15 ரயில்களில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியீடு
புதுதில்லி: தில்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கப்படவுள்ள 15 ரயில்களில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை உள்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து கடந்த ஒன்றரை மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது தில்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் செவ்வாய்க்கிழமை புறப்படுகின்றன.
தில்லியில் இருந்து டிப்ருகார்க் , அகர்தலா, ஹவுரா, பிலாஸ்பூர், பாட்னா, செகந்தராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஜம்மு தாவி, மும்பை சென்ட்ரல், மட்கான், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுககு இந்த ரயில்களுக்கான முன்பதிவு திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது.
இந்த ரயில்களில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருக்கக் கூடாது. ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். அனைத்து ரயில்களும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படும்.
இந்த ரயில்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மத்திய உள்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
இணையதளம் மூலமாக முன்பதிவு உறுதி செய்த பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பயணிகள் 90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையம் வந்து சேரவேண்டும். அனைத்துப் பயணிகளும் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவர். நோய் அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவர்.
ரயிலில் ஏறும்போதும், பயணிக்கும்போதும் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அனைத்துப் பயணிகளும் ரயிலுக்கு வரும்போதும், பயணிக்கும்போதும் முகக் கவசம் அணிய வேண்டும்.
உறுதி செய்யப்பட்ட இ- டிக்கெட்டுடன் வரும் பயணிகளும், அவர்களை அழைத்து வரும் வாகன ஓட்டிகளும் ரயில் நிலையத்திற்கு வரவும், அங்கிருந்து செல்லவும் அனுமதிக்கப்படுவர். . பயணிகள் இறங்கும் இடம் வந்ததும், அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேச சுகாதாரத் துறை நடைமுறைகளை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும். பயணிகள் தங்கள் வீட்டிலிருந்து உணவு, சொந்த பெட்ஷீட், டவல் கொண்டு வரவேண்டும்.
முன்கூட்டியே ‘பேக்’ செய்யப்பட்ட ஸ்நாக்ஸ், பிஸ்கட்ஸ் ஆகியன ரயில்வே கேட்டரிங் ஊழியரிடம் கிடைக்கும், தேவைப்படுவோர் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். ரயில் நிலையத்திலும், அனைத்து ‘கோச்’களிலும் கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர்கள் வழங்கப்படும்.
இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் ஆரோக்ய சேது ஆப் டவுண்லோடு செய்ய அறிவுறுத்தப்படுவார்கள். ஆனால் அது முன் நிபந்தனை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 15 ரயில்களுக்கும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்கவிருந்தது. 2 மணிநேரம் தாமதமாக மாலை 6 மணிக்குதான் முன்பதிவு தொடங்கியது.
You must log in to post a comment.