வ்யாத கீதை

-வெ நாராயணமூர்த்தி – ஆன்மிக நெறியாளர்

குரு குலத்தில் வேதங்கள் பயின்ற இளைஞன் கௌசிகன் ஞானத்தைத் தேடுவதில் நாட்டம் கொண்டான். துறவறம் மேற்கொள்ள நினைத்தான். வயதான பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும், அவர்களின் துக்கத்தையும் அறிவுரைகளையும், பெற்றோர்களுக்குத் தான் ஆற்றவேண்டிய கடமை, பொறுப்புகளையும் பொருட்படுத்தாது வீட்டைவிட்டு வெளியேறினான்.

அருகில் உள்ள காட்டிற்குச் சென்று தவம் மேற்கொண்டான். நாட்கள் கடந்தன. தன்னை மறந்தான், இந்த உலகை மறந்தான். ஒரு நாள் ஒரு பெரிய மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருந்தபோது அவன் தலைக்கு மேல் இருந்த ஒரு கிளையில் ஒரு கொக்கு பறந்து வந்து அமர்ந்தது. இதை கௌசிகன் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அந்தப் பறவை எச்சமிட, அது கீழே அமர்ந்திருந்த கௌசிகன் மேல் விழுந்தது. தியானம் கலைந்தது. அண்ணாந்து பார்த்த கௌசிகனுக்கு கோபம் கொப்பளித்தது. தான் எவ்வளவு பெரிய தவ வலிமைகளைப் பெற்று வருகிறேன். இந்தப் பறவை இதற்கு மரியாதை தராமல் எச்சமிடுகிறதே என்று எண்ணி உற்றுநோக்க, அந்தக் கொக்கு எரிந்து சாம்பலானாது.

கௌசிகனுக்கு ஒருபுறம் ஆச்சர்யம், பெருமிதம். தனக்கு இவ்வளவு பெரிய சக்தி கிடைத்துவிட்டதா? இன்னொரு புறம் தன் தவ வலிமையால் அந்தப் பறவைக்கு நல்ல புத்தி புகட்டியதாக கர்வம் கொண்டான்.

அந்தக் காலத்தில் தவசிகள் அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று பிட்சை எடுத்து, கிடைக்கும் உணவை உண்டு தவத்தைத் தொடருவார்களாம். கௌசிகனும் புறப்பட்டான். ஒரு வீட்டிற்கு எதிரில் நின்று, ‘பவதி, பிக்க்ஷாந்தேஹி’ என்று குரல் கொடுத்தான். சிறிது நேரத்தில் அந்த வீட்டுப் பெண்மணி ஒரு பாத்திரத்தில் அன்னம் கொண்டுவந்தாள். அந்த நேரம் பார்த்து, அந்தப் பெண்மணியின் கணவனும் களைப்புடன் வீடு திரும்பினான். உடனே பெண்மணி, ‘ஸ்வாமி சிறிது பொறுத்துக்கொள்ளுங்கள், இதோ வருகிறேன்’ என்று சொல்லி வீட்டிற்குள் அன்னத்தையும் கொண்டு சென்று விட்டாள்.

நேரம் கடந்தது. கௌசிகனுக்கோ பசி, கோபம். மீண்டும் குரல் கொடுத்தான். பதில் இல்லை. ‘இது என்ன விசித்ரம், இந்தப் பெண் என் தவ வலிமை தெரியாமல் என்னிடம் விளையாடுகிறாளே, இப்படி காக்க வைக்கிறாளே’ என்று பொருமினான்.

‘பெண்ணே அன்னம் தரப்போகிறாயா இல்லையா?’ என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டான். சிறிது காலதாமதம் ஆனது. ‘ஸ்வாமி, இதோ வந்துவிட்டேன்’, என்று அன்னம் கொண்டு வந்தாள். ‘பெண்ணே கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் இப்படி தவமுனிகளைக் காக்கவைக்கலாமா? உன்னை என்ன செய்யப்போகிறான் பார்’ என்று கண்கள் சிவக்க மிரட்டினான். அந்தப் பெண்ணோ சிறிதும் கலக்கமின்றி, ‘என்னை என்ன அந்தக் கொக்கு என்று நினைத்துக் கொண்டீரா முனிவரே. நீங்கள் பார்த்ததும் சாம்பலாக?’ என்றாள் சிரித்துக்கொண்டே.

துணுக்குற்று விழித்தான் கௌசிகன். காட்டில் நடந்தது இந்தப் பெண்ணுக்கு எப்படி தெரிந்தது? என்று ஆச்சர்யத்துடன் வாயடைத்து நின்றான்.

