சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு புதிய அறிவிக்கை இப்போதைக்கு வெளியிட வாய்ப்பில்லை!

சென்னை: சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், இத்திட்டத்தைத் தொடர புதிய அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டியுள்ளது. இச்சூழலில் இந்த புதிய அறிவிக்கை உடனடியாக வெளியாவது சந்தேகமே என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மத்திய அரசு அறிவித்த `பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டம் கடந்த 2018 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டது.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள், தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956-இன் கீழ் கையகப்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 2018 ஜூன் மாதம் அறிவித்தார்.

நகர்ப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்குச் சந்தை மதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு இழப்பீடும், கிராமப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்குச் சந்தை மதிப்பைக் காட்டிலும் அதிகபட்சம் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு எதிராக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராடத் தொடங்கினர். விவசாயிகளும் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தன.

செப்டம்பர் 2018-இல் எட்டுவழிச் சாலை திட்டத்தில் ஒருசில மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து அறிக்கை அனுப்பியது. எட்டு வழிச்சாலை திட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்ற ரீதியில் நில உரிமையாளர்கள், பூவுலக நண்பர்கள், வழக்குரைஞர் சூரியபிரகாசம், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் எட்டு வழிச்சாலை திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுவதற்கு தடை விதித்தது.

2019 ஏப்ரல் 8-ஆம் தேதி இத்திட்டத்துக்கான தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் அதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரத்திற்குள் திருப்பி ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கு குறித்து விளக்கமளிக்க அன்புமணி ராமதாஸ் உள்பட அனைத்து மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் 2019 ஜூலை 31-இல் தாக்கல் செய்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி இச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இச்சூழலில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்தரப்பினர் ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்கத்தை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என 2020 அக்டோபரில் உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் டிசம்பர் 8-ஆம் தேதி தனது தீர்ப்பில், ‘

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எட்டு வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது.

இத்தீர்ப்பு ஒருவகையில் விவசாயிகளுக்கு பாதகமாக அமைந்திருந்தாலும், மீண்டும் திட்டத்தைத் தொடர மத்திய அரசு புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்ற உத்தரவு சற்று ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது.

இன்னும் ஒருசில மாதங்களில் தமிழகம் சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கவுள்ளது. ஒருவேளை புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டால், அப்போது இது விவசாயிகளுக்கு எதிரானத் திட்டம் என்பதை எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப வாய்ப்பு ஏற்படும். இது ஒருசில மாவட்டங்களில் ஆளும் கட்சிக்கு பாதகமாக அமையும். அத்துடன் தேர்தலில் பிரதான எதிர்ப்பு அம்சமாக இது எதிர்க்கட்சிகளால் எடுத்துச் செல்லப்படக் கூடும் என்பதால் புதிய அறிவிக்கை அவ்வளவு விரைவில் வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

ஒருவேளை அப்படிப்பட்ட துணிச்சலான முடிவை அரசு எடுத்தால், அதை எதிர்கொள்ள தன்னார்வ அமைப்புகளும், ஒருசில எதிர்க்கட்சிகளும் தயாராகும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழலை மத்திய, மாநில அரசுகள் விரும்பாது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.