காயத்ரி மந்த்ரம் (சூர்ய மந்த்ரம்)
வெ. நாராயணமூர்த்தி (ஆன்மிக நெறியாளர்)
காயத்ரி மந்த்ரம் என்றதும் இது ஏதோ பூஜை மந்த்ரம், பாஷை புரியாத மந்த்ரம், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் சொல்வது, என்று தவறாக நினைத்து நம்மில் பலபேர் ஒதுங்கி நிற்கிறோம். இது கடவுளைப் பற்றியோ, சடங்குகளைப் பற்றியோ அல்ல. நம்மைப் பற்றியது.
நம்மை நாமே உணர, நம் கண் முன்னே தெரியும் இந்த உலகத்தை நமக்கு உணர்ந்தும் குரு மந்த்ரம். நமக்குள்ளே மறைந்து, ஆனாலும் சதா ஸ்வயமாக ஜொலித்துக்கொண்டிருக்கும், ஒளிர்ந்துகொண்டிருக்கும் நம் ஆத்ம ஸ்வரூபமான தெய்வீக ஸூர்யனை (சாவித்ரு) நமக்கு உணர்த்தும் மந்த்ரம். இதை சாவித்ரி மந்த்ரம் என்றும் அழைப்பார்கள்.
ஒவ்வொருவரும் இதைத் தெரிந்து கொண்டு, சதா ஜபிக்கவேண்டிய முதல் மந்த்ரம்.
சக்தி வாய்ந்த இந்த மந்த்ரம் நான்கு வேதங்களின் சாராம்ஸம். இது எப்படி நமக்குக் கிடத்தது? இதன் முக்யத்வம் என்ன?
‘த்ரா’ என்றால் விடுதலை. ‘மனனாத் த்ராயதி தத் மந்த்ரா’. எதை மனதில் திரும்பத் திரும்ப சொல்லும்போது மனதை நம்மிடமிருந்து விடுவிக்கிறதோ அதுவே மந்த்ரம். ‘காயதம் த்ராயதே இதீ’. காயத்ரி மந்த்ரத்தை ஸ்ரத்தையோடு ஸ்மரணம் செய்பவர்களை அவர்களிடமிருந்து விடுவிக்கும், பண்படுத்தும் சக்தி வாய்ந்தது என்று பொருள். நம்மை உயர்நிலைப் படுத்தி நம் உண்மையான இயல்பு நிலையை(இந்த உடல், உள்ளம், எண்ணக் கலவை அல்ல நாம்) உணரச்செய்து ஆன்மீகப் பாதையில் இட்டு செல்லும் அபூர்வ சக்தி கொண்டது இந்த மந்த்ரம். இருபத்து நான்கு சப்த சொற்களைக் கொண்ட இந்த மந்த்ரம் மூன்று பதங்களை கொண்டது. இதை த்ரிபாத மந்த்ரா (அளவு) என்றும் சொல்வார்கள்.

வேதங்களுக்கெல்லாம் மாதா காயத்ரி. பிரம்மஞானத்தை, ஆத்ம தத்வத்தை உணர்விக்கும் ஆதிசக்தி. பவித்ரமான இந்த மந்த்ரத்தை தொடர்ந்து ஸ்மரணை செய்தால் நம் உள்ளுணர்வுகளையும், நமக்குள் மறைந்திருக்கும் உயர்நிலை பரிமாண தத்துவங்களை உயர்த்துவதற்கான வழி கிடைக்கும். நமது புத்தியில் ஐந்து வகையான மாற்றங்களை இந்த மந்த்ரம் தரும். அவை: ‘தீர்’ என்பது நமக்குள் இருக்கும் ஆன்மிக நாட்டம். ‘மேதா’ என்பது உயர்நிலை புத்தி, ‘பிரக்ஞா’ உயர்நிலை உள்ளுணர்வு, ‘த்ரித்தீ’ உயர்நிலை வேட்கை, ‘ஸ்மிருதி’ உயர்நிலை ஞாபக சக்தி. இந்த ஐந்து உயர்நிலை சக்திகளைக் கொண்டு நாம் தேடி அலையும் பேரமைதியையும், திருப்தியையும் நமக்குள்ளே உணரமுடியும். இதனால் நாம் சந்திக்கும் தடைகளை எளிதாகக் கடக்கமுடியும். உலகத்தை கையாளும் நம் அணுகுமுறையை பண்படுத்தி இன்னல்களை தவிர்க்கமுடியும்.
இந்த மந்த்ரம் நமக்கு எப்படிக் கிடத்தது?

