10-ஆம் வகுப்பு நுழைவுச் சீட்டு நாளை முதல் விநியோகம்
சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வியாழக்கிழமை முதல் விநியோகம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்து நீடித்து வருகிறது. இதனால் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற குழப்பம் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இருந்து வந்தது.
பொதுத் தேர்வு வரும் 15-ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார்.
இந்நிலையில், இத்தேர்வை மேலும் இரு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து 10,11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் எனவும், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோ அல்லது இணைய தளத்திலோ நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
You must log in to post a comment.