August 10, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

திமுக எம்எல்ஏக்களை ஆட்டம் காண வைத்த அமைச்சர்

சட்டப் பேரவையில் ஒரு பேச்சின் மூலம் திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் ஒரு அமைச்சர் சிறிது ஆட்டம் காண வைத்துவிட்டார்.

அந்த சுவாரஸ்ய சம்பவம் இதுதான்.

இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. முன்னதாக, சம்பிரதாய முறைப்படி ஆளுநர் ஆர். என். ரவி சட்டப் பேரவையில் புதன்கிழமை உரையாற்றினார்.

ஆளுநர் உரையை அடுத்து அண்மையில் மறைந்த சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பேரவை வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே புதன்கிழமை மாலை ஆறு மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எலஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டப் பேரவை கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,  நீட் தேர்வு, கொரோனா உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சியினர் சபையில் எழுப்பும் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்களை அளித்தது..

திமுக சட்டப் பேரவை கொறடா கோவி செழியன் வரவேற்புரையாற்றியதும், யாராவது ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மூத்த அமைச்சர்களில் ஒருவரான எ. வ. வேலு எழுந்தார்.

சில நொடிகள் அமைதி நிலவியது. ரொம்ப நாளா எனக்கு ஒரு குறை இருக்கு, அதை இன்னைக்கு சொல்லியே தீர வேண்டும் என்று அவர் பீடிகை போட்டதும், அங்கே பரபரப்பு தொற்றிக் கொண்டது. எல்லோரும் நாற்காலி முனைக்கு நகர்ந்து அவரது பேச்சை கேட்க முற்பட்டனர்.

அப்போது அமைச்சர் எ வ வேலு கொஞ்சம் கனைத்தபடியே பேசத் தொடங்கினார். கடந்த காலங்களில் ஜெயலலிதா சட்டப் பேரவைக்குள் இருந்தால், அவரது கட்சியைத் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சபையில் இருந்து எக்காரணம் கொண்டும் எழுந்து செல்ல மாட்டார்கள்.

இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகள் இருக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட அவையில் இருந்து வெளியே செல்லமாட்டார்கள்.

ஆனால்,  தற்போது முதல்வர் ஸ்டாலின் சட்டப் பேரவைக்குள் இருக்கும்போதே திமுக எம்எல்ஏக்கள் பலர் சபையை விட்டு அடிக்கடி வெளியே செல்கிறார்கள்.

பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் நேரத்தில் நமது எம்எல்ஏக்கள் இப்படி நடந்து கொள்வது கொஞ்சமும் சரியில்லை. அப்படி எழுந்துசெல்வது முதல்வருக்கு மரியாதை தருவதாக இருக்காது என்றார் அமைச்சர்.

அமைச்சருக்குத்தான் ஏதோ பிரச்னை என்று நினைத்துக் கொண்டு ஆர்வமாக காதுகளைத் தீட்டிக் கொண்டிருந்த எம்எல்ஏக்கள், தங்கள் மீது விழுந்த எதிர்பாராத கணையைக் கண்டு கொஞ்சம் ஆடிப் போய்விட்டார்கள்.

கூட்டத்தின் நிறைவில் பேசிய ஸ்டாலின்,  நான் இங்கு என்ன பேச வேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அதனை அமைச்சர் வேலு பேசிவிட்டார் என்று சொன்னதும் இன்னும் கொஞ்சம் ஆடிப் போயினர் திமுக எம்எல்ஏக்கள் என்கின்றனர் விஷயம் அறிந்த அறிவாலய சகாக்கள்.

ஒளி, ஒலி வடிவில் கேட்க…..