கௌசிகன் ஒரு பேரரசன். தன் சேனைகளோடு ஒரு முறை காட்டுக்கு வேட்டையாட சென்றான். களைத்துபோன பரிவாரங்கள் வசிஷ்ட முனியின் ஆசிரமத்தை அடைந்தன. வசிஷ்ட முனி பிரம்மஞானி. பிரம்மரிஷி. அரசனை வரவேற்று உபசரித்தார். வந்திருந்த அனைவருக்கும் உடனடியாக அறுசுவை உணவு தருவதாகவும் சொல்லி, தன் தவ சக்தியால் பெற்றிருந்த தெய்வீக ‘காமதேனு’ பசுவின் உதவியோடு அனைவருக்கும் அறுசுவை உணவு உடனடியாக தயாரானது. ரசித்து உண்ட அரசன், ஒரு அடர்ந்த கானகத்தில், இவ்வளவு சீக்கிரத்கில் எப்படி இப்படிப்பட்ட உணவு தயாரிக்க முடிந்தது என்று முனியை வினவ, அவர் காமதேனுவைக் காட்டினார். இவ்வளவு சக்திவாய்ந்த பசு ஒரு அரசனிடம் இருந்தால் மக்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கும் என்று கருதிய கௌசிகன், அந்தப் பசுவை தன்னிடம் தந்துவிடுமாறு முனியைப் பணித்தார். இதை மறுத்த முனியோ, ‘அரசே, இது தெய்வீகம், அதை நீ அடைய வேண்டுமானால் அதற்கு நீ உன்னைத் தயார் படுத்திக்கொள்ளவேண்டும். கடுமையான தவசாதனை புரியவேண்டும்’ என்று சமாதானம் சொன்னார். கோபம் கொண்ட அரசனோ தன் சேனையை அழைத்து அந்தப் பசுவை கைப்பற்ற முயன்றபோது, முனி தன் கையில் வைத்திருந்த பிரம்மதண்டத்தை உயர்த்த சேனைகள் அனைத்தும் காணாமல் போனது. தனிமையான மன்னனுக்கு அவமானமும், கோபமும் கொழுந்து விட்டு ஏறிந்தது. பசுவையும், முனியின் அபார சக்தியையும் தன்னாலும் அடையமுடியும் என்று சவால் விட்டு, கடுமையான தவத்தில் இறங்கினான் கௌசிகன்.

எவ்வளவு காலம் தவம் இருந்தான் என்று தெரியாது. முனைப்பும், ஞானத்தை அடைய வேண்டும் என்கிற வேட்கையும் மேலோங்க, பல தடங்கல்களையும் மீறி கடும் தவம் தொடர்ந்தது. தவத்தை மெச்சிய பிரம்மதேவன் அவன் முன் தோன்றி ‘மஹரிஷி’ என்ற பட்டத்தை அளித்தார். பிரம்மரிஷி ஒருவரால் மட்டுமே ‘பிரம்மரிஷி’ பட்டம் கிடைக்கும் என்ற ரகசியத்தையும் சொன்னார் பிரம்மதேவன். ஆசை, கோபம், அகந்தை அனைத்தும் அழிந்து வசிஷ்ட முனியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் கௌசிகன். பிரம்மரிஷி பட்டத்தோடு விஸ்வாமித்ரன் (அனைத்து உலகிற்கும் நண்பன்) என்கிற பட்டத்தையும் அளித்தார் வசிஷ்டர். அதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த விஸ்வாமித்ரருக்கு புதிய உலகம் தெரிந்தது. ஞானஜோதியில் ஜொலித்தார். அவர் த்ருஷ்டியில் உதித்த முதல் மந்த்ரமே இந்த காயத்ரி மந்த்ரம்.
ஓம் பூர் புவ ஸ்வஹா (om boor bhuva swaha)
தத் சவீதூர் வரேன்யம் (thath savithoor varenyam)
பர்கோ தேவஸ்ய தீமயீ (bargo devasya dheemayee)
தியோ யோந பிரசோதயாத் (dhiyo yona prachodayaath)
ஓம் என்பது தெய்வீக நாதம். சுழலும் இந்த பிரபஞ்சத்தின் ஒலி. ஆதி ஒலி. பிரணவ மந்த்ரம். ‘ஓம் இதி ஏகாக்க்ஷரம் பிரம்ம’ (பிரம்மனைக் குறிக்கும் ஒற்றைச் சொல்). அ, உ, ம, ஹம் (அமைதி) ஆகிய நான்கு சப்தங்களின் கலவையிலிருந்து உருவாகும் ஒற்றைச் சப்தம். அ என்னும் ஒலி நம் நாபியிலிருந்து உதிக்கிறது. உ என்பது நாக்கிலிருந்து உதிக்கிறது. ம என்பது இரண்டு உதடுகளால் உதிக்கிறது.
ஆக இந்த மூன்று ஒலிகளின் கலைவேயேதான் மனிதன் உச்சரிக்கும் அனைத்து வார்தைகளின் சங்கமம். ஒளியாலும், ஒலியாலும் உதிக்கும் அதிசயம். இது பிரம்ம மந்த்ரம்.
