ஸ்மார்ட்போன் வைரஸ்-எச்சரிக்கும் சிபிஐ
புதுதில்லி: சர்வதேச போலீஸாரின் அறிவுறுத்தலை அடுத்து செர்பெரஸ் (Cerberus) என்ற ஸ்மார்ட்போன் வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாநில போலீஸாருக்கும் மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், அரசுப் பணிகள், வர்த்தகப் பணிகள், தகவல் தொழில்நுட்ப சேவை என ஆன்லைனில் மட்டும் நடைபெறுகின்றன.
இதைப் பயன்படுத்தி கணினி வைரஸ்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளைத் திருடும் கும்பல் செயல்படுவது தெரியவந்துள்ளது. முதலில் கொரோனா வைரஸ் தொடர்பான குறுந்தகவலை ஸ்மார்ட்போனுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்தவுடன் செர்பெரஸ் வைரஸ் ஸ்மார்ட்போனில் புகுந்துவிடுகிறது. பின்னர் வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட தகவல்களைத் திருடுகின்றன.
வங்கிகளைப் போல் இருமுறை அங்கீகரிக்கும் அம்சங்களும் இந்த வைரஸ் மென்பொருளில் இருப்பதால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். எனவே குறுந்தகவலில் வரும் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என சிபிஐ எச்சரித்துள்ளது. இந்த விஷயத்தில் வங்கிகளுக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெயரில் வரும் நம்பகத்தன்மை அற்ற செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.