February 6, 2023

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையை முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு, அவரது உறவினர்கள் வீடுகள், நட்சத்திர விடுது உள்ளிட்ட 28 இடங்களில் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

28 இடங்களில் சோதனை

சென்னை,நவ.16: லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையை முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு, அவரது உறவினர்கள் வீடுகள், நட்சத்திர விடுதி உள்ளிட்ட 28 இடங்களில் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனையை அறிந்த அவரது ஆதரவாளர்கள் திரளானோர் வீரமணியின் வீட்டின் முன்பு குவிந்து அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான சொகுசு விடுதி

சோதனை நடைபெறும் இடங்களில் முக்கியமானவை:

திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ் மற்றும் ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ்.

ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் அமைந்துள்ள அமைச்சர் வீடு.

பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள அமைச்சர் மற்றொரு வீடு.

அமைச்சரின் தம்பி காமராஜ் வீடு, அமைச்சரின் அண்ணன் அழகிரி வீடு.

தமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் வீடு.

திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் வீடு.

ஏலகிரி கிராமத்தில் அமைந்துள்ள மகளிர் அணி தலைவி சாந்தி வீடு.

ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம்.

நாட்றம்பள்ளி மல்லகுண்ட பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா வீடு.

நாட்றம்பள்ளி பகுதியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் சாமராஜ் வீடு.

நாட்றம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ் வீடு.

ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீடு உள்ளிட்டவற்றில் சோதனை நடைபெற்றது.

 

ரூ.90 கோடி வரி ஏய்ப்பு: முதல் தகவல் அறிக்கையில் தகவல்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் வருமானத்தை விட 654 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து வீரமணிக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதை அடுத்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றியது.

அதிமுக ஆட்சியில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக  கே.சி.வீரமணி இருந்தார். இவர் அமைச்சராக இருந்த போது, 2011 முதல் 2021 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.90 கோடி அளவுக்கு கே.சி.வீரமணி சொத்துக்களை வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்னையில் நான்கு இடங்களிலும்,  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமாக உள்ள, திருமண மண்டபம், வீடு, நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 28 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அத்துடன், பெங்களூரிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. 

சோதனையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்

ஏற்கனவே அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது இச்சோதனையில் கே.சி.வீரமணி சிக்கியுள்ளார்.