‘ஸ்வாமி, களைப்புடன் வீடு திருப்பிய என் கணவனுக்கு சிரமபரிகாரம் செய்வித்து அவனுக்கு உணவளித்து அவனை கவனித்துக் கொள்வது என் கடமை. குடும்பமே என் கடவுள். பக்தியுடன் நான் செய்யும் பணிவிடையே பத்தினி தர்மம். முதலில் என் கடமை, பொறுப்பு, பிறகுதான் தான தர்மம். என் கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கொஞ்சம் கால தாமதம் ஆனது. இது கூட தெரியாமல் ஞான மார்க்கத்தில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நீ இப்படி கோபப்படுவது எந்த வகையில் நியாயம்?’ என்று சமாதானம் சொன்னாள். ‘சரி பெண்ணே, நீ சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.

நான் பறவையை பஸ்பமாக்கிய சம்பவம் உனக்கு எப்படி தெரிந்தது? என்று வினவினான் கௌசிகன். ‘அது தெரிய வேண்டுமானால், அருகில் உள்ள மிதிலா நகரத்தில் வசிக்கும் தர்மவ்யாதனிடம் கேட்டுத் தெரிந்துகொள்’, என்று சொல்லியனுப்பினாள். கௌசிகனுக்கு பசி மறந்தது. கோபம் பறந்தது. ஆர்வம் மேலிட்டது. மிதிலையை நோக்கி பயணமானான்.

சில நாள்கள் பயணித்து, அந்த நகரைச் சென்று அடைந்து, தர்மவ்யாதனைப் பற்றி வினவினான். என்ன ஆச்சர்யம் அனைவருக்கும் தெரிந்த நபராக இருந்தான் தர்மவ்யாதன். ‘இந்த நகரின் ஒதுக்குப் புறமான இடத்தில் அவரின் கடை இருக்கிறது’ என்று மிகுந்த மரியாதையுடன் அடையாளம் சொன்னார்கள். ஒரு வழியாக கண்டுபிடித்து அங்கே சென்றபோது, அது கசாய் கடைகள் நிறைந்த சேரிப் பகுதி. எங்கு பார்த்தாலும் மாமிசங்கள் குவிந்து கிடந்தன. குமட்டிக்கொண்டு வந்தது கௌசிகனுக்கு. தர்மவ்யாதன் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முனியைப் பார்த்ததும் வணங்கி, ‘ஸ்வாமி, அந்தப் பத்தினி தங்களை இங்கு அனுப்பினாளா?’ என்று வினவ, கௌசிகன் மலைத்துப் போனான். ‘இது என்ன வித்தை? இது எப்படி சாத்தியம்? ஒரு சாதாரண கசாய்க்காரனுக்கு தன் கதை எப்படி தெரிகிறது?’ என்று குழம்பினான். ‘முதலில் என் வாடிக்கையாளர்களை கவனித்துவிட்டு பிறகு உங்களிடம் பேசுகிறேன். மாலை வரை காத்திருக்க முடியுமா? என்றான் தர்மவ்யாதன்.

இது என்ன புதுவகையான, தான் கேள்விப்படாத ஞானம்? ஒரு சாதாரண பெண் காட்டில் நடந்ததைச் சொல்கிறாள். இந்த கசாய்க்காரன் அவளைப் பற்றி சொல்கிறான். இதில் புதைந்துள்ள உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் விடப்போவதில்லை என்று மனதில் உறுதி கொண்டு காத்திருக்கத் தொடங்கினான். மாலை வந்தது. மீண்டும் சேரிக்கு சென்று தர்மவ்யாதனுடன் அவன் வீட்டிற்குச் சென்றான். அங்கேயும் காத்திருக்க வேண்டியிருந்தது. தர்மவ்யாதன் குளித்துவிட்டு, பூஜைக்காரியங்களை முடித்துக்கொண்டு, தன் பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, மனைவிக்கு சமையல் உதவி செய்துவிட்டு, தன் குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டே வெளியே வந்தான்.

தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முனியை அறிமுகப் படுத்தினான். அழகான, மகிழ்ச்சியான குடும்பம். அன்பும், பண்பும், அமைதியும் ததும்பும் குடும்பம். சமுதாயத்தில் மிகத்தாழ்ந்த குலமாகக் கருதப்படும் கசாய்தொழில் செய்யும் ஒருவன் குடும்பத்தில் இப்படி ஒரு தெய்வீக மகிழ்ச்சியா? கௌசிகனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.

