ஆட்டோ ஓட்டுநரின் சேவையை பாராட்டிய காவல் ஆணையர்

மதுரை: மதுரையில் கர்ப்பிணியை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று திரும்பிய ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்த மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, அவரின் சேவைக்கு பாராட்டு தெரிவித்தார்.

மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வருவாய் குறைந்த நிலையிலும் ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் கர்ப்பிணிகளுக்கு கட்டணமின்றி இலவசமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

அண்மையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த போது அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கட்டணம் வாங்காமல் வீடு திரும்பியுள்ளார். அப்போது மதுரை கோரிப்பாளையம் போக்குவரத்து சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் அந்த  ஆட்டோவை மடக்கி, ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி ரூ. 500 அபராதம் விதித்துள்ளனர்.

கர்ப்பிணிக்கு உதவச்சென்ற தன்னிடத்தில் போலீஸார் நடந்து கொண்ட விதத்தால், ராமகிருஷ்ணன் மனம் உடைந்து போனார். இந்த சம்பவம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த, வாட்ஸ்-அப் மூலம் விடியோ ஒன்றை வெளியிட்டார்.

வைரலான அந்த விடியோ பார்த்த மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை செல்போனில் தொடர்புகொண்டு போலீஸாரின் செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். அத்துடன் ராமகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் ரத்து செய்தார்.

பொதுமக்களிடத்தில் போலீஸார் கண்ணியத்துடனும்,  அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என போலீஸாருக்கு மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.