செங்கல்பட்டை குளிர்வித்த மழை
செங்கல்பட்டு, ஜுலை 11: செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு முழுவதும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடை காலத்தில் இருந்த வெயிலின் தாக்கம் குறைந்தாலும் வெப்பத்தின் கடுமை குறைந்தபாடில்லை. அடுக்குமாடி குடியிருப்புக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் வீட்டின் உள்ளே காற்றோட்டத்துக்கு போதிய வசதியில்லை. இந்த நிலையில் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் காய்கறிச் செடிகள் மற்றும் மாடியில் வளர்க்கும் பூச்செடிகள், காய்கறிச் செடிகள் ஆகியவற்றிற்கு ஊற்ற தண்ணீர் பற்றாக்குறை என்று செடிகள் வாடி வதங்கிய நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மக்களும் ஆர்வமுடன் மழையினை எதிர் நோக்கி காத்திருந்தனர். ஆனால் மழை வராமல் கண்ணாமூச்சி விளையாடியது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மழை பொழிந்தது. இதனால் தெருக்களிலும் சாலைகளிலும் பள்ளம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் அளவிற்கு மழை பெய்தது. தண்ணீர் இல்லாமல் வறண்ட கிணறுகளில்கூட ஓரடிக்கு தண்ணீர் தேங்கும் அளவிற்கு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
You must log in to post a comment.