பது புதன்கிழமை காலை வரை உறுதி செய்யப்படவில்லை.

உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட சமாதான உடன்படிக்கையை சீனாவின் ராணுவ வீரர்கள் மதிக்காமல் போனதால்தான் இந்த மோதல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்போதுமே சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுகளை கீழ்மட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் பல நேரங்களில் மதிப்பதில்லை. காரணம் நீண்டகாலமாக போர்களை அவர்களை சந்திக்காத சூழலில் எதிர்விளைவுகளைப் பற்றி அவர்கள் அறியாமல் உடனடியாக கட்டுப்பாடான ராணுவப் பணிகளை மேற்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையின்படி, சீன துருப்புக்கள் ஒரு இடத்திலிருந்து விலகிச் செல்லத் தயாரானபோது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய கர்னல் மீதும், வீரர்கள் மீதும் சீனத் துருப்புகள் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் கர்னல் பி.சந்தோஷ் பாபு, ஹவில்தார் பழனி மற்றும் சிப்பாய் ஓஜா ஆகியோர் அடங்குவர். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், எதிர்தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்தேகுறிப்பிட்ட பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லை நிர்வாகத்துக்கான அதன் பொறுப்பான அணுகுமுறையைப் பொறுத்தவரை, இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் எப்போதும் இந்தியப் பக்கத்தின் எல்லை கோட்டிலேயே நடைபெறுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. சீனாவும் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  அமைதியைப் பேணுவதன் அவசியத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எல்லைப் பகுதிகளிலும், உரையாடலின் மூலமும் வேறுபாடுகளைத் தீர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் இறையாண்மையைஉறுதி செய்வதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சீண்டல் தொடர்வது ஏன்?

இந்திய-சீன எல்லைப் பகுதியில் லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரையில் சுமார் 3,500 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அமைக்கும் சாலைகள் சீனாவின் நீண்ட நாளைய எல்லை ஆக்கிரமிப்பு கனவை தகர்க்கத் தொடங்கியுள்ளது.

சர்சைக்குரிய எல்லைப் பகுதியில் சாலை, விமானப் போக்குவரத்தில் இந்தியாவின் கட்டமைப்பு வசதிகள் எதிர்காலத்தில் தங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும் என்ற மனப்போக்கில் சீனா இருந்து வருகிறது.
இதனால், இந்தியா அமைத்துள்ள 225 கி.மீ. நீளமுள்ள தர்பூக்-ஷ்யோக்-தவுலத் பேக் ஹோல்டி எனப்படும் டிபிஓ (DPO) சாலைக்கு துணைச் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது.


காரகோரம் கணவாயில் நிறைவடையும் இச்சாலையால், எல்லையில் உள்ள தப்சாங் மற்றும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிகளை இந்திய துருப்புகள் மிக எளிதில் சென்றடையும்.

இதனால் சீனா இந்திய எல்லையை அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத சூழல் ஏற்படும் என்பதால் ஏற்பட்டுள்ள ஆத்திரத்தின் வெளிப்பாடாக எல்லையோர ராணுவ வீரர்களின் மூலம் இந்தியாவை தொடர்ந்து சீனா சீண்டி வருகிறது.

இந்தியாவின் வேகமான வளர்ச்சி, உலக நாடுகளிடையே அதற்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு போன்றவை சீனாவை ஏற்கெனவே ஆத்திரத்துக்கு ஆளாக்கியுள்ள சூழலில், கொரனா பாதிப்பை சவாலாக இந்தியா ஏற்று அதே மிக நேர்த்தியாக சமாளித்து வருகிறது. அத்துடன் முன் எப்போதையும் விட தற்போது அமெரிக்காவுடன் அதன் நெருக்கமும், உறவும் வலிமைப்பெற்றுள்ளது.

முன் எப்போதையும் விட தற்போது எல்லையோர பாதுகாப்புக்கான கட்டமைப்பு வசதிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, லடாக், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பழைய விமான தளங்களை சீரமைத்து பிரம்மாண்ட போர் விமானங்களை இந்தியா இறக்கி பார்த்து விட்டது.

உலகிலேயே மிகவும் உயரமான 16,164 அடி உயரத்தில் அமைந்துள்ள டிபிஓவில் உள்ள இந்திய விமான இறங்குதளம் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அகாசி சின்னுக்கு மிக அருகே அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.
இந்நிலையில், சீனாவின் போன்காங்காக் ஏரியில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சீனாவின் ராணுவ விமானதளத்தை அந்நாடு விரிவுபடுத்தியுள்ளது. . அத்துடன் அப்பகுதியில் ராணுவ விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன.

லடாக் எல்லையில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருவதோடு, சிக்கிம், அருணாசலப் பிரதேசங்களிலும் வீரர்களை குவித்து வருவதும், பதுங்குக் குழிகள், சாலைகள் போன்ற கட்டமைப்புகளில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. இவையெல்லாம் இந்தியாவை மீண்டும் சீண்டி வலுக்கட்டாயமாக போருக்கு அழைப்பதற்கான முயற்சிகளாகவே தென்படுகின்றன.

லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளதாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வந்த சூழலில் இருநாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதையடுத்து கடந்த சில நாள்களால் எல்லைப் பகுதியில் எந்த மோதல் போக்கும் இல்லாமல் இருந்தது.

போர் வராது..

தற்போதைய சூழலில் சீனா இந்தியாவை சீண்டுவது தொடர்ந்தாலும், அது போராக உருவெடுக்க வாய்ப்பில்லை. காரணம் கொரோனா பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் சீனாவின் மீது சந்தேகமும், ஆத்திரமும் கொண்டுள்ளன. சீனாவின் வரம்பு மீறிய அதிகாரப் பசியை பல நாடுகள் ரசிக்கவில்லை. எனவே அவை மறைமுகமாக இந்தியாவை ஆதரித்து வருகின்றன. ஒருவேளை போர் மூண்டால், பல நாடுகளின் மறைமுக ஆதரவுடன், பல நாடுகளின் நேரடியான ஆதரவும் இந்தியாவுக்கு கிட்டும்.

சீனா எப்போது போர் தொடுக்க முற்பட்டாலும், தானும் தன் பங்குக்கு இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதால், அது மட்டுமே அதிகபட்சமாக சீனாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடாக இருக்கும் என்பதையும் சீனா அறிந்து வைத்துள்ளது. இதனால் இந்தியா மீது போர் தொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள தயாராகாது என்பதே உண்மை என்கின்றனர் சர்வதேச பிரச்னைகளை அலசுவோர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.