January 19, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

தனிப்பெருங்கருணை நாள் – முதல்வர் அறிவிப்பு

சென்னை, அக்.5: வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் பிறந்த நாள் இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வள்ளலாரின் 198-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. மக்களின் பசிப்பிணியை நீக்கி வந்த வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்கம். அவர் 1823 அக்டோபர் 5-ஆம் தேதி கடலூர் மாவட்டம், மருதூரில் ராமையை பிள்ளை-சின்னம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

சிறந்த சமூக சீர்திருத்தவாதி, சிறந்த சொற்பொழிவாளர், தமிழ் மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர், பல நூல்களின் ஆசிரியர், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் வடலூர் ராமலிங்க வள்ளலார்.

1867-இல் வடலூரில் தர்ம சாலை தொடங்கி அனைவருக்கும் உணவளித்து வந்தார். மக்களின் பசிப்பிணி ஆற்றும் அருந்தொண்டை செய்து வந்த அவரது கருத்துக்கள் அனைத்துமே முற்போக்கு சிந்தனையுடையவை.

அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று முழங்கிய அவர் பாடிய 6 ஆயிரம் பாடல்கள் தொகுக்கப்பட்டு திருவருட்பாவாக வெளிவந்த்து. 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.  கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதியாய் விளங்குகிறார். எந்த உயிரையும் கொல்வது பாவம். புலால் உண்ணக் கூடாது. சாதி, மதம், இனம், மொழி இவற்றில் வேறுபாடு கூடாது.

இறந்தவர்களின் சடலங்களை எரிக்க்க் கூடாது. சமாதி வைத்தலே நல்லது. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் உயிர்பலி இடுதல் கூடாது. எல்லா உயிர்களும் நம் உறவுகளே. அவற்றை துன்புறுத்தல் ஆகாது. நல்லோர் மனதை நடுங்கச் செய்யலாகாது. தானம் தருவோரை தடுத்து நிறுத்தக் கூடாது. மனமொத்த நட்புக்கு வஞ்சம் செய்யக் கூடாது என வள்ளலார் அறிவுறுத்தி வந்தார்.

1874-ஆம் ஆண்டு தை 19-ஆம் தேதி (ஜனவரி 30-ஆம் நாள்) பூச நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடிய நன்னாளில் அவர் ஜோதி வடிவாய் இறையவனுடன் கலந்தார். வடலூரில் ஜோதி தரிசனம் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடந்து வருகிறது.

அவர் மக்களுக்கு சிந்தனையை விதைத்த காலத்தில் ஒருசில எதிர்ப்புகள் இருந்தன. முற்போக்கு கருத்துகளாக இருந்தன. இன்றைக்கு அந்த கருத்துக்கள் உலகமெங்கும் மக்களால் புரிந்துகொள்ளப்பட்டு அவற்றை பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வள்ளலாரின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் அவரது வழியை பின்பற்றுவோரால் நடத்தப்படும் வேளையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.