August 10, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை:  முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45-ஆவது ஆண்டு சென்னை புத்தகக் காட்சி புதன்கிழமை மாலை தொடங்கியது. இதை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் 6 எழுத்தாளர்களுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், 5 பேருக்கு பபாசி விருதுகளையும் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியது:

கொரோனா தொற்று பரவல் காரணமாக புத்தகக் காட்சி நடைபெறும் தேதியை ஒத்திவைக்க வேண்டியதாகிவிட்டது. இனி வருங்காலங்களில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு அதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும்.

சென்னை புத்தகக் காட்சிக்கு வழக்கமாக வழங்கப்படும் ரூ.75 லட்சத்துடன் கூடுதலாக ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1.25 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

செம்மொழி தமிழின் சிறப்புகளை உலகெங்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்தாய் வாழ்த்து மாநில பாடலாக ஆக்கப்பட்டுள்ளது. ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. அறிவுக் கோயில்களை கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் இந்த அரசு. மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படுகிறது.

இதுவரை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய 1.50 லட்சம் புத்தகங்களை, இலங்கை யாழ்ப்பாணம் நூலகம் தொடங்கி பல ஊர்களில் இயங்கும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளேன்.

நான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் இம்மாத இறுதியில் வெளியாகும். என்னுடைய 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை அதில் நான் பதிவு செய்திருக்கிறேன் என்றார் அவர்.

இந்நிகழ்வை அடுத்து வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருநை ஆற்றங்கரை நாகரிக தொல்பொருள் கண்காட்சியை திறந்து வைத்த முதல்வர், அதை பார்வையிட்டார்.