August 10, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

உக்ரைன் போர் பதற்றம்: இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை

போர் பதற்றம் நீடித்து வரும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வர அதிக விமானங்களை இயக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மோதிக்கொள்ளும் ஒரு பதற்றமான சூழல் கடந்த சில வாரங்களாக நீடித்து வருகிறது. இந்த பதற்றமான சூழலுக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக கடந்த 2 வாரத்துக்கு முன்பு உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஒரு விடியோ https://youtu.be/-14Y7d8U0S8  (RR VIEWS)  YOUTUBE  சேனலில்  பதிவிடப்பட்டிருக்கிறது. அதை பார்த்தவர்கள் உக்ரைன் விவகாரம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அந்த விடியோவை காணாதவர்களுக்காக உக்ரைன் பதற்றம் தொடர்பான சிறிய விளக்கம் இது.

ஒன்றுபட்ட சோவியத் யூனியனின் ஓர் அங்கமாக இருந்த்துதான் உக்ரைன். சோவியத் யூனியன் சிதறுண்டபோது 1991-இல் பிரிந்த சில நாடுகளில் உக்ரைனும் ஒன்று.  கலாச்சார ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் ஒத்துபோயிருந்த உக்ரைன் தனி நாடானது ரஷ்யாவுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியது.

அதனால் தொடர்ந்து அந்த நாட்டின் மீது ரஷ்யா ஆதிக்கம் செலுத்தியது. உக்ரைன் ஒரே நாடாக இருந்தாலும் அரசியல் ரீதியாக 2 பிரிவுகளாக செயல்படுகிறது.

கிழக்கு உக்ரைன் பகுதி மக்களில் பெரும்பாலோர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்புகின்றனர். மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் அதையொட்டிய வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுடன் இணைய ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.

உக்ரைன் ஐரோப்பிய நாடுகளுடன் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை. இதனால் உக்ரைனுக்கு சில உதவிகளை செய்து அதை தன்பக்கம் இழுக்க முயற்சித்தது. ஆனால் உக்ரைன் மக்களில் பெரும்பாலோர் மீண்டும் ரஷியாவுடன் இணைவதை விரும்பவில்லை.

இடையில் 2014-ஆம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனோடு உக்ரைன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது. ஆனால், அப்போதைய அதிபர் விக்டர் யனுகோவிச்,  ஐரோப்பிய யூனியனுடன் இருந்த வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து ரஷ்யா தலைமையிலான ஈரோஷியன் எக்கானமிக் யூனியனில் இணைய முற்பட்டார். இதனால் உக்ரைனில் புரட்சி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அதிபர் யனுகோவிச் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இத்தகைய சூழலில்தான்,  ரஷ்யா தனது எல்லையையொட்டியுள்ள உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கிரீமியா தீபகற்பத்தை கைப்பற்றியது. அடுத்து, உக்ரைன் ஆக்கிரமிப்பு நோக்கத்தை மேற்கொள்ள தனது படைகளின் எண்ணிக்கையை ரஷ்யா அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில்தான் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ நாடுகள் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு அல்லது போர் சூழலைத் தடுக்க தலையிடத் தொடங்கியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கினால், நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் இறங்கத் தயாராகியுள்ளன. ரஷ்யாவுக்கு சீனா ஆதரவாக உள்ளது.

இத்தகைய போர்ச் சூழலால் இந்தியாவும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவும் தேவை. ரஷ்யாவும் தேவை. இதனால் நடுநிலை செயல்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதே நேரத்தில் உக்ரைனில் போர் ஏற்பட்டால், இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உள்பட பலரும் மீட்கப்பட வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழலில், இந்தியர்கள் உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக அதிக எண்ணிக்கையில் விமானங்களை உக்ரைனுக்கு இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது. அதேபோல் உக்ரைன் நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய மாணவர்கள் பலரும் உக்ரைன் நாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அவர்தம் குடும்பத்தினர் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், தற்போது பல்வேறு விமான நிறுவனங்களுடன், விமானப் போக்குவரத்தை உக்ரைனுக்கு அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள தலைநகர் கீவில் இயங்கி வரும் இந்திய தூதரகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதைப்போல அவர்களின் குடும்பத்தினர்,  தங்கள் உறவினர்களின் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்திலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.