February 8, 2023

25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் டிராகன்

பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் காப்புக் காட்டில்,  ஜோ டேவிஸ் என்பவர் பணிபுரிகிறார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காப்புக் காட்டில் உள்ள நீர்த்தேக்கத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, நீர்த்தேக்க சகதியில் அசாதாரணமான ஒரு உருவ படிமத்தைக் கண்டார். அது அவருக்கு டைனோசரைப் போன்று தெரிந்தது. இதையடுத்து அவர் நிர்வாகத்தை அழைத்து தகவலை பரிமாறினார்.

அதையடுத்து கண்டறியப்பட்ட அந்த புதைப்படிவம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு ஆராய்ச்சிக்குழு வந்தது. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டீன் லோமாக்ஸ் அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். அவர் இந்த கண்டெடுப்பை, உண்மையிலே முன்எப்போதும் இல்லாதது என்று கூறினார்.

அதன் ஆராய்ச்சியில்தான் இக்தியோசர் என்ற பிரம்மாண்ட உருவம் கொண்ட கடல் வேட்டை பிராணி எனக் கண்டறியப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட புதைப்படிவத்தின் நீளம் 10 மீட்டர். இதுவே பிரிட்டனில் கண்டறியப்பட்ட இத்தகைய படிவ எச்சங்களில் மிகப் பெரியது.

அதுசரி, இக்தியோசர் என்ற கடல் வேட்டை பிராணி இன்றல்ல, நேற்றல்ல, 25 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பதுதான் அதைவிட ஆச்சரியமானது. வெப்ப ரத்த வகையைச் சேர்ந்த இந்த பிராணி நுரையீரல் மூலம் சுவாசிக்கக் கூடியவை. அதனால் அவை அடிக்கடி நீருக்கு மேல் வந்து சுவாசிக்கும் பிராணிகள் ஆகும். கிட்டத்திட்ட நாம் இன்றைக்கு பார்க்கும் டால்பீன்களைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்டவை.

இவை 25 மீட்டர் நீளம் அதாவது கிட்டத்திட்ட 83 அடி நீளம் வளரக்கூடியவை. இந்த இக்தியோசர்கள் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிர் வாழ்ந்துள்ளன.

வழக்கமாக இக்தியோசர்கள் மற்றும் பிற கடல் ஊர்வனவற்றை டோர்செட் அல்லது யார்க்ஷயர் கடற்கரையில் உள்ள ஜுராசிக் கடற்கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டதாக நாம் அறிகிறோம். அவற்றில் பல பாறைகளின் அரிப்பினால் வெளிப்படுவதுண்டு.

இக்தியோசர் எச்சம் கண்டறியப்பட்ட, ரட்லேண்ட் பகுதி கடற்கரையிலிருந்து முப்பது மைல்களுக்கு அப்பால் உள்ளது. ஆனால் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக கடல் பரப்புகள், ஆழமற்ற கடல் நீரால் மூடப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது.

2021ஆம் ஆண்டில் ரட்லேண்ட் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைக்கப்பட்டபோதுதான் இந்த எச்சம் அகழ்வாராய்ச்சி மூலம் மீட்டெடுக்கப்பட்டது. இந்த விலங்கின் மண்டை ஓட்டை அகற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

முதலில், இக்தியோசரின் தலைப்பகுதியைச் சுற்றியிருந்த பெரிய களிமண் பரப்பை மிகக்கவனமாக அகற்றினர். அதைத் தொடர்ந்து பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பூச்சு மூலம் பூச்சால் மூடப்பட்டு மரத் துண்டுகளின் மீது வைக்கப்பட்டு உயர்த்தப்பட்டது. இதன் எடை மட்டும் சுமார் ஒரு டன் ஆகும். இந்த சவாலானப் பணியை குழுவினர் மிகக் கவனமாகக் கையாண்டனர் என்கிறார் ரீடிங் பல்கலைக் கழக பழங்காலவியல் பாதுகாவலர் நைகல் லார்கின்.

ரட்லேண்ட் நீர்த்தேக்கத்தை நிர்வகித்து வரும் ஆங்லியா வாட்டர் நிறுவனம்,  இக்தியோசரை மீட்டெடுக்கப்பட்ட பகுதியிலேயே காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான நிதியுதவியை எதிர்பார்த்துள்ளது.

இக்தியோசர் விலங்கினம் சவுரோப்சிடா வகுப்பைச் சேர்ந்ததாகும். ட்ரயாசிக், கிரெட்டேசியஸ் காலங்களுக்கு இடையில் பெருங்கடல் பகுதிகளில் இந்த விலங்கினம் வசித்து வந்துள்ளது. இந்த விலங்கினத்தின் முக்கிய பண்பு இன்றைய டால்பின்களின் பண்புகளை கொண்டதாகவே இருந்துள்ளது.

முதன்முதலில் இக்தியோசர் புதைபடிவங்கள் 1831-ஆம் ஆண்டுக்கு முன்பே அறியப்பட்டவையாகும்.

புவியில், இங்க்லீஸ் சீஷோர், நெவாடா மாநிலம், சிலியின் தெற்குப் பகுதியில் அதிக அளவில் வசித்து வந்ததற்கு அதன் எச்சங்கள் சாட்சிகளாக அமைந்துள்ளன.

ஊர்வன வகையைச் சேர்ந்த இந்த விலங்கினம் ஏழு குடும்பங்களைக் கொண்டது என்பதும், அவை அனைத்துமே குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன என்பதும்தான் ஆராய்ச்சிகளின் முடிவில் தெரியவருகிறது.

பல்லிகளின் உடலமைப்பும், டால்பீன்களின் பண்புகளையும் கொண்ட இந்த ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினத்தின் தலை சற்று வித்தியாசமானதாக அமைந்துள்ளது. முகவாய், கண்கள், ஏராளமான பற்களைக் கொண்ட தாடைகளை உடையதாக இந்த விலங்கினம் இருந்துள்ளது.

இதன் மிகப் பெரிய கண்கள் இரவில் துல்லியமாக மிக நீண்ட தூரத்துக்கு பார்க்கக் கூடிய திறன் பெற்றவையாக இருந்துள்ளன. பெரும்பாலும் இந்த விலங்கினம் உணவுக்கான வேட்டையை இரவில்தான் செய்து வந்துள்ளது.

முதுகில் மிகப் பெரிய துடுப்பு, வால் துடுப்பு ஆகியவற்றோடு, அவற்றின் கால்களும் கூட துடுப்புகளாக பயன்பட்டுள்ளன. இந்த விலங்கினம் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாக இருந்துள்ளது.

இந்த விலங்கினம் எதனால் அழிந்தது என்பதற்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை. இருப்பினும், டயனோசார்கள் பூமியில் தோன்றும் முன்பே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோயிருக்கும் என்பதை மட்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் கூட இது அழிந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அவை காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைப்பை மாற்றிக் கொள்ளாதவையாக இருந்துள்ளதே இதற்கு காரணமாகச் சொல்லலாம். இதனால் சுற்றுச்சூழல் மாற்றம் காரணமாக கிரெட்டேசியஸ் காலம் நிறைவடையும் முன்பே அவை முற்றிலும் அழிந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இக்தியோசர்கள் மீன்களை அதிகம் உணவாகக் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

பல இடங்களில் இக்தியோசர்களின் உடல் பாகங்கள், கருக்கள், வயிற்றுப் பகுதி, தோல் என எச்சங்களாக மீட்டெடுக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஒளி, ஒலியுடன் இச்செய்தியை கேட்டறிய கீழே உள்ள யூடியூப் விடியோவை கிளிக் செய்யவும்.