Swadesamithiran

Tamil online News – We can read in any language

பதைபதைக்கும் விடியோ வெளியானது

காங்கிரஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றது

லக்னோ, அக்.5: உத்தரபிரதேச மாநிலம், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் மீது கார் மோதிய பதைபதைக்கும் விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகேயுள்ள பன்வீர்பூரில், மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய உள்துறை இணை அமைச்சரான  அஜஸ் மிஸ்ரா இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்.

இச்சூழலில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், நிகழ்ச்சிக்கு வரவிருந்த துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கறுப்புக் கொடிகளுடன்

திகுனியா சாலையின் இருபுறமும் திரண்டனர். அப்போது பாஜகவினரின் கார் அணிவகுப்பு ஒன்று அவ்வழியாக வந்தது. அதில் ஒரு கார் விவசாயிகள் மீது மோதியது. அதில் இரு விவசாயிகள் உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அப்பகுதியில் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். பாஜகவினர் வந்த இரு கார்களுக்கு தீ வைக்கப்பட்டது.  இந்த வன்முறை சம்பவத்தின்போது இரு விவசாயிகள் உள்பட மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து துணை முதல்வர் பிரசாத் மவுரியா தன் பயணத்தை ரத்து செய்தார்.

வேண்டுமென்றே கார் மூலம் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அந்த காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் விவசாயிகள் கூறினர். அப்போது விவசாயிகள் மீது அவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், அந்த காரில் தனது மகன் இல்லை என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டத்தின்போது நடந்த வன்முறையும், அப்போது 8 பேர் கொலையுண்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லகிம்பூர் கேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல இடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விடியோ பதிவு வெளியீடு:

இந்த பரபரப்பான சூழலில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய விடியோ வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடியோவை வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில் சாலையில் நிற்கும் விவசாயிகள் மீது கார் ஒன்று வேகமாக மோதி, அவர்கள் மீது ஏற்றிவிட்டு நிறுத்தாமல் சென்றது. அதைத் தொடர்ந்து இரு கார்கள் அதேபோன்று செல்வது இந்த விடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த விடியோ மிக வேகமாக டுவிட்டரில் பலரால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது