இதுதான் சரியான தருணம்

கட்டுரையாளர்-ஆர்.ராமலிங்கம்

உலகமே இன்றைக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. இச்சூழலில் வெற்றிகரமாக அதை சமாளிக்க இந்தியா பெருமுயற்சியையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் சீனா, இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் அத்துமீறி நுழைந்ததோடு, இந்திய வீரர்களை வம்புக்கிழுத்து தாக்கி 20 வீரர்களைக் கொன்றுள்ளது இந்திய மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இச்சூழலில் இந்திய குடிமக்கள் அனைவரும், எதிரும்புதிருமாக உள்ள அரசியல் கட்சிகள் உள்பட ஒன்றிணைந்து சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சீனா மெல்ல இந்திய மக்களை நுகர்வு கலாசாரத்தின் மூலம் அடிமைப்படுத்தி வருவதை இத்தருணத்தில் நாம் உற்று நோக்க வேண்டும். இந்தியச் சந்தையில் தரமாகவும், விலை அதிகமாகவும் உள்ள பொருள்களுக்கு மாற்றாக விலை மலிவாக, தரத்தில் சிறந்ததுபோன்ற தோற்றமளிக்கும் போலியான கட்டமைப்புக் கொண்ட பொருள்களை இந்திய சந்தையை குறிவைத்து தயாரித்து அவற்றை சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது.

இந்திய இறக்குமதியாளர்களில் பலர் பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் ஆசை காரணமாக சீனாவின் இந்த மலிவான பொருள்களை இறக்குமதி செய்து சந்தைக்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். குண்டூசி முதல் சோலார் பேனர் வரையிலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படாத பொருள்களே இல்லை என்ற அளவுக்கு மிகநீண்ட பட்டியல் இறக்குமதியில் இடம்பெற்றுள்ளது.

உலகச் சந்தையோடு போட்டியிட சீனா ஏராளமான பொருள்களை தரம் குறைந்த, விலை மலிவான பொருள்களின் உற்பத்தியில் பெரும்பகுதி இந்திய சந்தையையே குறி வைக்கின்றன.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கேயே விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலையைக் காட்டிலும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை மிக மலிவான விலைக்கு வழங்குகிறது.

இந்தியப் பொருள்களின் விலையை கண்காணிக்கும் சீனா, அதே போன்ற பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து அதை சரிபாதி விலைக்கு இந்திய சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை மெல்ல சாகடித்து வருவதும் கண்கூடு.

பொதுவாக நாம் பயன்படுத்தும் பொருள்களை இருவகையாக பிரிக்கலாம். நீண்டகாலம் உழைக்கக்கூடிய தரமான உற்பத்திப் பொருள்கள், மற்றொன்று நீண்டகாலம் பயன்பாட்டுக்கு உகந்தவை அல்லாத தரம் குறைந்த பொருள்கள்.

தரமான பொருள்களுக்கு நுகர்வு கலாசாரத்தில் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. தரம் குறைந்த அதே பொருள்கள் சற்று விலை குறைந்தவையாக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இரண்டாவது ரகத்தையே நுகர்வு கலாசாரத்தில் இந்திய மக்கள் மட்டுமின்றி பெரும்பாலான நாட்டு மக்களும் விரும்புகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் ஏழ்மையும், குறைந்த வருவாயும் உடைய மக்களின் எண்ணிக்கையே உலகில் அதிகம் என்பதால்தான்.

இந்த பலவீனத்தைத்தான் சீனா தனது பொருள்களை உலக அரங்கில் சந்தைப் படுத்துவதில் பயன்படுத்துகிறது. குண்டூசி முதல் மிகப் பெரிய உற்பத்தி சாதனங்கள் வரை சீனாவின் தயாரிப்பில் இடம்பெற்றுள்ளன. அந்நாட்டின் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான இப்பொருள்களில் தரம் இரண்டாவதாக கருதப்படுகிறது. முதலில் விலை, அதற்கேற்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் தளர்வு, தந்திரமான ஏற்றுமதி நடைமுறைகள், சீனப் பொருள்களை இறக்குமதி செய்வோருக்கு சாதகமான இன்வாய்ஸ், பில் முறைகளை கையாள்வது, கள்ளத்தனமாக பரிசுப் பொருள்கள் என்ற போர்வையில் கப்பல்களில் ஆயிரக்கணக்கான கண்டெய்னர்களில் பொருள்களை அனுப்பி வைப்பது என பல முறையற்ற நடவடிக்கைகளை சீன உற்பத்தியாளர்கள் கையாள்கின்றனர். அதற்கு அந்த நாடும் துணை போகிறது.

