10-ஆம் வகுப்பு தேர்வு: பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வை மேலும் இரண்டு மாதம் தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5-ஆவது கட்டமாக இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்த குழப்பம் மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் நீடித்து வந்தது.
இந்நிலையில், பொதுத் தேர்வு வரும் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இச்சூழலில், பத்தாம் வகுப்பு தேர்வை மேலும் இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அச்சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். வெளியூர் மாணவர்கள் பலர் தங்கள் புத்தகங்களை விடுதிகளில் விட்டுச் சென்றுள்ளனர். மாணவர்களுக்கு 15 நாள்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு இருமாதகாலம் காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதை அடுத்து இம்மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You must log in to post a comment.