10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15-இல் தொடங்கும்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்த கல்வித் துறை, அத்தேர்வு ஜூன் 15 முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அத்தேர்வை ஜூன் 1 முதல் 12-ஆம் தேதி வரை நடத்த ஏற்கெனவே கல்வித் துறை முடிவு செய்து அறிவித்திருந்தது. தேர்வுக்கான முன்னேற்பாடுகளிலும் கல்வித் துறையும், தேர்வுத் துறையும் ஈடுபட்டன.
இந்நிலையில் 4-ஆம் கட்ட ஊரடங்கு வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்தது.
இந்நிலையில், முதல்வரை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து பொதுத் தேர்வு காலஅட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 ஆம் தேதிக்கு பதில் ஜூன் 15-ஆம் தேதி இத்தேர்வுகள் தொடங்கும் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அதன்படி தேர்வு நடைபெறும் விவரம்:
15-ஆம் தேதி (திங்கள்கிழமை) மொழிப் பாடம்
17-ஆம் தேதி (புதன்கிழமை) – ஆங்கிலம்
19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – கணிதம்
20-ஆம் தேதி (சனிக்கிழமை) விருப்பமொழிப் பாடம்
22-ஆம் தேதி (திங்கள்கிழமை) அறிவியல்
24-ஆம் தேதி (புதன்கிழமை) சமூக அறிவியல்
25-ஆம் தேதி (வியாழக்கிழமை) தொழில்கல்வி பாடம்
You must log in to post a comment.