சீனப் பொருள்கள் பழுதடைந்தால் மீண்டும் அவற்றை சீர்செய்வது இயலாத காரியம். செல்போன் முதல் அச்சிடும் இயந்திரம் வரை அதே நிலைதான்.  சீனப் பொருள்கள் தரமற்றவை. குறுகிய காலம் மட்டுமே பயன்படுத்தக் கூடியவை என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்தான். ஆனால் இந்திய மக்களின் நுகர்வு கலாசாரத்தில் விலை மலிவு என்ற காரணமே அதிகம் சுண்டி இழுக்கிறது.

இந்திய உற்பத்தியாளர்களை மிகப் பெரிய அளவில் சீனப் பொருள்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக சிறுதொழில் நிறுவனங்கள் ஏராளமானவை இடம் தெரியாமல் காணாமல் போனதற்கு சீனப் பொருள்களின் அபரிமித இறக்குமதிதான்.

பொம்மைகள், துணி வகைகள், சைக்கிள்கள், மருந்து உற்பத்திப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், செல்போன் முதல் ஆடம்பர கட்டில்கள், கதவுகள் வரையிலான வீட்டு உபயோகப் பொருள்கள் இந்திய உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவை நசுக்க வேண்டும். உலக அரங்கில் அதன் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கடி மோதி வரும் சீனாவுக்கு பதிலடி தருவது ராணுவத்தின் மூலம் மட்டுமே இருக்கக் கூடாது. இறக்குமதியாகும் பொருள்கள்களுக்கு தடை விதிப்பதன் மூலமும் அதற்கு பதிலடி தர வேண்டும் என்பதுதான் இந்திய உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனில் கடைபிடிப்பது போன்ற தீவிரமான கொள்களைகளை சீன உற்பத்திப் பொருள்கள் மீது இந்தியா இனியாவது கடைபிடிக்க வேண்டும். சீனப் பொருள்கள் நேரடியாக வருவதைக் காட்டிலும் கள்ளத்தனமாக கடத்தி வருவது மிக அதிகம். இதை முதலில் தடுத்தாக வேண்டும் என்பதும் இந்திய உற்பத்தியாளர்களின் விருப்பமாக உள்ளது.

சீனப் பொருள்களின் அபரிமித வரத்து காரணமாக இந்தியாவில் தொழில் துறை நசுக்கப்பட்டு வருவதை அடுத்து ரசாயணங்கள், பெட்ரோ கெமிக்கல், இயந்திர பாகங்கள், மருந்துகள், ரப்பர், இரும்புப் பொருள்கள், நூல், நூலிழை உள்ளிட்ட 99 பொருள்களுக்கு இந்தியா இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ளது. இது போதாது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருள்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட வேண்டும். அத்துடன் இந்திய துறைமுகங்களில் பரிசுப் பொருள்கள் என்ற பெயரில் இறக்குமதியாகும் அனைத்து சீனப் பொருள்களையும் தடை செய்ய வேண்டும். லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் சீனப் பொருள்களின் இந்திய இறக்குமதியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சீனப் பொருள்களை வரவழைப்பதை புறக்கணிப்போம் என இந்திய இறக்குமதியாளர் உறுதியேற்க வேண்டும். சீனப் பொருள்களை பயன்படுத்த மாட்டோம் என ஒவ்வொரு இந்தியனும் உறுதிமொழி ஏற்க வேண்டும். சீனப் பொருள்களைத் தீயிட்டு கொளுத்தி சீனாவின் நுகர்வு கலாசார அடிமைத்தனத்தை தீக்கிரையாக்க வேண்டும்.

இது அனைத்து தரப்பு மக்களிடையே, சாதி, மத, இன உணர்வு பேதமின்றி, அரசியல் எல்லைகளைக் கடந்து இயக்கமாக மலர வேண்டும். அதுவும் உடனடியாக எழுச்சி இயக்கமாக அனைத்து அரசியல் கட்சிகளும் எழுச்சி இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்திய ஒற்றுமையை இதன் மூலம் சீனாவை உணரச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா சுயசார்பு நாடாக, உற்பத்தித் துறையில் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க முடியும். இதுதான் சரியான தருணம்.

நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு, இந்த நடவடிக்கையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக எடுக்க வேண்டும் என்பதுதான் இந்திய குடிமக்களின் கோரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை!

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.