February 6, 2023

தமிழக நிதி அமைச்சரை பலரும் குறி வைப்பது ஏன்?

இச்சூழலில், பழனிவேல் தியாகராஜனின் ஏகமாக விமர்சிக்கும் போக்கு, பயன்படுத்தும் ஒருசில வார்த்தைகள் பலரையும் முகம் சுழிக்க வைப்பது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு நெருக்கடியை தருவதில் வியப்பில்லை.

சென்னை, செப்.26: தமிழக நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றது முதலே அவரது மீதான தாக்குதல் தொடங்கிவிட்டாலும், தற்போது அத்தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை சமீபத்திய பலமுனைத் தாக்குதல்கள் நிரூபித்து வருகின்றன.

பழனிவேல் தியாகராஜனுக்கு, திமுகவின் புதிய அமைச்சரவையில் எடுத்த எடுப்பிலேயே நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது மூத்த அமைச்சர்களுக்கே சற்று வருத்தமாக இருந்தது என்றே சொல்லலாம். ஆனாலும், தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை நெருக்கடியில் அதுதொடர்பான அறிவை பெற்றவர் ஒருவர் நிதியமைச்சராக இருப்பதுதான் சாலச் சிறந்தது என்பதால்தான் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் விரும்பாவிடிலும், அப்பொறுப்பில் பழனிவேல் தியாகராஜனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார் என்பதே உண்மை. அது சரியான முடிவும் கூட.

அதிகரிக்கும் விமர்சனங்கள்

தற்போது நிதியமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாராஜனின் பேச்சை புதிதாக கேட்பவர்கள்தான் அவரது பேச்சில் குறைகாண்பது கண்கூடு. காரணம் கடந்த 5 ஆண்டுகளில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டிகளையும், கேள்விகளுக்கான பதில்களையும் பார்த்தவர்கள் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரானப் பிறகும் அவரது பேச்சில் சிறிதும் மாற்றம் இல்லை என்பதையும் உணர்வார்கள்.

பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய பதிலை ஆணித்தரமாக கூற வேண்டும் என்கிற நோக்கில் பல நேரங்களில் அவரது வார்த்தைகளில் வெளிப்படும் கடுமையான சொற்கள் பொதுவாக பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருவது உண்மை. அது அவரது மேனரிசமாகவே மாறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா, அதிமுக நிர்வாகிகள் என பலரும் பழனிவேல் தியாகராஜனின் பேச்சில் ஆணவமும், சகிப்புத்தன்மையற்ற, நிதானமற்ற நிலை இருப்பதாக விமர்சிப்பதும் தொடர்கிறது. தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரை பழனிவேல் தியாகராஜன் மீதான அதிருப்தி கடுமையாகியுள்ளது.

திமுக இன்றைக்கு சட்டப் பேரவையில் பல நேரங்களில் எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களுக்கு சரியான பதிலடி கொடுத்துவரும் சூழலில், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி வரிசையில் மிக மோசமான விமர்சனங்களை வைப்பவர்களுக்கு சற்று காரமான பதிலடியை தருவதற்கு பழனிவேல் தியாகராஜன் போன்றவர்களும் தேவை என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணராமல் இல்லை.

பழனிவேல் தியாகராஜனை குறி வைப்பவர்கள் பட்டியலை ஒருமுறை புரட்டிப் பார்த்தால், அவர் மீதான தாக்குதல் ஏன் இவ்வளவு தீவிரமடைந்துள்ளது என்பதை பாமரன் கூட அறிவான் என்பதே நிதர்சனம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், அமைச்சர் பழனிவேல் தியாராஜனுக்கும் கடந்த சில தினங்களாக நடைபெறும் வார்த்தைப் போர்  ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் உலா வருகின்றன.