பூர் புவா, ஸ்வஹா என்பது நம் தினம் சந்திக்கும் மூன்று விதமான அனுபவங்களை (விழித்திருக்கும் போது, கனவின் பொது, ஆழ்ந்த உறக்கநிலையில்) நமக்கு உணர்த்தும் தெய்வீக சக்தி, நம் உண்மை நிலை அது. உடல் ரீதியாக, மன ரீதியாக, எண்ணங்கள் ரீதியாக நாம் அனுபவிக்கும் அனுபவங்கள் என்று இன்னொரு பொருளும் இருக்கிறது. மூன்று காலங்கள், மூன்று பரிமாணங்கள், மூன்று சரீரங்கள், மூன்று குணங்கள், போன்றவைகளால் ஏற்படும் அனுபவங்களையும் குறிப்பதாகவும் ஏற்றுக்கொள்ளலாம்.
பூமியில் நம் வாழ்க்கைப் பயணத்துக்கேற்ற வகையில் நமக்குத் தேவையான நம்பிக்கை, தைரியம், திறமைகள் போன்ற ஆக்க சக்திகளைப் பெறுதல். மன ரீதியாக துக்கங்களைக் கடக்கும் அமைதியைப் பெறுதல், புத்தி வழியாக ஆனந்தத்தையும் அடைதல் என்பது பிரதானம்.
‘தத் ஸவிதூர் வரேன்யம்’ . இங்கே ஸவிதூர் (சவித்ரு) என்பது ஸூர்யனைக் குறிக்கும் சொல். ஸ்வயமாக, ஆத்ம ஜோதியாக நமக்குள் சதா பிரகாசித்திக்கொண்டிருக்கும் ஸூர்யன் இந்த மூன்று நிலைகளியும், மூன்று காலங்களிலும், மூன்று சரீரங்கள் வழியாக பலவிதமான அனுபவங்களை நமக்கு ஒளிர்வித்துக்கொண்டிருக்கும் ஆத்மனை, இந்த பிரம்மசக்தியை, ‘வரேன்யம்’ வணங்குகிறேன். ஆராதிக்கிறேன்.
‘பர்கோ’ என்பது அனைத்து தீமைகளையும், இன்னல்களியும் அழிக்கும் ஜோதி, ‘தேவஸ்ய’ தெய்வீகமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஜோதியை ‘தீமஹி’ எனக்கு உணர்த்து. ‘தியோ யோந பிரசோதயாத்’ இந்த தெய்வீக உண்மையை நான் உணர்வதற்கான தகுந்த புத்தியை எனக்குத் தந்து வழிநடத்து. நமக்குள்ளே நாமாகவே, ஜோதிர்லிங்கமாக மறைந்திருந்தாலும் சதா ஒளிர்ந்துகொண்டு இருக்கும் பிரம்மனை (சூர்யனை) நான் வணங்குகிறேன்.
உடல், மனம், எண்ணங்கள் ரீதியாக நான் சந்திக்கும் அனைத்து துக்கங்களையும், இன்னல்களையும் பாவங்களையும் அழித்து, நம்பிக்கையும், தைரியத்தையும், ஆற்றல்களையும் தந்து, என் அன்றாட வாழ்வில் நான் சந்திக்கும் மூன்று விதமான அனுபவங்களை எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் தெய்வீக உணர்வை, எனக்குள் சதா ஸ்வயமாக ஒளிர்ந்து நான் காணும் மூன்று லோகங்களையும் ஒளிரச் செய்யும் சூர்யஜோதியை, ஜோதிர்லிங்கத்தை உணரக்கூடிய புத்தியை எனக்குத் தா.
இதுவே இந்த மந்த்ரத்தின் தாத்பர்யம். காயத்ரி மந்த்ரத்தில் இன்னொரு நீட்டிக்கபட்ட பதிப்பும் உள்ளது. இந்த பதிப்பு பெரும்பாலும் ஸந்த்யா வந்தனத்துக்கு பயன்படுத்துவது வழக்கம்.
திருமூலர் தன் பாடல் ஒன்றில் ‘சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள, பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே’ காயத்ரியில் இருக்கும் உண்மையை புரிந்துகொண்டவனுக்கு இன்னொரு பிறவியே இல்லை, என்று காயத்ரி மந்த்ரத்தின் வலிமையை படம் பிடித்துக் காட்டுகிறார்.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைப்பற்றி அர்ஜுனனுக்கு சொல்லும்போது, ‘மந்த்ரங்களில் நான் காயத்ரி’ என்கிறார். வேத விற்பன்னர்கள் காயத்ரியை ‘குரு மந்த்ரம்’ மந்த்ரங்களின் குரு என்றும் அழைக்கிறார்கள்.
You must log in to post a comment.