லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை
வேலூர்: வேலூர் மற்றும் ஒசூரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2.27 கோடி கணக்கில் வராத பணம் செயற்பொறியாளர் ஷோபனாவிடம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் 26 நாள்கள் கழித்து அவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை, வேலூர் கோட்டத் தொழில்நுட்பக் கல்விச் செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கட்டப்படும் அனைத்து வகை அரசுக் கல்லூரிகளின் கட்டடங்களுக்கு ஒப்பந்தம் வெளியிடுவது, பணிகளைப் பார்வையிடுவது, நிதியை விடுவிப்பது மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்குத் தடையில்லாச் சான்று வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு செயற்பொறியாளராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷோபனா (57) பணிபுரிந்து வந்தார்.
இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலிப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் தலைமையிலான குழுவினர் அரியூர் சாலையில் நின்றுகொண்டிருந்த அவரது வாகனத்தை நவம்பர் 2-ஆம் தேதி இரவு சோதனைக்கு உட்படுத்தினர்.
இதில், ஷோபனாவின் பையில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு துணை அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில் ஷோபனா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள பொதுப்பணித்துறை கட்டடத்தில் ஷோபனா தங்கியிருந்த அறையில் நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலையில் விஜிலென்ஸ் போலீஸார் நடத்திய சோதனையில் மேலும், ரூ.15.85 லட்சம் பணம், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3 காசோலைகள், அலுவலகம் தொடர்பான 18 ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நேரு நகரில் உள்ள ஷோபனாவின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ரூ.2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் பணம், 38 பவுன் தங்க நகைகள், 11 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 1.3 கிலோ வெள்ளிப் பொருள்கள், பல்வேறு வங்கிகளில் ரூ.27.98 லட்சத்துக்கான வைப்பு நிதி ஆவணங்கள், 14 சொத்துப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்
More Stories
பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்
பெட்ரோல், டீசல் விலை: மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும்!
மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்