August 10, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு ஏன்?

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசு ஒரு விளக்கம் அளித்துள்ளது.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு வரும் 26-ஆம் தேதி தலைநகர் புதுதில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் கலை, பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.

இந்த அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ உ சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது.  இந்த அலங்கார ஊர்தியை நிபுணர் குழு தற்போது நிராகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகள் தொடர்ந்து தமிழக அரசின் அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற நிலையில், இவ்வாண்டு நிராகரிக்கப்பட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து மத்திய அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், குடியரசு தின அணிவகுப்பில் விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய தமிழ்நாட்டின் ஊர்தி மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு,  விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், குடியரசுதின விழாவில், தமிழக அரசு சார்பிலான ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகளை உரிய விவாதங்களுக்குப் பிறகே நிபுணர் குழு நிராகரித்துள்ளது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் கடந்த 2016, 2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

நிராகரிப்புக்கு பேசப்படும் காரணங்கள்

அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்யும் குழுவில் கலை, கலாசாரம், சிற்பம், இசை, கட்டடக்கலை, நடனம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இடம்பெறுவர்.

இந்தக் குழு வழக்கமான ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்திலேயே கூடும். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு முன்மொழிகள் கோரி கடிதம் அனுப்பப்படும். அந்த கடிதத்தை பெற்றதும், அந்தந்த மாநில அரசுகள், அலங்கார ஊர்திக்கான கருப்பொருளை தெரிவிக்கும். இதைத் தொடர்ந்து நிபுணர் குழு ஒருசில யோசனைகளைத் தெரிவிக்கும். அந்த யோசனைகளை பின்பற்றி அலங்கார ஊர்திகள் தயாரிக்கப்பட்டு, செயல்முறை காட்சி விளக்கக் கூட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

நிபுணர் குழு, அலங்கார ஊர்தி வடிவமைப்பில் தெரிவித்த யோசனைகள் பின்பற்றப்படாமல் போனாலோ, குறைபாடுகள் காணப்பட்டாலோ அவை நிராகரிப்படும். இதுதான் வழக்கமான நடைமுறை.

இந்த குடியரசுதினவிழா அணிவகுப்பு தொடர்பாக நடந்த அமர்வுகளில் செய்தி, மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி கலந்து கொண்டுள்ளார். அரசு சார்பில் வ உசிதம்பரானார், வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோர் தொடர்பான முன்மொழிவு செய்யப்பட்டது.

அப்போது, ஊர்தியின் முன்பக்கத்தில் இருந்த வ உசிதம்பரானாருக்கு பதில் பாரதியாரை முன்னிலைப்படுத்தி வைக்கவும், அடுத்ததாக வேலு நாச்சியார், மூன்றாவதாக வ உ சிதம்பரானார் ஆகியோர் வருவதுபோல மாதிரியை மாற்றி அமைத்து திருத்தித் தர கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்த யோசனைகளின்படி திருத்தங்கள் வராத காரணத்தால்,  ஐந்து சுற்றுகளுக்குப் பிந்தைய சுற்றுகளில் தமிழகத்தின் முன்மொழிவு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாக பேசப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரம், அந்த மாநிலம் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள்தான் குழுவில் இடம்பெற்றுள்ளனர். உரிய திருத்தங்களை செய்யும் சூழலில், அந்த அலங்கார ஊர்தியை பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் நிராகரிக்க வாய்ப்பில்லை என்றும் பேசப்படுகிறது.

பொதுவாக, மாநிலத்தில் இருந்து வரும் குடியரசு தின விழா அலங்கார வாகன முன்மொழிவுகள் தொடர்பான கோப்புகள் மற்றும் தகவல்கள் பிற மாநிலங்களின் அரசுகள்,  தில்லியில் உள்ள தங்களின் அரசு விருந்தினர் இல்ல உறைவிட ஆணையர்கள் மூலமே மேற்கொள்வது வழக்கத்தில் உள்ளது.

தமிழகத்தில் அப்படியொரு வழக்கம் பல ஆண்டுகளாக பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. தில்லி தமிழ்நாடு இல்லத்தில் இரண்டு ஐஏஎஸ் உயரதிகாரிகள் பணியில் உள்ளனர். அவர்களில் ஒருவர் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் பணிபுரிகிறார். இவர்களிடம் அலங்கார ஊர்தி அணிவகுப்பு தொடர்பான விஷயங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இத்தகைய சிக்கல் ஏற்பட்டிருக்காதோ என்றும் அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகிறது.

2021இல் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊர்தி