August 10, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

வடலூரில் தைப்பூச விழா கொடியேற்றம்

வடலூர் சத்திய தருமச்சாலையில் 151-ஆவது தைப்பூசத் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன் அக்கச்சி’’ என்று பாடி ஜீவகாருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த ராமலிங்க வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கானோர் தரிசிப்பர்.

இந்த ஆண்டு தைப்பூச விழாவையொட்டி கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் வள்ளலார் எழுதிய அகவல் பாராயணம் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து தர்மச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

இதையடுத்து வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கொடி ஏற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சத்தியஞானசபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் சீர்வரிசை பொருள்களை கையில் ஏந்தியபடியும், வள்ளலார் பயன்படுத்திய பொருட்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுமந்த படியும் ஊர்வலமாக கொடிமரத்தின் அருகில் வந்தனர்.

இதையடுத்து ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்கிற வள்ளலாரின் பாடலை அங்கு கூடியிருந்தவர்கள் பாடினர். பின்னர் வள்ளலார் எழுதிய கொடி பாடல்களை பாடியபடி கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது திரண்டிருந்த மக்கள் அனைவரும் வள்ளலாரை போற்றி கை கூப்பி வணங்கினர்.

ஒளி, ஒலி காண கீழேயுள்ள யுடியூப் விடியோவை கிளிக் செய்யவும்.