Swadesamithiran

Tamil online News – We can read in any language

திமுக-காங். கூட்டணி முறிவை விரும்புகிறாரா கே.எஸ்.அழகிரி?

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று கூறியுள்ளது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, செப்.27: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று கூறியுள்ளது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பண்பலை வானொலியில் கே.எஸ்.அழகிரி, நீட் தேர்வு விவகாரம், தமிழக ஆளுநர் நியமனம், திமுக ஆட்சி பற்றிய மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசினார்.


குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவர் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். அப்படி என்ன அவர் பேசினார்…

‘ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தான் ஜனநாயகத்தின் உண்மையான ஆணிவேர். கட்சிகளின் இமேஜை தாண்டி மக்கள் செல்வாக்கு பெற்றவர்களே இத்தேர்தலில் இங்கு வெற்றிபெற முடியும். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாமல் எந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில்லை. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட வேண்டும். இந்த தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று அவர் பேசியதுதான் இந்த அதிர்வலைக்கு காரணம்.


ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் சரியான திசையில்சென்று கொண்டிருக்கிறது. சட்டப்படி நீட் தேர்வு ரத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேசமயம் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. கல்வி தொடர்ந்து பொது பட்டியலில் இருந்தால்தான் மத்திய அரசின் நிதி உதவிகள், மாநில அரசுகளுக்கு கிட்டும் என்றும் அழகிரி கூறியுள்ளார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 23 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கூட்டணியில் காங்கிரஸுக்கான இட ஒதுக்கீடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளின்போது திமுக, தங்களை சரிவர நடத்தவில்லை என்று அப்போது கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியது அப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதேபோன்றதொரு பரபரப்பை உள்ளாட்சித் தேர்தலிலும் ஏற்படுத்தும் வகையில் அழகிரியின் பேச்சு அமைந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும், கே.எஸ். அழகிரி, தனது பேச்சின் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணியை முடிவுக்கு கொண்டு வர விரும்ப மாட்டார் என்றே அவரது கட்சியினர் கூறுகின்றனர்.