உணவு உண்டபிறகு இருவரும் பேசத் தொடங்கினார்கள். ‘என்னைப் பற்றி முன்பின் தெரியாத உங்களுக்கு என் கதை எப்படி தெரிந்தது? அந்தப் பெண்ணைக் கேட்டால் உங்களைக் கேட்கச் சொல்கிறாள். யார் நீங்களெல்லாம்?’ என்றான் அப்பாவியாக.

முன்னொரு பிறவியில் நீங்கள் ஒரு முனியாக இருந்தபோது, நீங்கள் எனக்கும், அப்போது என் மனைவியாய் இருந்த அந்தப் பெண்ணிற்கும் இட்ட சாபத்தால் நான் இந்த குலத்தில் பிறந்தேன். இது என் கர்ம வினை. ஆனாலும் நான் முன்பிறவியில் செய்த புண்ய பலனால் நல்ல பெற்றோர்களையும், மனைவி மக்களையும் அடைந்துள்ளேன்.

மாமிச வியாபாரம் என் குலத் தொழில். நானாக விலங்குகளை அழிப்பதில்லை, நானும் என் குடும்பத்தாரும் மாமிசம் உண்ணுவதும் இல்லை. இதில் நான் தொழில் தர்மத்தை கடைபிடிக்கிறேன். யாரையும் ஏமாற்றுவத்தில்லை, அதிக லாபத்தையும் நாடுவதில்லை. சம்பாதிப்பதில் நிறைய தானம் செய்கிறேன். எப்போதும் உண்மையையே பேசுகிறேன். சதா நல்லவைகளையே நினைக்கிறேன். பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் ஒரு போதும் தவறுவதில்லை. செய்யும் தொழிலே தர்மம். என் வாடிக்கையாளர்களையும், மற்றவர்களையும் நான் கடவுளாகவேப் பார்க்கிறேன், வணங்குகிறேன். இது ஷிவோக்யான ஜீவ சேவை.

அனைத்து ஜீவன்களையும் நானாகவும், என்னுள் இருக்கும் கடவுளாகவே ஆராதிக்கிறேன். இது என் தர்மம். என் தவம். இந்த நிலையில் ஒன்றிப்போனதால் அனைத்தையும் என்னால் உணரமுடிகிறது. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் அறிய முடிகிறது. என்னைப் போலவே நீ ஏற்கெனவே பார்த்த அந்தப் பத்தினியும் இந்தப் பிறவியில் தன் குடும்பத்தில் கடைப்பிடிக்கிறாள். அதனால் அவளால் எல்லாவற்றையும் உணரமுடிகிறது. எங்கள் இருவரிடமும் நீங்கள் இந்தப் பிறவியில் தீட்க்ஷை பெறவேண்டியுள்ளது. இதுவே ஸ்வதர்மம்.

எந்தக் குலமும், எந்தப் பிறப்பும், எந்தத் தொழிலும் கொடூரமுமில்லை, அசிங்கமில்லை, நீ அணுகும் விதத்தைப் பொறுத்து அது பவித்ரமடைகிறது. நீ கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். அதுவேதான் நீ. இதை உணர்ந்தால் உலகத்தை துறக்கத் தேவையில்லை. காட்டுக்கும் போகத் தேவை இல்லை. தவமும் தேவை இல்லை, உலகைவிட்டு விலகி தேடிப் போவதல்ல ஞானம், உலகத்தையே சத்யமாக, ஞானமாக, தர்மமாக உணருவது, என்று அமைதியாக போதித்தான் தர்மவ்யாதன்.

தெளிவடைந்த கௌசிகன் தன் வீட்டிற்குத் திரும்பி, தன் பெற்றோர்களை கண்ணும் கருத்துமாய் பேணத் தொடங்கினான். கடமையையும், பொறுப்பையும் ஸ்ரத்தையோடு செய்வதே தர்மம், ஸ்வதர்மமே இறைப்பொருள், இதுவே ஞானம் என்பதை உணர்ந்தான். ஒரு வ்யாதனிடம் (கசாய்க்காரனிடம்) தான் கற்ற ஞானத்தை, தர்மவாழ்க்கைக் கல்வியை, ‘வ்யாத கீதை’ என்று பெயரிட்டு, சரித்திரத்தில் பதிவு செய்தான் என்று பின்னொரு காலத்தில் மார்க்கண்டேய முனிவர் மூத்த பாண்டவ இளவரசனான தர்மராஜனுக்கு விவரித்தாக மஹாபாரத புராணத்தில் காணப்படுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.