பேருந்துகள் இயக்கத்துக்கான விதிமுறைகள் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கத்துக்கான சில விதிகளை பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்குவதற்கு அரசு அனுமதித்துள்ளது. இப்பேருந்துகள் இயக்கத்துக்கு நடைமுறையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி,
பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும். அவர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
குளிர்சாதன பேருந்துகளில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது. பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவர்.
பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போதும் கிருமி நாசினி கொண்டு பேருந்தை சுத்தப்படுத்த வேண்டும்.
திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே நடைமுறையில் இருக்கும். தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும். மண்டலங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.
ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும்.
ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கு பேருந்துகளில் பயணம் செய்ய இ-பாஸ் அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
You must log in to post a comment.