பாராட்டுக்குரிய மு.க.ஸ்டாலினின் முதல் நகர்வு

சென்னை, மே 7: இக்கட்டான சூழலில் இன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக அமைச்சரவை, தற்போதைய சூழலை மிக எளிதாகச் சந்தித்து தமிழகத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அனுபவசாலிகளைக் கொண்ட அமைச்சரவையாக, முன்னாள் மூத்த அமைச்சர்கள் பலரும் இடம்பெறும் அமைச்சரவையாக இருப்பதோடு, இந்த அமைச்சரவையில் 15 புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், தனது அமைச்சரவையில் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு அளிக்காமல் போனது தற்போதைய சூழலில் புத்திசாலித்தனமான நடவடிக்கையே. ஒருசிலர் அரசியல் வாரிசாக களம் இறக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம், கொடுத்திருக்கலாம் என கொம்பு சீவி விட்டாலும், அத்தவறை முதல்வர் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் செய்யாதது புத்திசாலித்தனமான நடவடிக்கை.

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்க வேண்டும் போன்ற கருத்துகளை சிலர் விதைப்பது நல்ல நோக்கத்துடன் அல்ல என்பதையும் மு.க.ஸ்டாலின் அறிவார். இத்தகைய கருத்துகளை வெளியிடும் நோக்கம் யாரையோ திருப்திப்படுத்த என்பதையும் அவர் அறிவார். இன்றைய சூழலில் அப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டால், எதிர்க்கட்சிகளுக்கு எத்தகைய சாதகமான அம்சத்தை உருவாக்கும் என்பதையும் அவர் அறியாதவர் அல்ல.

தற்போது கரோனா நோய்த் தொற்று மிகப்பெரிய ஆபத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி வரும் நிலையில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவர் முதல் பதவி ஏற்பதற்கு முன் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போதுமானவை அல்ல.

உடனடியாக கரோனா நோய்த் தொற்று சங்கிலி பிணைப்பை அறுத்தெரிய குறைந்தபட்சம் 10 நாள்களாவது 100 சதவீதம் அளவுக்கு பொது முடக்கம் தேவை. இதில் பொதுமக்கள், குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் என்பதில் சந்தேகமில்லை.

அப்படி பாதிக்கப்படும் மக்களுக்கு 3 வேளையும் இலவசம் அல்லது குறைந்தபட்ச கட்டண உணவை அம்மா உணவகங்கள் மூலம் வழங்குவதும் கட்டாயம்.

முந்தைய அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டமாக அம்மா உணவகங்கள் இருந்தாலும், அவை அந்தந்தப் பகுதிகளில் ஓரளவு ஏழைகளுக்கு பசியாற்றும் பணியை ஆற்றி வருவதை மறுக்கமுடியாது. அத்திட்டத்தை புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடக்கமாட்டார் என்பதை உறுதியாக நம்ப முடிகிறது.

அந்த அம்மா உணவகங்களை அரசு உணவகங்களாகவோ அல்லது அமுதசுரபி என்ற பெயரிலேயே பொதுப் பெயராக மாற்றுவதில் தவறில்லை.

அப்படி பெயர் மாற்றம் செய்யப்படும் இந்த உணவகங்களை தற்போதைய செயல்பாட்டில் இருந்து இன்னும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுப்பதோடு, கரோனா நெருக்கடிகளில் சிக்கியுள்ள ஏழை மக்களுக்கு 3 வேளையும் உணவளிக்கும் அமுதசுரபிகளாக தற்போதைய சூழலில் மாற்றுவது கட்டாயம்.

இந்த உணவகங்கள் செம்மையாக செயல்படுவதற்கும், நிதி ஆதாரங்களால் தடுமாறும் சூழலைத் தடுக்கவும், அந்தந்தப் பகுதிகளில் தன்னார்வர்கள் கொண்ட நன்கொடை அளிக்கக் கூடிய தாராள மனம் படைத்தவர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்கலாம். அப்படி அரசு உணவகங்களுக்கு நன்கொடை அளிக்கும் தொகைக்கு வருமானவரி விலக்கு அளிப்பதில் தவறில்லை. இத்தகைய உடனடி நடவடிக்கை மூலம் பெரும் தொழில் அதிபர்கள், பசிக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள் மனம் உவந்து அரசு உணவகங்களுக்கு நன்கொடை அளிப்பர்.

எதிர்ப்புகள் எழுந்தாலும் கூட, கரோனா நோய்த் தொற்று தொடர் சங்கிலியின் இணைப்பைத் துண்டித்து எறிய முதலில் இருவாரகாலமாவது முழுமையான பொது முடக்கம், போக்குவரத்து நிறுத்தம், குறைந்தபட்ச எண்ணிக்கையோடு அரசு அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை போன்ற உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

முதல்வர் பொறுப்பேற்பதற்கு முன்பே அவர் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அடியெடுத்து வைத்ததைப் பார்க்கும்போது கரோனா நோய்த் தொற்று சங்கிலி இணைப்பை நிச்சயம் அவர் விரைவில் துண்டித்து மக்களின் பாராட்டை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.