9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம்


சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஒருசில இடங்களில் லேசான காற்றும் வீசியது. ஒருசில இடங்களில் மழையின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மின்தடை செய்யப்பட்டது.
மயிலாபூர், மந்தைவெளி, அடையாறு, மத்திய கைலாஷ், திருவான்மியூர், கிண்டி, பெசன்ட் நகர், ஈக்காட்டுதாங்கல், வடபழனி, மூலக்கடை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, புரசைவாக்கம், மேடவாக்கம், கீழ்க்கட்டளை, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
சென்னை மயிலாப்பூரில் 4.8 செமீட்டரும், புரசைவாக்கத்தில் 3.8 செ.மீட்டரும், கிண்டியில் 3.5 செ. மீட்டரும் மழை பதிவானது.
நீலகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இது மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யக்கூடும். கோவை, மதுரை, நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.