யூகங்களை விதைக்கும் ஊடகங்கள்:

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில், கடந்த 17-ஆம் தேதி 45-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. இச்சூழலில் எழுப்பப்பட்ட விமர்சனங்கள்தான் இன்றைக்கு அவர் மீதான தாக்குதலை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஒருசில ஊடகங்களும், சார்பு நிலைக் கொண்ட ஒருசிலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை உசுப்பேற்றி, பழனிவேல் தியாகராஜனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நீக்கி விடுவார், நீக்க வேண்டும் போன்ற பிரசாரத்தையும், யூகங்களையும் தொடர்ந்து விதைக்கத் தொடங்கியுள்ளன.திமுகவின் அமைதியான, நிதானமான செயல்பாட்டை குலைப்பதற்கு இதுவே சிறந்த தருணம், அதுவும் பழனிவேல் தியாகராஜனை பதவியில் இருந்து தூக்குவதன் மூலம் இக்கணக்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையையும் அதிமுக, பாஜக உள்ளிட்டவை கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

மூத்த அமைச்சர்கள் பலரும் எதிர்தரப்பினரின் கேள்விகளுக்கு நிதானமாகவும், அமைதியாகவும் தங்களின் பதிலை தெரிவித்து வரும் சூழலில் பழனிவேல் தியாகராஜனின் அதிரடி, சில நேரங்களில் அடாவடி பதில்கள் ஆத்திரமூட்டச் செய்கின்றன என்பது உண்மைதான். இப்படியும் ஒரு ஆள் ஆளும்கட்சி தரப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயச் சூழல் இன்றைய அரசியல் நகர்வுக்கு அவசியமாகிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவ்வளவு ஒன்றும் பிரம்மாதமான பட்ஜெட்டை தரவில்லை. வெள்ளை அறிக்கை கூட ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று அவரது திறமையை எடைபோட்டு தங்களின் தனிப்பட்ட, சமூகரீதியிலான வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளும் பத்திரிகையாளர்கள், சமூக ஊடகங்களையும் பரவலாக காணமுடிகிறது.

அத்துடன், அமைச்சருக்குரிய கண்ணியம், பெருந்தன்மை, பொறுப்புடைமை, சகிப்புத் தன்மை, அரசியல் முதிர்ச்சி ஆகியன பழனிவேல் தியாகராஜனிடம் இல்லை என்ற அதிருப்தி சொந்த கட்சியில் இருந்தும் கூட வந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவரது கண்ணியமற்ற பேச்சு திமுகவை இழப்பை ஏற்படுத்தும் என மு.க.ஸ்டாலினிடம் எச்சரிக்கை விடுப்பவர்களும் இருக்கக்கூடும்.

இச்சூழலில், பழனிவேல் தியாகராஜனின் ஏகமாக விமர்சிக்கும் போக்கு, பயன்படுத்தும் ஒருசில வார்த்தைகள் பலரையும் முகம் சுழிக்க வைப்பது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு நெருக்கடியை தருவதில் வியப்பில்லை. இத்தகைய சூழலில் முதல்வர், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அழைத்து சில காலத்துக்கு பத்திரிகை, ஊடகங்களை சந்திக்க வேண்டாம். அரசு தொடர்பான தகவல்கள் தவிர பிறவற்றுக்கு பதில் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தக் கூடும். அதற்கான வாய்ப்புகளே அதிகம்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், தனக்கு கிடைத்த, யாருக்கும் எளிதில் கிடைக்காத பதவியை தன்மீதான தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்வதும், தனக்கு பதவி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாமல் இருப்பதும் புத்திசாலித்தனமாகும்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு ஒருவேளை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால், அப்போது அவரது பதவியை பறிக்கலாம் என்ற யூகங்கள் தற்போது ஊடகங்களில் கொடிக்கட்டி பறக்கின்றன. அவை வெறும் யூகங்களாகவே இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஒருவேளை அத்தகைய முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுப்பாரேயானால், அவரை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து எளிதில் வளைத்துவிடலாம் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கும், திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களும் ஏற்பட்டுவிடும் என்பதே உண்மை.